வெங்கியை கேளுங்கள்!
மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிஇக்ளு பனி வீடுகளில் மனிதன் எப்படி வாழ முடிகிறது?ரா. தமிழமுதன், 8ஆம் வகுப்பு, அரசு நடுநிலைப்பள்ளி, அறந்தாங்கி.பனியால் கட்டிய வீடு என்றாலும், இக்ளு பனி வீடுகளில் வெளியில் இருப்பதைவிடக் குளிர் குறைவு. எல்லாம் இயற்பியல் கைங்கரியம்தான். இக்ளு பனி வீடுகள், சாதாரண பனியால் கட்டப்படுவதில்லை. அழுத்தப்பட்டு அடர்த்தி கூடுதலான பனியை, ரம்பம் கொண்டு அறுத்து, செங்கல் போல ஒன்றன் மீது ஒன்று அடுக்கிக் கட்டுகிறார்கள். அழுந்திய பனி குறை வெப்பக் கடத்தி. எனவே, வெளியே உள்ள குளிரை அது உள்ளே கடத்தாது. அதேபோல், உள்ளே மனிதர்கள் அல்லது நெருப்பு ஏற்படுத்தும் வெப்பத்தை வெளியே கசிய விடாது. மேலும் வீட்டின் உட்புறச் சுவரை, திமிங்கலத்தின் தோலால் சீல் செய்து விடுவார்கள். இதன் காரணமாகவும் வெப்பக் கடத்தல் குறையும். இக்ளு பனி வீடுகளில் பொதுவாக மூன்று அடுக்குகள் இருக்கும். கீழ் அடுக்கில் குளிர் காற்று நிரம்பி, அதிகக் குளிர் இருக்கும். பதப்படுத்த வேண்டிய பொருட்களை இங்கு வைத்து விடுவார்கள். வீட்டின் கதவும் இங்கே தான் இருக்கும். நடுப் பகுதியில்தான் நெருப்பு மூட்டப்பட்ட சமையல் அறை போன்ற பகுதிகள் இருக்கும். நெருப்பால் உருவாகும் வெப்பக் காற்றின் அடர்த்தி குறைவாக இருக்கும். எனவே, அது மேல் நோக்கிச் செல்லும். மேல்பகுதியில் மனிதர்கள் புழங்கி உறங்கும் இடம் இருக்கும். வீட்டின் கூரையில் சிறிய புகை போக்கி வைத்து உள்ளே புகை சேர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்வார்கள். இதன் காரணமாக, வெளியே குளிர் மைனஸ் 45 °C என்ற நிலையில் இருந்தாலும், உள்ளே மைனஸ் 7 °C முதல் 16 °C வரை இருக்கும். அழுந்திய பனி இந்த வெப்ப நிலையில் உருகாது. இதனால் பனி வீடு வெகுகாலம் தாக்குப் பிடிக்கும். நாம் இருமும்போது சத்தம் வருவது ஏன்?க. அழகுராஜா, 5ஆம் வகுப்பு, ஊ.ஒ.ந.பள்ளி, குல்லிசெட்டிப்பட்டி.இருமல் என்பது உள்ளபடியே தொண்டைக் குழி, காற்றை வெகுவேகமாக வெளிப்படுத்தும் செயல். தொண்டைக் குழியில் உள்ள ஏதாவது ஒரு நெருடலை அப்புறப்படுத்த இருமல் வருகிறது. தும்மல் போன்று இருமலும் ஒரு அனிச்சை செயல்தான். ஒரு குழாய் போன்ற அமைப்பில் காற்று வேகமாக நகரும்போது சப்தம் எழும் அல்லவா? அவ்வாறுதான், இருமும்போது காற்று வேகமாக நகர்ந்து சப்தம் எழுகிறது. மருதாணியை அரைத்துக் கைகளில் பூசினால் ஏன் சிவக்கிறது? இதுபோல வேறு தாவரங்கள் இருக்கிறதா?K. தமிழரசி, 8ஆம் வகுப்பு, V.E.T. வித்யா மந்திர், விழுப்புரம்.மருதாணி அல்லது மருதோன்றி செடியின் இலைகளில் இருக்கும் 'லாசோன்' எனும் வேதிப்பொருள்தான், பழுப்பு அல்லது சிவப்பு நிறத்தில் தோலில் படிந்து, கறை ஏற்படுத்துகிறது. எகிப்தில், சுமார் 6000 ஆண்டுகள் முன்பிருந்தே மருதாணி இடும் பழக்கம் இருந்துள்ளது. இலையில் இயற்கையாக உள்ள இந்த லாசோன், நைசாக அரைத்து எடுக்கும்போதுதான் வெளிப்படும். கை அல்லது உடலின் மேற்புறத் தோலில் உள்ள சிலவகை கெரட்டின் புரதத்துடன் பிணைந்து கொண்டு, நிலையாகப் படிந்துவிடும். அவ்வாறு படிய சில மணிநேரம் ஆகும். கருங்குவளை அல்லது ஆகாயத் தாமரை எனப்படும் தாவரத்திலும் இதே லாசோன் வேதிப்பொருள் உள்ளது. மருதாணி இட்ட தோலின் செல் மடிந்து நீங்கும் வரை, அந்தக் கறை போகாது. நமது மேற்புறத் தோல் செல்கள் இயற்கையாக மடிந்து, புதிதாக வளரும்போது மருதாணிக் கறை, மெல்ல மெல்ல மங்கி மறைந்து போகிறது. மேகம் எவ்வாறு மிதக்கிறது?ரா. ராணி, 5ஆம் வகுப்பு, மாநகராட்சி பள்ளி, மதுரை.திரவம் அல்லது வாயு பொருட்களில், பொதுவாகவே திணிவு அடர்த்தி (Density) அதிகமாக இருக்கும் பொருட்கள் மூழ்கும்; அடர்த்தி குறைவாக உள்ளவை மிதக்கும். நீரில் மரக்கட்டை மிதக்கிறது என்றால், மரக்கட்டையின் திணிவு, நீரைவிட குறைவு என்று பொருள். நீராவி நிரம்பிய மேகத்தின் திணிவு, காற்றின் திணிவை விடக் குறைவு என்பதால்தான் மேகம் காற்றில் மிதக்கிறது. வாகனத்தின் ஹார்ன்களால் ஒலி எவ்வாறு மாசுபடுகிறது?அ. உமா மகேஸ்வரி, 7ஆம் வகுப்பு, சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளி, தேவகோட்டை.பாதுகாப்பான ஒலி அளவு பகலில் 55 db (டெசிபல்); இரவில் 45 db மட்டுமே. என்றாலும், சராசரியாக ஒலி மாசு அளவு 65-75 db என அமைந்து விடுகிறது. 118 db ஒலி அளவில் சப்தம் இடும் கார் ஹார்ன்கள் இந்தியாவில் விற்பனையாவது சர்வ சாதாரணம். வாகனத்தின் ஹார்ன், ஒலி மாசை ஏற்படுத்தி, பல்வேறு உடல்நலக் குறைபாடுகளைத் தோற்றுவிக்கும். டில்லியில் 2011ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, பல வர்த்தக பகுதிகளில் ஒலி மாசின் அளவு 100 db அளவை தாண்டியும், குடியிருப்பு பகுதியில் 90 db யை தாண்டியும் உள்ளது என சுட்டிக்காட்டியது. பாதுகாப்பான அளவைவிட ஒலி மாசு கூடும்போது, அழுத்தம், இருதய நோய், காது கேளாமை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. ஒலி மாசு நிறைந்த பகுதியில் வாழ்பவர்களுக்கு, இயல்பைவிட 15 ஆண்டுகள் முன்பே முதுமை காரணமாக ஏற்படும் காது கேளாமை குறைபாடு ஏற்படுகிறது என இந்த ஆய்வு எச்சரிக்கிறது. தேவையற்ற இடத்தில் கூடுதல் ஒலியுடன் ஹார்ன் செய்வது பொதுநலத்துக்கு எதிரானது.