உள்ளூர் செய்திகள்

கவனத்தைக் குவிக்கணும்!

கற்றலை எளிமையாக்க தற்போது பல உத்திகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதேசமயம் மாணவர்களிடம் மனஅழுத்தமும், கவனச்சிதறலும் அதிகரித்து வருவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். மாணவர்களுக்கு மனஅழுத்தம், கவனச்சிதறல் ஏன் ஏற்படுகிறது? அதற்கான தீர்வுகள் என்ன? என்பதைக் குறித்து மருத்துவரும், மனநல ஆலோசகருமான டாக்டர் வி.தேவகியுடன் சென்னை, கோபாலபுரம், கணபதி ஐயர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்துரையாடினார்கள். டாக்டர் வி.தேவகி: படிப்புக்கு முக்கியமான தேவை கான்சென்ட்ரேஷன்தான். இன்னைக்கு குடும்பச்சூழல், ஊடகங்கள், செல்போன் இப்படிப் பல விஷயங்கள் மாணவர்களோட கவனச்சிதறலுக்கு காரணமாக இருக்கு. நாம அன்றாடம் செய்யற விஷயங்களை ஞாபகம் வெச்சு செய்யறதில்ல. இதெல்லாம் நம்ம மூளையில பதிவாயிருக்கு. செய்யறோம். ஆனா படிக்கும்போது அதை ஞாபகம் வெச்சுகறதும், படிக்க முடியாம மனஅழுத்தத்துக்கு ஆளாகறதும் ஏற்படுது. ஏன் இந்தப் பிரச்னை? இதுக்குத் தீர்வுகள் என்னன்னு பார்க்கலாம். முதல்ல உங்களுக்கு என்ன காரணங்களால மனஅழுத்தம், கவனச்சிதறல் ஏற்படுதுன்னு சொல்லுங்க.மு.தபசும் பாத்திமா, 7ஆம் வகுப்பு: டீச்சர் சொல்லித் தரும்போது புரியற பாடம் வீட்டுக்குப் போய் படிக்கும்போது புரியாம இருக்கு. இதனால ஸ்ட்ரெஸ் ஆகுது. அதிக நேரம் எடுத்துப் படிச்சாதான் பாடங்கள் மனசில பதியுது. அதிக நேரம் ஒரே பாடத்தை படிப்பதால சோர்வு ஏற்படுது. சீக்கிரமே டயர்ட் ஆகிடறேன்.அ.தஸ்லின் பர்வீன், 7ஆம் வகுப்பு: தேர்வு நேரத்துல எல்லாப் பாடங்களையும் ஒரே நேரத்துல படிக்கும்போது டென்ஷன் ஆகுது. நல்லா படிச்சுப் புரிஞ்சுகிட்ட பாடங்கள் கூட தேர்வு அப்போ நினைவுக்கு வராம போயிடுது. அதேபோல படிக்கும்போது வீட்டுல எதாவது வேலை செய்யச் சொன்னாங்கன்னாலும் மன அழுத்தம் ஏற்படுது.கா.கா.முகமது ஷரிஃபா, 8ஆம் வகுப்பு: கிளாஸ் நடக்கும்போதே குறிப்பு எடுத்துக்குவேன். வீட்டுக்குப் போன பிறகு அந்தக் குறிப்பை வெச்சுக்கிட்டு படிச்சா பாடங்கள் ஈசியா புரியுது. வீட்டுல எதாவது பிரச்னைன்னா கவனம் சிதறும். பரீட்சை நேரத்துல மட்டும் கொஞ்சம் டென்ஷனா இருக்கும். அ.மகாலஷ்மி, 6ஆம் வகுப்பு: எனக்கு போன், டிவி போன்ற விஷயங்களால கவனம் சிதறுது. அதிகமான நேரம் படிச்சாதான் பாடங்களைப் புரிஞ்சுக்க முடியுது. ஞாபக சக்தி குறைவா இருக்கறதா நினைச்சு மனஅழுத்தம் ஏற்படுது. ஆனா படிப்புதான் முக்கியம்ங்கறதால நான் கூடுமான வரை டிவி, போன் இதெல்லாம் தவிர்க்கறேன்.ப.தேவிகா, 10ஆம் வகுப்பு: எனக்கு படிக்கறப்ப சுத்தி நடக்கற விஷயங்களால கவனம் சிதறுது. உதாரணத்துக்கு சொல்லணும்னா படிக்கறப்ப சமையல் அறையிலயிருந்து வர்ற வாசனை, டிவி, வாகனங்களின் சத்தம் இதெல்லாம் டிஸ்டபர்ன்சா இருக்கு. அதனால கான்சென்ட்ரேஷன் போகுது.