புல்லட் போல்ட்
கிரிக்கெட் விளையாட்டின் மீது அந்தச் சிறுவனுக்கு தீவிரமான வெறி இருந்தது. ஸ்டம்புகள் தெறிக்கும் அவனது மின்னல் வேகப் பந்து வீச்சைப் பார்த்து வியந்த பள்ளி ஆசிரியர், ஓட்டப்பந்தயம் நோக்கி அவனைத் திசை திருப்பினார். அதன்பிறகு அவனுடைய கால்கள் தரையில் நடக்கவில்லை; பறந்தன. அந்த 'புல்லட்' வேகத்துக்குச் சொந்தக்காரன் உசேன் போல்ட்.சிறுவயதில் 'விளையாட்டாக' ஓடத் தொடங்கிய போல்ட்டுக்கு, உள்ளூர்ப் போட்டிகளில் பரிசுப் பொருட்களும் கோப்பைகளும் குவிந்தன. 11 வயதில் தடகளத்தில் அழுத்தமாகத் தடம் பதித்தாலும், 14 வயதில் சர்வதேசப் பந்தயங்களில் கலந்துகொள்ளும்போது சிறிது தடுமாற்றம் இருந்தது.2002ம் ஆண்டு ஜமைக்காவில் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. உள்ளூரில் தோற்றுவிடுவோம் எனப் பயந்த போல்ட்டிடம், 'முடிவு எதுவாக இருந்தாலும் தைரியமா ஏத்துக்கணுமே தவிர, முயற்சி செய்யாம ஒதுங்கக் கூடாது' என தாய் ஆறுதல் சொன்னார். போல்ட்டின் மின்னல் ஓட்டங்களுக்குப் பின்னால், தாய் சொன்ன வார்த்தைகளும் ஓடி வந்தன.பீஜிங் ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை யாராலும் மறக்க முடியாது. அசுர வேகத்தில் ஓடிய போல்ட், வெறும் 9.69 விநாடிகளில் 100 மீட்டர் தூரத்தைக் கடந்து வென்றார். 100மீ, 200மீ. 4 x 100மீ. தொடர் ஓட்டம் என்று பல பிரிவுகளில் போல்ட் படைத்திருக்கும் சாதனைகளை யாரும் நெருங்க முடியாது.சிறுத்தை போல் வேகமாக ஓடுவதை ஒரு கலையாக மாற்றியது அவரது தனிச் சிறப்பு. யாராலும் எட்டிப்பிடிக்க முடியாத பல வெற்றிகளை ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப், காமன்வெல்த் என, எல்லாப் போட்டிகளிலும் ருசித்தார். பல்வேறு சாதனைகளை வரலாற்றின் பக்கங்களில் தங்க மெடல்களால் எழுதிய போல்ட், லண்டன் உலக சாம்பியன்ஷிப் 2017 போட்டியுடன் விடைபெற்றார். இந்த மின்னல் வீரனுக்கு இடது கையை வான் நோக்கி நீட்டி, வலது கையைப் பின்னால் இழுத்து அம்பு விடுவதுபோல, வெற்றிக்குறி காட்டி நாம் விடைகொடுப்போம்.சாதனைகள்9: ஒலிம்பிக் தங்கம்11: உலக சாம்பியன்ஷிப் தங்கம்1: காமன்வெல்த் தங்கம்100மீ: 9.58 நொடிகள்200மீ: 19.19 நொடிகள்4X100: 34.86 நொடிகள்44.57 கி.மீ./மணி: போல்ட் ஓடிய அதிகபட்ச வேகம்