உள்ளூர் செய்திகள்

சந்தைக்குப் போயிருக்கீங்களா?

சந்தையை ஒரு ரவுண்டு அடித்தால், விதவிதமான பேச்சுகளைக் கேட்கலாம். வெவ்வேறு மனிதர்கள் வந்துகூடும் இடம் என்பதால், சுவைக்குப் பஞ்சம் இருக்காது.“ஏய் வெள்ளப் பூசணிக்கா, சக்கரப் பூசணிக்கா…”“ஏ சுண்டைக்கா, சுண்டை வத்தல்…” இவர்கள் இருவரும் ஏட்டிக்குப் போட்டி பேசவில்லை. அவரவர் விற்பது அந்த மாதிரி. “வாழக்கா… வாழக்கா…” என்று ஒரு பெண் கூவுகிறார். பக்கத்திலேயே மற்றொருவர், அதற்கு எதிர்ப்பதமாக, “வாழல்லே… வாழல்லே…” என்கிறார். இதாவது ஏட்டிக்குப் போட்டியா? இல்லை ப்ரோ!… ஒருவர் வாழை இலை விற்கிறார், முன்னவர் வாழைக்காய் விற்கிறார். அவ்வளவுதான் விஷயம்! அடுத்ததாக ஒரு கடை. “ஓ சிரிக்கிறே சிரிக்கிறே…” “நான் எங்கேம்மா சிரிக்கிறேன்? வியாபாரத்தைத்தானே பார்க்கிறேன். ஓ அரைக்கிறே அரைக்கிறே…” “அப்ப நான் அரைக்கிறேனா? சும்மா இரு. ஓ முறைக்கிறே முறைக்கிறே…” என்ன கடை இது என்று குழம்பாதீர்கள். காதைக் கொஞ்சம் தீட்டிக்கொண்டு கேட்டால் விளங்கும். அவர்கள், சிறுகீரை, அரைக்கீரை, முளைக்கீரை ஆகியவற்றை விற்கிறார்கள்!“எலலோரும் இப்பிடி தமாசா ஏட்டிக்குப் போட்டி மாதிரி கூவினா, நான் மட்டும் அப்பிடிக் கூவ முடியாது” என்கிறார் ஒருவர். என்ன விஷயமாம்? “என் பக்கத்துல இருக்குறவர் 'ரவை' வியாபாரம் பண்றாரு. அதுக்கு ஆப்போசிட்டா இந்த சந்தையில நான் 'வைர' வியாபாரம் பண்ண முடியுமா?” என்று சிரிக்கிறார் அவர். - ஜி.ஆர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !