உள்ளூர் செய்திகள்

மண்ணைத் தோண்டும் மாணவி!

அஞ்சல்தலை, நாணயங்கள், பழமையான பொருட்களைச் சேகரிப்பது என, பல பொழுதுபோக்குகள் உள்ளன. ஆனால், 12 வயது நிரம்பிய 9ஆம் வகுப்பு படிக்கும் அஸ்வதா, புதைபடிவ மாதிரிகளைச் சேகரிப்பதில் ஆர்வம் கொண்டிருக்கிறார். இவருடைய வீட்டில் சிறிய அளவிலான அருங்காட்சியகத்தையும் அமைத்திருக்கிறார். இதில் 74 புதைபடிவ மாதிரிகள் உள்ளன. இந்த இளம் கண்டுபிடிப்பாளரைச் சந்தித்துப் பேசினோம். அவருடன் பேசியதிலிருந்து... “நான் சிறுவயதில் இருந்தே கடற்கரைக்குச் செல்வது வழக்கம். அப்போது அங்கு கிடைக்கும் கடல் சிப்பிகளைச் சேகரித்து வைத்துக் கொள்வேன். மெரீனா கடற்கரையில், மீனவர்களின் வலைகளில் சிக்கும் அரிய வகை உயிரினங்களைச் சேகரிப்பேன். அதைக் கொண்டுவந்து வீட்டில் பதப்படுத்தி வைத்துக்கொள்வேன். ஆர்வத்தைக் கவனித்த என் அப்பா, புதைபடிவப் பொருட்கள் பற்றிய புத்தகம் ஒன்றை பரிசாகக் கொடுத்தார். அதில் இருந்து பல தகவல்களைப் படித்துத் தெரிந்துகொண்டேன். இங்கிருந்து என் தேடல் தீவிரமானது. நேரடி அனுபவங்கள் கிடைக்க என் பெற்றோர், சென்னை எழும்பூர் அருங்காட்சியகம், அரியலூர் புதைபடிவ மையம் ஆகிய இடங்களைப் பார்க்க அழைத்துச் சென்றார்கள்.அப்பா, அம்மா இருவருமே இத்துறையில் எனக்கு ஏற்பட்ட இயல்பான ஆர்வத்தை மெருகேற்றினார்கள். விடுமுறை நாட்களில் நாங்கள் அனைவரும் அரியலூர் சென்று புதைபடிவங்களைக் கண்டுபிடிப்போம். அப்படித்தான் என்னிடம் 74 மாதிரிகள் சேர்ந்தன. புதை படிவங்களைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொண்டபோதே அதன் வகைகளையும் ஆராயத் தொடங்கினேன். நான் சேகரிக்கும் பொருட்கள் ஒவ்வொன்றையும் வகை, இடம் ஆகிய தகவல்களைக் குறிப்பு எடுத்து வைத்திருக்கிறேன்” என்றார் அஸ்வதா. இத்துறையில், பல பதக்கங்களை அவர் வென்றிருக்கிறார். இளம் தொல்லுயிர் ஆராய்ச்சியாளர் என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளார். தற்போது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்குச் சிறப்பு வகுப்பும் எடுத்து வருகிறார். ”யாரும் கவனிக்காமல், புதைபடிவத்துறை அழிந்து வருகிறது, அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவேன்” என்று நம்பிக்கையுடன் கூறினார் அஸ்வதா. - நீல் கமல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !