உள்ளூர் செய்திகள்

லண்டனிலிருந்து இந்தியாவுக்கு...

உ.பி. மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ளது பகுவார் கிராமம். நக்சல்பாரி தீவிரவாத பிரச்னை காரணமாக கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின்னடைவைச் சந்தித்துள்ள இப்பகுதியில், வியத்தகு சீர்திருத்தங்களைச் செய்து வருகிறார் அசிஷ் திவாரி. ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், சமீபத்தில், அங்குள்ள அரசுப் பள்ளிக்கூடத்தை புத்தம்புது பொலிவுடன் மாற்றியமைத்துள்ளார். தந்தையர் தினத்தன்று திறந்துவைக்கப்பட்டுள்ள இப்பள்ளிக்கூடம், மாணவர்களின் விருப்பத்துக்குரிய இடமாக மாறியுள்ளது.'பள்ளிச்சுவர்களிலும் வகுப்பறைகளிலும் பளிச்சென்ற வண்ணங்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. பள்ளிக்கூடத்தின் முகப்பு, பேருந்து வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. வகுப்பறைக்குள் மேஜை, இருக்கைகள் புதிதாக மாற்றப்பட்டு, கணினி, புரெஜக்டர் உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாழடைந்திருந்த பள்ளிக்கூடம், உற்சாகமூட்டும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. இது, மாணவர்களுக்கு கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்த நிச்சயம் உதவும்.' என்கிறார் சோமலாதேவி, பள்ளி மாணவனின் தாய். 'என் கணவர் உட்பட இவ்வூரில் உள்ள பல ஆண்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள். அவர்கள் நக்சல்பாரி இயக்கங்களில் தொடர்பு உள்ளவர்கள். அவர்களின் குழப்பத்தால் எங்கள் பகுதியின் வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதிலும் அவர்கள் தடை ஏற்படுத்துகின்றனர். இதனால், பிள்ளைகளின் கல்வி பாழாகிறது. இந்நிலையை மாற்ற, எங்கள் ஊர் பெண்கள், குழுவாகச் சேர்ந்து நேரடியாக ஆண்களிடம் சென்று, குடிப்பழக்கத்தின் பாதிப்பு குறித்தும், கல்வியின் முக்கியத்துவம் பற்றியும் பேசுகிறோம். ஏராளமான அச்சுறுத்தல்கள் வந்தாலும் அஞ்சாமல் தொடர்ந்து இயங்கிவருகிறோம். தற்காப்புக்கலையில் பயிற்சி எடுத்துள்ளோம்.' என்று தெரிவிக்கின்றார் ஜான்சி, மகளிர் பசும்படையில் உள்ளவர்.'பெண்களின் முன்னேற்றமே கிராமத்தின் முன்னேற்றம்-. பச்சைச் சேலையை அடையாளமாய் கொண்ட பசும்படையின் முக்கியப் பணி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் அரசு நிர்வாகத்துக்கு உதவுவதும், மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்வதும் ஆகும். போதைப்பொருள், சூதாட்டம் மற்றும் குற்றச்சம்பவங்களைத் தடுப்பதில் பசும்படை பெண்களின் பங்கு அபாரமாக உள்ளது.' என்கிறார் அசிஷ் திவாரி. அசிஷ் திவாரி நேரடியாக அரசுப் பணிக்கு வந்தவர் அல்ல. கான்பூர் ஐ.ஐ.டி.யில் படித்த அவர், லண்டனில் மாதம் 10 லட்சம் ரூபாய்க்கு வங்கித்துறையில் வேலை பார்த்து வந்தவர். எனினும், தாய்நாட்டுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற அவரது ஆர்வம், இந்தியாவுக்கு மீண்டும் அவரை இழுத்து வந்தது. இரண்டு முறை முயன்று இந்தியக் குடிமைப் பணி தேர்வில் வெற்றிபெற்று, தற்போது ஐ.பி.எஸ். அதிகாரியாக வீறுநடை போட்டு வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !