சரித்திரம் பழகு: மருமகனுக்கு மரண தண்டனை வழங்கிய மன்னர்
சேதுநாட்டை (ராமநாதபுரம் பகுதி) கி.பி.1710 முதல் 1725 வரை ஆட்சி செய்தவர் திருவுடையத்தேவர் என்ற முத்து விஜயரகுநாத சேதுபதி. இவர் ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள ஓவியங்களை வரையச் செய்தவர். ராமாயண காவியத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர், அதில் வரும் காட்சிகளைக் குறிப்புகளுடன் ஓவியங்களாகச் சுவர் முழுக்கவும் வரையச் செய்தார். ஏறத்தாழ முந்நூற்று ஐம்பது ஆண்டுகள் ஆகியும், இந்தச் சுவர் ஓவியங்கள் இன்றும் பொலிவுடன் காட்சி அளிக்கின்றன. ராமேஸ்வரம் தீவில் கோதண்டராமர் கோயிலைக் கட்டிய இவர், கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு இலவசப் படகுப் போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். சேதுநாட்டிற்கு உட்பட்ட ராமேஸ்வரம் பகுதிக்கு, தன் உறவினரான தண்டத்தேவர் என்பரை நிர்வாகியாக்கினார் சேதுபதி. அவருக்கே தன் இருமகள்களான சீனி நாச்சியார், லட்சுமி நாச்சியாரை மணம் முடித்துக் கொடுத்தார். ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு, போக்குவரத்து, தங்குமிடம் ஆகியவற்றைச் செய்து கொடுக்கும் பொறுப்பை மருமகனிடம் ஒப்படைத்தார். ஒரு கட்டத்திற்குப் பிறகு, கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் படகு சவாரிக்காகக் கட்டணம் வசூலித்தார் மருமகன். இந்தச் செய்தி விஜய ரகுநாத சேதுபதி மன்னருக்கு எட்டியது. மருமகன் என்றும் பாராமல், அவருக்கு மரண தண்டனை வழங்கினார். அவரின் மகள்கள் இருவரும் கணவனை எரித்த தீயில் புகுந்து உடன்கட்டை ஏறினர்.அவர்களின் நினைவாகப் பின்னர் மடங்களும் ஊர்களும் ஏற்படுத்தப்பட்டன. அவைதான் தற்போதும் அக்காள் மடம், தங்கச்சி மடம் என்ற பெயர்களில் ஊர்களாக உள்ளன. இந்த மன்னர், சேது பகுதியில் ராஜசிங்கமங்கலம், பாம்பன், கமுதி ஆகிய ஊர்களில் மூன்று கோட்டைகளைக் கட்டினார்.ஆங்கிலேயர் காலத்தில் சேதுநாட்டில் இருந்த பல கோட்டைகள் இடிக்கப்பட்டன. அவற்றில் இந்தக் கோட்டைகளும் அடங்கும்.