உள்ளூர் செய்திகள்

சரித்திர சங்கமம்: ஆயுதங்கள் மட்டுமே வெற்றியைத் தராது

காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னர் இவர். தொண்டைமான் மரபைச் சேர்ந்தவர். இவர் கொடை வள்ளலாகவும் தமிழ்ப் புலமை உடையவராகவும் திகழ்ந்தார். நற்றிணையில் மூன்று பாடல்களையும் (94, 99, 106) இயற்றியுள்ளார். புறநானூற்றிலும் ஒரு பாடல் (பாடல் 185) இடம்பெற்றுள்ளது.'தேரைச் செலுத்துபவன் திறமையுடையவனாக இருந்தால், தேர் இடையூறு இல்லாமல் செல்லும். அவனே திறமையற்றவனாக இருந்தால், வண்டி சேற்றில் சிக்கிக்கொள்ளும். அதுபோல, திறமையற்ற மன்னர் இருக்கும் நாடு, பல துன்பங்களில் சிக்கித் தவிக்கும்' என்பதே இவர் பாடிய புறநானூற்றுப் பாடலின் கருத்து.இவரைத் தலைவனாகக் கொண்டு, கடியலூர் உருத்திரங்கண்ணனார் 'பெரும்பாணாற்றுப்படை' என்னும் நூலை இயற்றினார். அதில் மன்னரின் வள்ளல் தன்மை, வீரம், நாட்டின் வளம் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது.ஒருமுறை இவர் தகடூர் நாட்டின் மீது போர் தொடுக்க முடிவு செய்தார். இதை அறிந்த ஔவையார், தன் நண்பர் அதியமான் சார்பாகத் தூது சென்றார். ஔவையை வரவேற்ற தொண்டை மண்டல அரசர், தன் படைக்கருவிகள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார். கருவிகள் புதியதாகச் செய்யப்பட்டுப் பளபளவென மின்னின.ஆயுதங்கள் எல்லாம் எண்ணெய் பூசப்பட்டுத் துருவேறாமல் பாதுகாக்கப்பட்டிருந்தன. ஆயுதக் குவியல்களின் மீது மயில் தோகை, பூமாலைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. 'ஆயுதங்களைப் பார்க்கும் ஔவையார், அதியமானிடம் சென்று தன் படைக் கருவிகள் பற்றிச் சொல்வார், அதியமான் கலக்கம் அடைவார் ' என்று எதிர்பார்த்தார் தொண்டை மண்டல அரசர்.ஆனால் ஔவையார், ''உன் போர்க்கருவிகள் எதுவுமே பயன்படுத்தப்படாமல் அப்படியே இருக்கின்றன. ஆனால் அதியமானின் கருவிகளோ போரில் பயன்படுத்தப்பட்டு, முனை மழுங்கிக் கொல்லன் பட்டறையில் கூர்தீட்டச் சென்றிருக்கின்றன. அதியமானுக்குப் படைக்கருவிகளை அலங்கரிக்கத் தெரியாது; ஆனால் அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பது தெரியும்'' என்றார்.தொடர்ச்சியாக, போரில் இயங்கிக் கொண்டிருக்கும் அதியனின் வீரத்தை, மறைமுகமாக உணர்த்தினார் ஔவையார். காஞ்சி அரசர், மனம் மாறி போரை நிறுத்தினார். யார் இந்த தொண்டை மண்டல அரசர்?விடைகள்: தொண்டைமான் இளந்திரையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !