வலி மிகுதல்-14 : விளித்தொடருக்கு வலி மிகாது
சொற்றொடர்களின் ஒவ்வொரு வகையாக எடுத்துக்கொண்டு அதற்கு வலி மிகுமா மிகாதா என்று பார்க்கப் போகிறோம். முதலில் நாம் எடுத்துக்கொள்வது சொற்றொடர்களின் முதல் வகைமையான எழுவாய்த் தொடரை.எழுவாய்த் தொடர் என்பது முதலில் ஒரு எழுவாயும் அடுத்து ஒரு பயனிலையுமாக அமையும். எழுவாய் என்பது பெயர்ச்சொல். பயனிலை என்பது அந்தப் பெயர்ச்சொல்லுக்குரிய தொழிலை உணர்த்தும் வினைச்சொல்.பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் அடுத்தடுத்து வருவது எழுவாய்த் தொடர் எனப்படும். ஒரு வாக்கியத்தில் முதலில் இடம்பெறும் பெயர்ச்சொல்லை எழுவாய் என்று சொல்வதுண்டு. அதனால்தான் பெயர்ச்சொல்லில் தொடங்கும் தொடருக்கு எழுவாய்த் தொடர் என்ற பெயர் வந்தது.முத்து கத்தினான்வள்ளி சிரித்தாள்குழந்தை குழறியதுகாடு செழித்ததுபருந்து பறக்கும்மேற்காணும் தொடர்களைப் பாருங்கள். முத்து, வள்ளி, குழந்தை, காடு, பருந்து என்று பெயர்ச்சொற்கள் முதலில் வந்தன. அவை யாவும் அத்தொடரின் எழுவாய்கள். அடுத்து வந்த சொற்கள் எழுவாய்கள் செய்த தொழிலைக் குறித்தன. எழுவாயும் (பெயர்ச்சொல்லும்) பயனிலையும் (வினைச்சொல்லும்) அடுத்தடுத்து வருவது எழுவாய்த் தொடர் எனப்படும்.எழுவாய்த் தொடருக்கு வலி மிகாது. 'கொக்குப் பறந்தது' என்று செய்யுட்களில் அரிதாக, வன் தொடர்க் குற்றியலுகரத்தில் முடியும் பெயர்ச்சொல் வந்தால் எழுவாய்த் தொடருக்கும் வலி மிகும். அதனை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை.இப்போது மிகப் பொதுவான உண்மையொன்றையும் தெரிந்துகொள்ளுங்கள். எழுவாய்த் தொடருக்கு மட்டுமல்ல, வேறு எந்தத் தொடருக்குமே வலி மிகாது. ஒரு தொடரில் வலிமிகுவதற்கு வேறு சில நிலைமைகளும் சேர்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் அச்சொற்றொடர் உரிய பொருள் தரும். அவற்றைப் பிறகு பார்க்கப் போகிறோம். எழுவாயை அடுத்து வரும் வினைச்சொல் இவ்வாறுதான் வருமா? கீழ்க்காணும் தொடர்களைப் பாருங்கள்.வள்ளி சிரிஅம்மா சோறூட்டுதம்பி பார்முதலில் ஒரு பெயர்ச்சொல் வந்தது. அடுத்து கட்டளைப்பொருள் தரும் வினைச்சொல் வந்தது. எழுவாய்த் தொடரில் வந்ததைப்போல வினைமுற்றாக வரவில்லை. ஒரு பெயரை அழைத்து ஏவுகின்ற தொடராக இவை இருக்கின்றன. வள்ளி, அம்மா, தம்பி என்று விளிப்பதால் இவற்றை விளித்தொடர் என்கிறோம். விளித்தொடருக்கும் வலி மிகாது. 'முத்து பாடு' என்று வன் தொடர்க்குற்றியலுகரத்தில் முடியும் பெயர்ச்சொல்லே ஆயினும் விளித்தொடருக்கு வலி மிகாது. எழுவாய்த் தொடருக்கும் (வள்ளி சிரித்தாள்) விளித்தொடருக்கும் (வள்ளி சிரி) வலி மிகாது என்று நினைவில் கொள்க. - மகுடேசுவரன்