உள்ளூர் செய்திகள்

வெங்கியைக் கேளுங்க!

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிநெருப்பு புவிஈர்ப்பு விசையை மீறி, மேல் நோக்கி எரிவது ஏன்?மா.செவ்வந்தி, 11ஆம் வகுப்பு, தூய இருதய மரியன்னை மகளிர் மேல்நிலைப் பள்ளி, புதுச்சேரி.சூடான காற்றுக்கு அடர்த்தி குறைவு; குளிர்ச்சியான காற்றுக்கு அடர்த்தி அதிகம். வெப்பக்காற்று அடைக்கப்பட்ட கூண்டு பலூன், ஹீலியம் அடைக்கப்பட்ட பலூன் போன்றவை மேலே எழும். காற்றடைத்த பந்து நீரில் மூழ்காமல், புவி ஈர்ப்பு விசையை மீறி மிதக்கும். இதற்கெல்லாம் பொருட்களின் அடர்த்தியே காரணம். நீரைவிட காற்றடைத்த பந்தின் மொத்த அடர்த்தி குறைவு. எனவே, நீரின் மேலே பந்து மிதக்கிறது. காற்றைவிட வெப்பக்காற்று, ஹீலியம் முதலியவற்றின் அடர்த்தி குறைவு. எனவே, காற்றில் மேலே எழும்பிப் பறக்கின்றன. நெருப்பு என்பது, காற்று சேர்ந்த வெப்பமான புகைதான். அதிக சூட்டுடன் அயனி நிலையில் உள்ள ஆவிப் பொருட்களையே நெருப்புப் பிழம்பு என்கிறோம். ஆகவே, அடர்த்தி குறைவான நெருப்புப் பிழம்பும், அதிலிருந்து வரும் புகையும் புவிஈர்ப்புவிசையை மீறி மேல்நோக்கி எரிகின்றன.அரசாங்கம் தேவைக்கு அதிகமாகப் பணத்தை அச்சிட்டுக் கொண்டால், பிற நாடுகளிடம் கடன் வாங்கும் அவசியம் இருக்காது அல்லவா?ஆர்.கோகுலகிருஷ்ணன், 8ஆம் வகுப்பு, ஸ்ரீராமலிங்கர் உயர்நிலைப் பள்ளி, சுப்ரமணியபுரம், கடலூர்.எடுத்துகாட்டாக, அரிசியைக் கொடுத்து பண்டமாற்று முறையில் துணிகளை வாங்கலாம் என வைத்துக்கொள்வோம். அவற்றில், அரிசியை உணவாகவும், துணிகளை உடைகளாகவும் பயன்படுத்தலாம். அதாவது, அரிசி, துணி போன்ற பொருட்களுக்குப் பண்டமாற்று மதிப்பு, பயன் மதிப்பு என இரண்டு குணங்கள் உண்டு. ஆனால், பணத்துக்கு பண்டமாற்று மதிப்பு மட்டுமே இருக்கிறது; பயன் மதிப்பு இல்லை. எனவேதான், காகிதத்தில் அச்சடித்த பணத்தை, 'சட்டமுறை செலாவணிப் பணம்' என்பார்கள். பணத்தைக் கூடுதலாக அச்சிடுவதால், துணி, அரிசி போன்ற பயன்தரக்கூடிய பொருட்களின் உற்பத்தி அளவைக் கூட்ட முடியாது. மேலும், பணத்தின் அளவை அதிகரித்தால், சமூகத்தில் கூடுதல் பணம் இருக்குமே தவிர, அதைக் கொண்டு வாங்க முடிகிற பயன் பொருட்கள் அதே அளவுதான் இருக்கும். ஆகவே, கூடுதல் பணமும் குறைவான பயன் பொருட்களும் இருந்தால் பணவீக்கம் ஏற்படும். அதாவது பொருளின் விலை அதிகரிக்கும். எனவே, கூடுதலாகப் பணத்தை அச்சடிப்பது பொருளாதாரச் சிக்கல்களையே உருவாக்கும்.இனிப்புப் பண்டங்களில் ஒட்டப்பட்டிருக்கும் 'சில்வர் ஃபாயில்' உடலுக்குக் கேடு விளைவிக்குமா?கார்த்திக் பிரசாத், 10ஆம் வகுப்பு, எஸ்.பி.ஓ.ஏ. மேல்நிலைப் பள்ளி, கோவை.'சில்வர் ஃபாயில்' என்பது வெள்ளி ஜரிகைத் தாள். இது, சுத்த வெள்ளி உலோகத்தை 0.2 முதல் 0.8 மைக்ரான் அளவு மெலிதாக்கும்போது கிடைக்கிறது. ஒரு மைக்ரான் என்பது தலைமுடியின் தடிமனில் ஐம்பதில் ஒரு பங்கு. இதைவிட மெலிதாகச் செய்யும்போது, சுமார் ஒன்றிரண்டு அணுக்கள் அளவே வெள்ளியின் தடிமன் இருக்கும். இது, 'வராக்' (Varakh) என்ற பெயரில் ஆயுர்வேத மருத்துவம் உட்பட பல்வேறு வகைகளில் உணவாகப் பயன்படுகிறது.சிலசமயம் தங்கத்தில் கூட இவ்வாறு ஜரிகைத் தாள் செய்து பயன்படுத்துவார்கள். சுத்தமான வெள்ளி, உடலுக்குத் தீங்கு விளைவிக்காது என ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்படுகிறது. எனினும், தற்காலத்தில் கலப்பட அலுமினியத்தில் செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொழில்சார் நஞ்சு ஆய்வக மையம் நடத்திய ஓர் ஆய்வில், சுமார் 90 சதவீத மாதிரிகள் சுத்த வெள்ளியில் செய்யப்பட்டு இருப்பதாகவும், சுமார் 10 சதவீதம் கலப்பட அலுமினியம் எனவும் தெரிய வந்தது. அதன் அடிப்படையில், உணவுப் பொருட்களில் வெள்ளி ஜரிகைத் தாள் பயன்படுத்துவதை, தமிழக உணவு மற்றும் உணவு பாதுகாப்புத் துறை ஏற்பதில்லை.விலங்குகளுக்கு புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் வந்தால், அதைத் தடுக்கும் சக்தி அவற்றுக்கு உண்டா?செ.வைசாலி, 9ஆம் வகுப்பு, டி.எம்.எச்.என்.யு. வித்யாலயா மெட்ரிக் பள்ளி, தேனி.எல்லா விலங்குகளுக்கும் புற்றுநோய் வரும். புற்றுநோய் ஒருவகை மூப்பு நோய். அதாவது, வயதானவர்கள் கூடுதலாக வாழ்கிற சமூகத்தில் புற்றுநோய் விகிதம் கூடுதலாக இருக்கும். காட்டில் வாழும் விலங்குகள், தனது மூப்பு வரை வாழ்வது இல்லை. அவை வேட்டையாடப்படலாம் அல்லது விபத்தில் சிக்கலாம். இவ்வாறு மூப்படைந்து இறப்பதற்கு முன்னரே விலங்குகள் மரணம் அடைந்துவிடும். எனவே, காட்டில் வாழும் விலங்குகளின் சராசரி ஆயுள் குறைவாக இருக்கும். இதன் காரணமாக காட்டு விலங்குகளுக்கு வரும் புற்றுநோய் விகிதமும் குறைவாக இருக்கும். இதுதவிர, இயல்பாகவே சில விலங்குகளுக்குப் புற்றுநோய் தாக்கும் விகிதம் குறைவாகவே இருக்கிறது. எடுத்துக்காட்டாக, யானைகளில் வெறும் 5 சதவீதம் மட்டுமே புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றன. இதுவே, மனிதர்களில் 20 சதவீதமாக இருக்கிறது. மனிதர்களுடன் ஒப்பிடும்போது, யானைகளுக்குப் புற்றுநோய் தாக்கும் விகிதம் குறைவாக இருப்பது ஏன் என்பது, அறிவியல் உலகில் இன்னும் புதிராகவே இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !