வெங்கியை கேளுங்கள்
மாணவர்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானிதலைமுடி வளர்வதுபோல, கண் இமைமுடிகளும், தோலில் உள்ள முடிகளும் ஏன் வளர்வதில்லை?செ. ஜீவா, மின்னஞ்சல்.தலை, தோல் ஆகியவற்றில், 'மயிர்க்கால் செல்' என்ற சிறப்பு செல்கள் உள்ளன. இவற்றிலிருந்து, முடி புடைத்து வெளிவருகிறது. வளர்நிலையில், புதிய செல்கள் மயிர்க்கால்களில் தோன்றி, பழைய செல்களை வெளித்தள்ளும். வளர்நிலைக்குப் பிறகு, சிறிது காலம் ஓய்வுநிலை ஏற்படும். வளர்காலம் எவ்வளவு நீண்டதாக அமைகிறதோ அதற்கு ஏற்றபடி, மயிரின் நீளம் அமையும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. தலையில் உள்ள மயிர்க்கால்களில் ஓய்வுநிலை இன்றி, சுமார் ஓராண்டு காலம் வரை, தொடர்ந்து மயிர் புடைக்கும். ஆனால், ஏனைய உடல்பகுதியில் சுமார் ஒன்று அல்லது இரண்டு மாதம் மயிர் புடைத்த பின், ஓய்வு கொள்ளும். எனவேதான், தலைமுடி நீளமாகவும், ஏனைய உடல்பகுதியில் மயிர் நீளம் குறைவாகவும் அமைகிறது.பொதுவாக, வளரிளம் பருவத்தில், ஹார்மோன்கள் செயல்பாட்டால் தூண்டப்பட்டு, முடி வேகமாக வளர்கிறது. வயது மூப்பு அடையும்போது, ஹார்மோன்களின் செயல் மாறும்; அப்போது, முடி வளர்வதும் குறைந்துபோகும்.சில விலங்குகளின் உடலில் உள்ள முடி, ஒரே நேரத்தில் ஒன்று சேர்ந்து வளர்ந்து, ஓய்வுநிலை வந்த பிறகு, சரியாக கோடையில் உதிரும். அதன் பின்னர், குளிர் காலத்தில் அடர்த்தியாக வளர்ந்து இருக்கும்.எரிவதற்கு ஆக்சிஜன் தேவை. ஆனால், விண்வெளியில் ஆக்சிஜன் இல்லாத நிலையில் சூரியன் மட்டும் எப்படி சுட்டெரிக்கிறது?எஸ்.சாதிக் ராஜா, இளநிலை இயற்பியல் முதலாண்டு, மதுரை கல்லூரி, மதுரைஎண்ணெய் விளக்கு எரிகிறது; மின்விளக்கு எரிகிறது; சூரியன் எரிகிறது. இவையெல்லாம் ஒரே நிகழ்வா? எண்ணெய் விளக்கு எரிவது; மெழுகுவர்த்தி எரிவது எல்லாம், ஆக்சிஜனேற்றம் நடைபெறும் வேதியல் வினை. இதற்கு ஆக்சிஜன் தேவை. மின்விளக்கு எரிய, ஆக்சிஜன் தேவையில்லை. ஏனெனில், இந்த 'எரிதல்' தீப்பற்றி எரிதல் இல்லை. மின்சாரத்தால் எலெக்ட்ரான்கள் தூண்டப்படும்போது, ஆற்றலை உட்கொண்டு கிளர்நிலைக்குச் செல்கிறது. பின்னர் அவை, தமது இயல்பு நிலைக்குத் திரும்பும்போது, மீதமுள்ள ஆற்றலை ஒளி உட்பட மின்காந்த அலைகளாக உமிழ்கின்றன.சூரியனில் ஏற்படும் நிகழ்வு, இவற்றுக்கு எல்லாம் மாறுபட்ட இயக்கம். இதை, அணுக்கரு பிணைவு என்பார்கள். இரண்டு, குறை நிறை தனிம அணுக்கருக்கள் ஒன்றுடன் ஒன்று பிணைந்து, புதிய அணுக்கரு உருவாகும்போது, ஆற்றல் வெளிப்படும். இவ்வாறுதான் சூரியனில் இரண்டு ஹைட்ரஜன் அணுக்கருக்கள் பிணைந்து, ஹீலியம் உருவாகிறது. இந்த வினையில் வெளிப்படும் ஆற்றலே சூரிய ஆற்றல். இவற்றை, பொதுவாக 'எரிதல்' என்று அழைத்தாலும் எல்லாம் வெவ்வேறு இயக்கங்கள். பறவைகளுக்கு முகத்தின் பக்கவாட்டில்தான் கண்கள் உள்ளன. ஆனால், அவை எப்படி நேராகப் பார்க்கின்றன? பிரமோத் வைத்யா, 6ம் வகுப்பு, எஸ்.எஸ்.வி.எம். வேர்ல்டு பள்ளி, கோவை.'கண்களில் ஏற்படும் காட்சிதான் பார்வை' என, குழப்பிக் கொள்ளக்கூடாது. கண்ணில் உள்ள விழிலென்ஸ் வழியாக கண் திரையில் விழும் பிம்பம், தலைகீழாக இருக்கும் அல்லவா! ஆனால், நாம் எதையும் தலைகீழாகக் காண்பதில்லை. காட்சி என்பது கண் திரையில் ஏற்பட்டாலும், பார்வை என்பது மூளையில் உள்ள விழியுணர்வு பகுதியில் ஏற்படுகிறது. பறவைக்குக் கண் பக்கவாட்டில் உள்ளதால், தொலைவிலிருந்து கூர்மையாகப் பார்க்கும் திறன் கூடும்.செயற்கை முத்து எவ்வாறு வளர்க்கப்படுகிறது?தி.ஸ்ருதிஸ்ரீ, 8ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, சுந்தரமுடையான்.கடல்நீரில் வாழும் சிலவகை சிப்பிகள், நன்னீரில் வாழும் சிப்பி மீன்கள் இவற்றில் இயற்கையிலேயே முத்து உருவாகிறது. செருப்புக்குள் சிக்கும் சிறு கல் காலை நெருடுவதுபோல, சிப்பிகளின் மென்மையான திசுவில் தற்செயலாக ஏதாவது வெளிப் பொருள் புகுந்தால் ஏற்படும் நெருடலை மட்டுப்படுத்த, கால்சியம் கார்பனேட் போன்ற செறிவான ஒருவகை வேதிப் பொருளை சிப்பி உமிழ்கிறது. இந்த ஒளிரும் வேதிப்பொருள், வெங்காய அடுக்கு போல ஒன்றின் மீது ஒன்றாக படிக்கிறது. இதுவே முத்து! இதையே, சிப்பியின் வாயைத் திறந்து செயற்கையில் வேறு சிப்பியின் சிறிய துண்டை உள்ளே புகுத்தினால், அந்தச் சிப்பி செயற்கை முத்தைத் தயாரிக்கும். இதுவே செயற்கை முத்து. நன்னீரில் சிப்பி ஆறு ஆண்டுகளில் முத்து தயாரிக்கும் என்றால், கடல் நீரில் ஐந்து முதல் இருபது ஆண்டுகள் ஆகும். கூடுதல் நேரம் நீரில் சிப்பி இருந்தால், முத்தின் அளவு பெரிதாகும்.