அழிவின் விளிம்பில் பாலைவன உடும்பு!
ஆங்கிலப் பெயர்:டெசர்ட் மானிடர் (Desert Monitor)அறிவியல் பெயர்: வாரனஸ் கிரிசியஸ் (Varanus griseus)காணப்படும் இடம்: இராஜஸ்தான், குஜராத், உத்தரப் பிரதேசம், டில்லி, ஹரியாணா.இந்தியாவில் உள்ள எல்லா நிலங்களிலும் உயிரினங்கள் காணப்படுகின்றன. பாலைவனங்களில் அரியவகை விலங்குகள், பறவைகளைக் காணமுடியும். அதில் மிக முக்கியமானது பாலைவன உடும்பு (Desert Monitor). பல்லிக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த உடும்பு, அருகிவரும் உயிரினங்களில் ஒன்று.இது தன்னுடைய பின்னங்கால்களால் நின்றபடி சுற்றுப்புறத்தைக் கண்காணிக்கும். அதனால்தான் 'மானிட்டர்' என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் மூன்று இனங்கள் காணப்படுகின்றன. இது ஒரு மீட்டருக்கு குறைவான நீளத்துடன் காணப்படும். இதன் உடலிலும், வாலிலும் பட்டைகள் காணப்படுகின்றன. மெல்லிய அரக்கு மற்றும் மஞ்சள் கலந்த நிறத்தில் காணப்படும். பெரும்பாலும் இவை முதுகு எலும்பு இல்லாத உயிரினங்களை உண்ணும். பாலைவன உடும்புகள், பாலைவனங்களை ஒட்டியுள்ள இடங்களில் மட்டுமே வாழும். இவற்றின் வாழ்விடம் குறைந்த பரப்பளவு என்பதால், குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே காணப்படுகின்றன. தற்போது வனவிலங்கு பாதுகாப்பு மையம் நடத்திய கணக்கெடுப்பில், மொத்தமே 200க்கும் குறைவான பாலைவன உடும்புகள் மட்டுமே இருக்கின்றன. இதற்கு வாழிடம் அழிக்கப்பட்டதே முதன்மையான காரணம். நகரமயமாக்கல் மற்றும் விவசாய நிலங்களின் பரப்பு அதிகரித்தல் போன்றவற்றால், பாலைவன உடும்புகளின் வாழ்விடம் சுருங்கிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி, தோலுக்காகவும் மனிதர்கள் இதை வேட்டையாடுகிறார்கள். - காரா