வரலாற்று வாசல்
அரச குலத்தில் பிறந்த, அரசர்களுக்கு நெருக்கமாக இருந்த சிலரைப் பற்றிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்புகளைக்கொண்டு, அவர்கள் யார் என்று கண்டுபிடிக்கவும். பின்குறிப்பு: இவர்கள் நாயன்மார்கள் வரிசையிலும் வருகிறார்கள்.1.சமண சமயத்தைச் சேர்ந்த பாண்டிய மன்னர் இவர். உடல் நிலை சரியில்லாதபோது, திருஞானசம்பந்தர் இவரின் காய்ச்சலைக் குணப்படுத்த, இவர் சைவத்துக்கு மாறினார். இவரின் முதுகு வளைந்து இருந்து, பின்னர் சரியானது. இந்த மன்னரின் பெயர் என்ன?2. கோயிலில் பூசைக்காக வைத்திருந்த மலர்களை அரசியார் எடுத்து மோந்து விட்டார். இதைக்கண்ட செருந்துணையார், அரசியின் மூக்கை அறுத்துவிட்டார். அரசியின் அலறல் சத்தம் கேட்டு வந்த மன்னர், காரணம் வினவ, செருந்துணையார் சொல்ல, பூவை எடுத்த கரங்களை அல்லவா முதலில் வெட்ட வேண்டும் என்று அரசியின் கரங்களை வெட்டினார். தெள்ளாறு போரில் பாண்டியர்களையும் சோழர்களையும் விரட்டியடித்த இந்த பல்லவ மன்னர் யார்?3. சேர அரசர். யானை மீது அமர்ந்து வீதி உலா சென்றபோது, ஒருவர் உவர்மண்ணைச் சுமந்து சென்றார். மழையில் உவர்மண் கரைந்து உடல் முழுவதும் திருநீறு போல் இருந்ததால், மன்னர் யானையின் மீதிருந்து இறங்கி, அவரை வணங்கினார். இவரின் பெயரில் சேர நாணயங்களும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இந்தச் சேர மன்னரின் பெயர் என்ன?4. சோழர் மரபில் வந்தவர். கரூவூரில் தங்கி, கப்பம் செலுத்தாத அதியமான் மீது படையை அனுப்பினார். படையினர் நிதிகுவியல்களின் நடுவிலே ஒரு திருநீறு அணிந்த தலையையும் கொய்து கொண்டுவர, அதுகண்டு மனம் திருந்தி தீயில் புகுந்தார் இம்மன்னர். இந்த மன்னரின் பெயர் என்ன?5. சிவந்த கண்களைக் கொண்ட சோழ அரசரான இவருக்கும், சேர அரசர் கணைக்கால் இரும்பொறைக்கும் திருப்போர்ப்புறம் என்னும் இடத்தில் போர் நடந்தது. போரில் கணைக்கால் தோற்க, அவரைக் குடவாயிலில் (கும்பகோணம்) சிறைவைத்தார். கணைக்கால் சிறையில் இருந்தபோது காவலர்களிடம் நீர்கேட்க, காவலர் தாமதமாகக் கொண்டு வந்து கொடுத்ததால், மானம் கருதி உயிர் நீத்தார் கணைக்கால். இந்தச் சோழ அரசரின் பெயர் என்ன?விடை: 1. சீர்நெடுமாறன், 2. மூன்றாம் நந்திவர்மன், 3. மாக்கோதை, 4. புகழ்ச்சோழர், 5. கோச்செங்கணான்,