க.லீ.மோனிகா ராஜம், 8ஆம் வகுப்பு: படிப்புதான் எனக்கு முக்கியம்னு நினைக்கறேன். எப்பவெல்லாம் எனக்கு கவனச்சிதறல் ஏற்படறது போல இருக்கோ அப்போ எல்லாம் புத்தகத்தை மூடி வெச்சுட்டு சில நிமிடம் தியானம் செய்வேன். அப்புறம் மறுபடி படிக்கும்போது புத்துணர்ச்சியா இருக்கும். படிச்சது எல்லாம் நல்லா நினைவில இருக்கும்.ஜ.ரா.அகிலா, 8ஆம் வகுப்பு: அமைதியா இருக்கற இடத்துல படிச்சாதான் எனக்கு நல்லா படிக்க முடியும். அப்படி இல்லாத இடத்துல படிக்க முடியறதில்ல. அதேபோல குருப் ஸ்டடி பண்றது எனக்குப் பிடிக்கும். படிச்சதை மாத்தி மாத்தி ஒப்பிச்சுக்குவோம். எழுதிப் பார்ப்போம். எங்க ஸ்கூல்ல வாரத்தில ஒருநாள் யோகா சொல்லித் தர்றாங்க. அது எனக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கு.கோ.கோமதி, 9ஆம் வகுப்பு: ஸ்கூல்ல நிறைய கத்துத் தர்றாங்க. அடுத்தடுத்து வேறவேற பாடங்கள், டெஸ்ட்டுன்னு வரும்போது அது மனஅழுத்தம் ஏற்படுத்துது. கவனச்சிதறல் கிளாஸ்ல அதிகம் ஏற்படறது இல்ல. வீட்டுச் சூழல்லதான் கவனம் சிதறுவதற்கான பல விஷயங்கள் இருக்கு. படிக்கறப்ப டிவி ஓடினா அதைப் பார்க்கத் தோணும். அதனால சிலநேரம் வீட்டுப்பாடம் செய்ய முடியாமலும் படிக்க முடியாமலும் ஆகுது.டாக்டர் வி.தேவகி: நம்மோட ஞாபக சக்தியை ரீசன்ட் மெமரி, ரிமோட் மெரி இப்படி ரெண்டு விதமா பிரிக்கலாம். இன்னைக்கு காலையில என்ன சாப்பிட்டோம்னு நமக்கு நினைவு இருக்கும். இது ரீசன்ட் மெமரி. ஒரு மாசத்துக்கு முன்னே காலையில என்ன சாப்பிட்டோம்னு நமக்கு நினைவு இருக்காது. ஆனா போன வருஷம் பிறந்த நாள் அன்னைக்கு என்ன ஸ்வீட் சாப்பிட்டோம்னு சரியாச் சொல்லமுடியும். இது ரிமோட் மெமரி. முக்கியமான விஷயங்களை ரிமோட் மெமரி சரியா பதிய வெச்சுக்குது. அதனால படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படிச்சா ரிமோட் மெமரியில நிச்சயம் பதிவாகும். மனஅழுத்தம், கவனச்சிதறல் ஏற்படாம இருக்க ஃபோகஸ்டு ரீடிங் முக்கியம். படிக்கறதுக்கும் கத்துக்கறதுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிஞ்சுக்கணும். பாடங்களை வெறுமனே படிச்சு மனப்பாடம் பண்ணாம அதைப் புரிஞ்சுகிட்டு படிச்சா ஈசியா இருக்கும். தொடர்ந்து பயிற்சி செஞ்சா ஞாபக சக்தியை வளர்த்துக்க முடியும். கவனச்சிதறல் ஏற்படாது. ஸ்கூல்ல இருந்து வீட்டுக்குப் போனதும் கொஞ்ச நேரம் அமைதியா பிடிச்ச விஷயங்களை செய்யலாம். வரையறது, இசை கேக்கறது, தியானம், யோகா பண்றது, விளையாடறது இதெல்லாம் மூளையை உற்சாகமாக்கும். படிக்கற போது எந்த டென்ஷனும் இல்லாம படிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !