பண்பாட்டை வளர்ப்பதே கல்வி!
கவனம்:தன்னம்பிக்கையற்ற கல்வி'பள்ளிக்குள் நுழைந்து சக மாணவர்களைத் துப்பாக்கியால் சுட்ட மாணவன் கைது. மது போதையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் இடைநீக்கம். தேர்வு முடிவுகளைப் பார்த்து மாணவர்கள் தற்கொலை முடிவு எடுக்க வேண்டாம். உளவியல் உதவிக்கு இலவச தொலைபேசி எண்கள்' இவையெல்லாம் அவ்வப்போது வரும் பத்திரிகைச் செய்திகள்.இவை தன்னம்பிக்கையற்ற கல்விமுறையின் சாராம்சம். காந்தியச் சிந்தனைப்படி, கல்வி என்பது கற்றுக்கொள்ளும் மாணவர்களின் நம்பிக்கை மற்றும் பண்பாடு சார்ந்து இருக்க வேண்டும். அறத்துடன் கூடிய தன்னம்பிக்கையை வழங்க வேண்டும். ஆங்கிலேயர் உருவாக்கிய கல்விமுறையில், அறிவியலுக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் பண்பாட்டுக்குத் தரப்படவில்லை என்றார் காந்தி. “பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட கல்விதான் தனிமனித நல்லியல்புகளை வளர்க்கும். பண்பாடுடன் கூடிய கல்வியில்தான், தனிமனிதன் தன் வரலாற்றைத் தெரிந்துகொள்ள இயலும். பண்பாடற்ற கல்வி பாவமான ஒன்று” என பேசினார்.நம்பிக்கையை வளர்ப்பதற்கு நேர்மறையான சூழலை உருவாக்க வேண்டும். பண்பாடு என்பது குடும்பத்தில் இருந்து தொடங்குவது. பெற்றோர்கள் தங்கள் மனத்தாலும் செயல்களாலும் மேன்மையைப் பின்பற்ற வேண்டும். பண்பாடு என்பது வெறும் சடங்குகளிலோ சம்பிரதாயங்களிலோ இல்லை.அது வாழ்க்கை முறையில் இருக்கிறது. குடும்பத்தில் இருந்தே கல்விமுறை தொடங்குகிறது. அதை நம் பெற்றோர் உணர்ந்துகொள்ள வேண்டும்.