உள்ளூர் செய்திகள்

தெங்கம் பழம்

உலக தேங்காய் தினம் செப்டம்பர் 2'நாய்பெற்ற தெங்கம்பழம்' என்பது பழமொழி. இந்தப் பழமொழியே தேங்காய் ஒரு பழம் என்பதை புரிய வைத்துவிடுகிறது.'நாயின் கையில் தேங்காய் அகப்பட்டால் உடைக்கவும் அறியாது உருட்டிக்கொண்டே திரியும்' என்பதே பழமொழியின் பொருள்.தேங்காய் ஆங்கிலத்தில் 'கோகநட்' (Coconut) என்று அழைக்கப்படுகிறது. முதலில் 'கோகோ' (Coco) என்றுதான் அழைக்கப்பட்டது. போர்த்துகீசிய மொழியில் 'கோகோ ' என்றால் தலை அல்லது மண்டை என்று அர்த்தம். நட் (nut) பின்னர் வந்து இணைந்து கொண்டது.தென்னை மரம் சுமாராக 30 மீட்டர் உயரம் வரை வளரும். தோப்பாக வயல்வெளிகளிலும், குடியிருப்புகளுக்கு அருகில் தனித்தனி மரங்களாகவும் வளர்க்கப்படுகிறது. மணற்பாங்கான நீர் நிறைந்த இடங்களில் தென்னை நன்கு வளரும். தேங்காய் உணவகங்களிலும், வீடுகளிலும் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.தேங்காய் முற்றுவதற்கு முன் பறிக்கப்படும் இளநீரில் வைட்டமின்கள், கனிமங்கள், புரதம் , நார்சத்துகள் நிறைந்துள்ளன. உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. தேங்காயில் இருந்து எடுக்கப்படும் பாலில் 17 சதவீதம் கொழுப்பு உள்ளது.தேங்காய் நாரில் இருந்து பிரஷ்கள், காலடி மிதிகள், கயிறுகள் தயாரிக்கப்படுகின்றன. தென்னை ஓலையில் இருந்து பாய் பின்னப்படுகிறது. அதன் குச்சிகளில் விளக்குமாறுகள் (துடைப்பம்)செய்யப்படுகின்றன. தேங்காய் ஓட்டில் அகப்பை(கரண்டி) செய்யப்படுகிறது. தேங்காய் சமய சடங்குகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. தென்னையின் பச்சை ஓலை முக்கியமான நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் சமையலுக்கும், மருத்துவப் பொருளாகவும், மேல் பூச்சாகவும் பயன்படுகிறது. தென்னை 80 க்கும் அதிகமான நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது. தேங்காய் உற்பத்தியில் பிலிப்பைன்ஸ் முதலிடம் வகிக்கிறது. இந்தோனேசியா இரண்டாமிடம். இந்தியாவிற்கு மூன்றாவது இடம். இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது.மாலத்தீவு நாட்டின் தேசிய மரமாக தென்னை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !