வரலாற்று வாசல்
உறவினர் மீது போர்தொடுத்த சோழ மன்னன் கங்கைகொண்ட சோழன் இராஜேந்திரனின் மகள் வயிற்றுப் பேரன், முதலாம் குலோத்துங்கன்.கி.பி. 1070 முதல் 1120 வரை சோழ நாட்டிற்கு அரசராக இருந்தவர். வேங்கி நாட்டு அரசன் இராசராச நரேந்திரன், அம்மங்கைதேவி இவரது பெற்றோர்.சோழ நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த அதிராஜேந்திரன் வாரிசு இன்றி இறந்துவிட்டார். அந்த நிலையில், பெண் வழியில் சோழர் குல அரசனாக நாட்டிற்குப் பொறுப்பேற்றுக் கொண்டார், முதலாம் குலோத்துங்கன்.சுங்கம் தவிர்த்த சோழன் இவர்தான். சோழ நாட்டிற்குக் கப்பம் செலுத்தக்கூடிய அரசர்கள் பலர் இருந்தனர். அவர்களில் ஒருவர் வடகலிங்க நாட்டைச் சேர்ந்த அனந்தவர்மன். இந்த அனந்தவர்மனும் சோழ நாட்டு இளவரசியை மணந்தவர்தான். முதலாம் இராஜேந்திரனின் மகன்களில் ஒருவராக விளங்கியவர் வீரராஜேந்திரன். அவரின் மகளை மணந்தவர் அனந்தவர்மன்.அதாவது, குலோத்துங்கனின் தாய்மாமனின் மகளை மணந்தவர் அனந்தவர்மன். அவர், இரண்டு முறை சோழப் பேரரசிற்கு கப்பம் செலுத்தவில்லை. இதனால் கோபம் கொண்ட குலோத்துங்கன், தன் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான் தலைமையில் பெரும்படையை அனுப்பி வைத்தார்.சோழர் படை 1112இல் கலிங்கம் சென்று, போரில் வெற்றிபெற்று பெரும் செல்வத்துடன் நாடு திரும்பியது. கலிங்க மன்னன் சிறைப் பிடிக்கப்பட்டார். அனந்தவர்ம சோட கங்க தேவா (Anantavarman Choda ganga Deva) என்பதுதான், கலிங்க மன்னனின் முழுப்பெயர்.நாட்டை விரிவுபடுத்துவதுதான் ஒவ்வொரு அரசரின் நோக்கமாக இருந்தது. அதனால் தனக்கு அடங்காத அனந்தவர்மன் மீது குலோத்துங்கன் போர் தொடுத்தார். அங்கே உறவினர் என்ற பந்தம் அடிபட்டுப்போனது. ஒடிஷாவில் உள்ள பூரி ஜகன்நாதர் கோயிலைச் சிறப்புடன் கட்டியவர், இந்த அனந்தவர்மன்.