உள்ளூர் செய்திகள்

முன்னோர்களின் நேரக் கணக்கீடு

முற்காலத்தில் காலத்தை அறிவதற்கு நம் மக்கள் என்னென்ன வழி வகைகளைப் பின்பற்றினார்கள்? இன்றுதான் கடிகாரங்கள் வந்துவிட்டன. கைக்கடிகாரம் சுவர்க்கடிகாரமும் நமக்கு நேரத்தைத் துல்லியமாக அறிவிக்கின்றன. ஆனால், இக்கருவிகள் கண்டறியப்படுவதற்கு முன்பு நாம் காலத்தை எவ்வாறு கணக்கிட்டோம் என்பதுதான் கேள்வி. கடிகாரங்கள் எல்லாருடைய பயன்பாட்டுக்கும் எட்டாத விலையுயர்ந்த பொருளாக இருக்கையில் ஊர்நடுவே ஒரு மணிக்கூண்டு கட்டி அங்கே எல்லார்க்கும் பொதுவாக ஒரு கடிகாரத்தை வைத்தார்கள். இன்று இலண்டன் மாநகரத்தில் உள்ள மணிக்கூண்டுக் கடிகாரம் முதற்கொண்டு, சென்னை நடுவண் இருப்பூர்தி நிலையத்தில் உள்ள கூண்டுக் கடிகாரம் வரை அனைத்தும் இம்முறையால் தோன்றியவை. ஈரோட்டில் மணிக்கூண்டு என்றே ஒரு பகுதி இருக்கிறது. அங்கே மும்முனைச் சாலைச் சந்திப்பில் அண்ணாந்து பார்க்கத்தக்க உயரத்தில் ஒரு மணிக்கூண்டு கட்டப்பட்டு அதில் ஒரு கடிகாரத்தைப் பொருத்தியிருக்கிறார்கள். சென்னை இராயப்பேட்டையிலும் உண்டு. இன்று அந்தப் பழங்காலக் கடிகாரங்கள் செயல்படுகின்றனவா என்பதே கேள்விக்குறிதான். அதன் பழைமை கருதி சில கடிகாரங்கள் மணிகாட்டிக்கொண்டிருக்கின்றன. பழங்காலத்தில் பகல் இரவு என்று ஒரு நாளின் இரண்டு பொழுதுகளையும் முழுமையாய் அறிந்து வாழ்வதற்குத் தடையில்லை. பகலில் சூரிய வெளிச்சம் இருக்கும். இரவில் இருளோ நிலவொளியோ இருக்கும். சூரியன் தோன்றியவுடன் மக்களின் அன்றாட வாழ்க்கை தொடங்கும். சூரியன் மறைகின்றபோது மக்கள் தமது வாழ்விடத்தை அடைந்துவிடுவார்கள். இரவில் பணியாற்றுதலோ இடம்பெயர்தலோ இல்லை. ஆனால், இரவுகளில் ஏதேனும் விழாநாள் அல்லது கொண்டாட்டம் தீமூட்டி ஆடல் பாடல்களில் ஈடுபடுவது உண்டு.அதிகாலையில் இருள்பிரியும் நேரத்தை வைகறை என்று நம் முன்னோர்கள் அழைத்தார்கள். வைகறைத் துயிலெழு என்பது வழக்கு. எத்தகைய உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாலும் வைகறை நேரத்தில் துயில் நீங்கி எழுந்துவிட வேண்டும். பறவைகள் அனைத்தும் வைகறையில் பறக்கத் தொடங்கிவிடும். சேவல் கூவத் தொடங்குவதும் வைகறையில்தான். சூரியன் வானத்தில் ஏறத்தொடங்கும் நேரம் காலை நேரமாகும். அடுத்து வருவது நண்பகல். சூரியனின் தலைக்கு மேலே நின்று சுட்டெரிக்கும் பொழுதுதான் நண்பகல். சூரியன் மேற்கு நோக்கி நகரத் தொடங்கும் பொழுது மாலை எனப்படும். மாலையில் எல்லாரும் வீடு திரும்புவார்கள். சூரியன் மறையத்தொடங்கும் அந்திப் பொழுதை “எற்படு காலை” என்று அழைத்திருக்கிறார்கள். இரவு கவிந்ததும் வானத்தில் நிலவும் உடுக்களும் தோன்றத் தொடங்கும். உடுக்கள் என்றால் நட்சத்திரங்கள். வெட்டவெளியில் படுத்தபடி இரவில் மிகுந்த நேரம் வானத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தபடியால் நம் முன்னோர்களுக்கு வானியல் அறிவும் வாய்த்தது. கோள்களின் இயக்கங்களைக் கணிக்கத் தொடங்கினார்கள். நள்ளிரவுப் பகுதியை யாமம் என்று அழைத்தார்கள். நள்ளிரவில் இவ்வுலகம் பேரமைதியில் மூழ்கிவிடும். உயிரினங்கள் பலவும் ஆழ்ந்துறங்கும்.நம் முன்னோர்கள் ஒரு நாளை இரவு பகலாகப் பிரித்துக்கொண்டு ஒவ்வொரு பொழுதுக்கும் ஒரு பெயரை வைத்து வழங்கி வாழ்ந்தார்கள். அதுதான் அவர்களுடைய நேரக் கணக்கீட்டு முறை. ஒரு நாளைச் சிறு சிறு பொழுதுகளாகப் பிரித்து அறிந்த காலக்கணக்கீடு.- மகுடேசுவரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !