சாகச சர்க்கஸ்!
நமக்குத் தெரிந்ததெல்லாம், சினிமா, டிவி... ஆனாலும், ஜெமினி சர்க்கஸ், ஜம்போ சர்க்கஸ் போன்ற பெயர்களையும் கேள்விப்படத்தான் செய்கிறோம். அபூர்வமாக இருந்தாலும்கூட, சர்க்கஸ் என்பது சாதாரணமானது அல்ல என்பது அதைப் பார்த்தவர்களுக்குத் தெரியும். இடைவிடாமல் இரண்டு மூன்று மணி நேரம், மனிதர்களும் விலங்குகளும் சாகச நிகழ்ச்சிகளை நம் கண் முன்னே நிகழ்த்திக் காட்டுவது சர்க்கஸ். இந்தக் கலை, பிலிப் ஆஸ்ட்லே என்ற ஆங்கிலேய சாகசக்காரரின் முயற்சியால் உருவானது. ஆஸ்ட்லே வாழ்ந்த காலத்தில், குதிரை ஏற்றம், நெருப்பு விளையாட்டு, மாயாஜால வித்தைகள் போன்றவை ஐரோப்பாவில் பிரபலமாக இருந்தன. ஆஸ்ட்லே, குதிரை ஏற்ற வீரர்!. தன் சாகசங்களை, பார்வையாளர்கள் வசதியாகக் கண்டுகளிப்பதற்காக என்றே வட்ட வடிவ அரங்கத்தை வடிவமைத்தவர். ஜனங்கள் சுற்றிலும் வட்டமாக அமர்ந்து ரசிக்க, நடுவே சாகசங்களை நடத்திக் காட்டும் ஆஸ்ட்லேவின் நிகழ்ச்சிகளை 'சர்க்கிள் ஷோ' - 'சர்க்கஸ்' என்று குறிப்பிட்டார்கள். காலப்போக்கில் 'சர்க்கஸ்' என்பதே, நிகழ்ச்சிக்கான பெயராகவும் மாறிவிட்டது! குதிரை ஏற்ற வித்தைகளோடு, பல்வேறு சாகசங்களையும் சேர்த்துக்கொண்டார் ஆஸ்ட்லே. கொட்டும் மழையிலும், சுட்டெரிக்கும் வெயிலிலும் நிகழ்ச்சிகளைத் தடையின்றி நடத்த, அரங்கத்தைச் சுற்றிக் கூண்டு வடிவக் கூடாரத்தைப் போட்டார். பாரிஸ் நகரத்தில் 1782ஆம் ஆண்டில், 'ஆம்ஃபிதியேட்டர் ஆங்லாய்ஸ்' (Amphitheatre Anglois) என்ற சர்க்கஸ் கம்பனியைத் தொடங்கினார். அதன் வெற்றியைத் தொடர்ந்து, சர்க்கஸ் பிரபலமான கேளிக்கைக் கலையாக உருவெடுத்தது. அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி வளர்ந்தது. யானைகளும் சிங்கங்களும் சர்க்கஸுக்குள் 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் கொண்டுவரப்பட்டன. அடுத்த கட்ட வளர்ச்சியாக சர்க்கஸ் நிறுவனங்கள், தங்களின் கூடாரங்களோடும், கலைஞர்களோடும், விலங்குப் பரிவாரங்களோடும் இடம்பெயர்ந்து ரசிகர்களைத் தேடிப் போகத் தொடங்கின. ரஷ்யா, அமெரிக்கா என்று உலகம் முழுவதும் சர்க்கஸ் கம்பனிகள் தொடங்கப்பட்டன. இந்தியாவில் 1880ஆம் ஆண்டில் 'தி கிரேட் இண்டியன் சர்க்கஸ்' தொடங்கப்பட்டது. இடையில், பிராணிகள் நலன் குறித்த விழிப்புணர்வு, 1960களுக்குப் பிறகு உலகம் முழுவதும் பரவியது. இதன் விளைவாக, சர்க்கஸில் விலங்குகளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த பல நாடுகளிலும் கடுமையான விதிகள் உருவாயின. இருந்தாலும் இன்றைக்கும் சிங்கம், புலி போன்ற வன விலங்குகள் இல்லாமல் சில சர்க்கஸ் காட்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.லண்டன் நகர சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் 'ஜோசப் கிரிமால்டி' என்பவர் வண்ணங்களை முகத்தில் பூசிக்கொண்டு, வசனம் ஏதும் பேசாமல் ரசிகர்களைச் சிரிக்க வைத்தார். காலப்போக்கில் சர்க்கஸில் கோமாளிகள் முக்கிய அங்கமாகவே மாறிப்போனார்கள்.