விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர்
ராகேஷ் சர்மாபிறந்த நாள்: ஜனவரி 13, 1949பிறந்த ஊர்: பாட்டியாலா, பஞ்சாப்.சாதனை: விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியர்.“விண்வெளியில் இருந்து பார்க்க, இந்தியா எப்படி இருக்கிறது?” என அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தொலைபேசியில் கேட்டார். அதற்கு 'சாரே ஜஹான் சே அச்சா' (உலகில் உள்ளவற்றிலே மிக அழகானது நம் இந்தியா) என்று விண்ணிலிருந்து பதில் சொன்னார், ராகேஷ் சர்மா. இந்தியர் ஒருவர் விண்வெளியிலிருந்து முதன்முறையாகப் பேசும் சரித்திர நிகழ்வை தொலைக்காட்சியில் பார்த்த இந்தியர்கள் மெய்சிலிர்த்தனர். ஆறு வயதில் இந்திய விமானப்படைக் கண்காட்சியில் விமானங்களைப் பார்த்தபோது, இவருக்கும் பறக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. பள்ளிப் படிப்பை முடித்து, 1966ல் தேசிய ராணுவப் பள்ளியில் விமானப் படைப் பிரிவில் சேர்ந்தார். 1970ல் விமானம் ஓட்டும் பயிற்சியை முடித்து, இந்திய விமானப் படையில் பயிற்சி விமானியாக, 'மிக்' ரக போர் விமானத்தில் பறப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தது. விமானியாக இருந்தபோது, அவருடைய செயல்பாடு சிறப்பாக இருந்ததால், விண்வெளியில் பயணம் செய்ய, இந்தியா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்றரை ஆண்டுகள் பயிற்சிக்குப் பிறகு, 1984 ஏப்ரல் 2ல் வரலாற்றில் இடம்பெற்ற விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். ரஷ்ய விண்வெளி வீரர்கள் இருவருடன், சோயுஸ் டி 11 விண்கலத்தில் பயணித்தார். சல்யூட் 7 என்னும் விண்வெளி மையத்தில் எட்டு நாட்கள் தங்கி, பல அறிவியல் ஆராய்ச்சிகளை குழுவுடன் மேற்கொண்டார். இமயமலையில் நீர்மின் நிலையம் அமைக்கத் தேவையான விண்வெளிப் படங்கள் எடுக்கும் பணியை, சிறப்பாகச் செய்து முடித்தார். வெற்றிகரமாக பூமி திரும்பிய ராகேஷ் சர்மாவுக்கு, இந்திய அரசின் 'அசோக சக்ரா' விருதும், சோவியத் ரஷ்யாவின் 'நாயகன்' விருதும் வழங்கப்பட்டன.