களையெடுக்கும் அம்பு
அம்பு என்றதும் வில்லில் பொருத்தப்பட்டு, வேட்டையாடவும், போர் செய்யவும் பயன்படும் அம்புதான் உங்களுக்கு முதலில் நினைவுக்கு வரும். ஆனால், இந்த அம்பு விவசாயத்தில் பயன்படுத்தப்படும் கருவி.விவசாயப் பயிர்களின் நடுவே முளைத்திருக்கும் வேண்டாத களைகளை அகற்றுவதற்குக் களையெடுத்தல் என்று பெயர். கைக்களை, கொத்துக் களை, அம்புக் களை, மண்வெட்டிக் களை என்று, அதன் முறைகளுக்கேற்ப பெயர்கள் உண்டு.கைக் களை என்றால், கைகளால் களை பிடுங்குவது. புகையிலை, கொத்துமல்லி போன்றவை பயிரிடப்பட்ட நிலங்களில் கொத்து, மண்வெட்டியால் களையெடுத்தால், பயிர்களின் வேர்கள் வெட்டுப்பட்டு விடும். எனவே, கைக்களைதான் உசிதம்.வெங்காயம் போன்ற மென்மையான தாள், பயிர்கள் பயிரிடப்பட்ட நிலத்தில், அம்புக் களை எடுப்பார்கள். கொத்தின் முன்பகுதியும், நீண்ட கூர்மையான கம்பியும் கொண்ட கருவிதான், அம்பு. மெதுவாக மண்ணைக் கீறுவதற்கு முன்பகுதியும், அருகு போன்ற பயிர்களை வேரோடு தோண்ட கூர்மையான பகுதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம். கொத்து, கீறுகோல் என இரண்டு களைக்கருவிகளுக்குப் பதிலாக ஒரே கருவியாகப் பயன்படுத்துவதுதான் அம்பு.வளர்ந்த பயிர்கள் இருக்கும் நிலத்தில், கொத்து பயன்படுத்திக் களைகளை எடுக்கலாம். நல்ல இடைவெளியில் பயிரிடப்பட்டிருக்கும் உறுதியான செடி, கொடிகளுக்கிடையே இருக்கும் களைகளை மண்வெட்டி கொண்டு அப்புறப்படுத்துவார்கள்.