உள்ளூர் செய்திகள்

கடன்பட்டும் உபசரித்த மேன்மை

வறுமையின் பொருட்டு கடன் வாங்கும் சூழல் இப்போது மட்டும் அல்ல, பண்டைய சமூகத்திலும் இருந்திருக்கிறது. வறுமைக்கு பழந்தமிழில் 'ஒற்கம்' என்று பெயர். 'எருதுகா லுறாஅ திளைஞர் கொன்ற சில்விளை வரகின் புல்லென் குப்பை' என்ற புறநானூற்றுப் பாடலில் (327), தன்னிடம் தானியம் இல்லாத போதும், கடன் வாங்கி, தேடி வந்தவர்களின் பசியைப் போக்கியது கூறப்பட்டுள்ளது.நிலத்தில் வரகு சரியாக விளையவில்லை. குறைந்த அளவே விளைந்தது. அதையும் கடன் கொடுத்தவருக்குக் கொடுத்தாகிவிட்டது. மீதம் இருந்த வரகு, நாடி வந்த இல்லாதவருக்குக் கொடுத்தாகிவிட்டது. வறுமையில் வாடும் உறவினர்கள், வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு என்ன செய்வது என யோசித்து, அந்த விவசாயி, வேறொருவரிடம் சென்று, கடன் வாங்கி உறவினர்களின் பசியைப் போக்குவதுதான் இப்பாடலில் கூறப்பட்ட கருத்து.'வரகுந்தினையுமுள்ளவை யெல்லாம்' என்ற புறநானூற்றுப் பாடலில் (333), விளைந்த வரகு, விருந்தோம்பல் செய்தே காலியாகிவிட்டது. இனி என்ன செய்வது? வறுமையால் வாடுபவர்கள் வந்து நிற்கிறார்களே என யோசிக்கிறார் குடும்பத் தலைவி. பின், விதைக்காக வைத்திருந்த வரகை சமைத்துச் சோறாக்கி, வந்தவர்களின் பசியாற்றுகிறார்.விருந்தினர்களோ மற்றவர்களோ வந்து விட்டால், கடன் வாங்கியாவது விருந்தோம்பும் பண்பு, பழந்தமிழகத்தில் இருந்துள்ளதை இப்பாடல்கள் சுட்டிக் காட்டுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !