உள்ளூர் செய்திகள்

சரித்திரம் பழகு: ஏழு கோயில்கள் இருந்த எழில்மிகு மாமல்லை

மாமல்லபுரம் பல்லவர்களின் துறைமுகப்பட்டினமாக இருந்தது. அங்கு கடல்வழியாக வாணிகம் செய்ய வெளிநாட்டினர் வந்தனர், கடல் பகுதியில் கப்பலில் வரும்போது, மாமல்லபுரத்தில் ஏழு கோயில் கோபுரங்கள் தெரிந்ததைக் கண்டனர். அதனால் அந்தக் கோயில்களை செவன் பகோடாஸ் (Seven Pagodas) என்று குறிப்பிட்டுள்ளனர். பகோடாஸ் என்றால் கோபுரங்கள் என்று பொருள். சிலர் அந்தக் கோபுரங்களைப் பார்த்து, கையசைத்துச் சென்றதாகவும் வெளி நாட்டுப் பயணிகளின் குறிப்புகள் கூறுகின்றன. வில்லியம் சேம்பர் (William Chambers) என்பவர், செவன் பக்கோடாஸ் என்ற தலைப்பில், 1788இல் ஒரு நூல் எழுதி உள்ளார். அதில், அவ்வூரில் உள்ள முதியவர்கள், 'காலைச் சூரியனின் வெளிச்சத்தில் கடலுக்கு நடுவே பல கோபுரங்களின் உச்சி மின்னியதைக் கண்டனர்' என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது ஒரே ஒரு கடற்கரை கோயில் மட்டும்தான் உள்ளது. சமீபத்தில் கடல் உள்வாங்கியபோது, கட்டடத்தின் மிச்சங்கள், மாமல்லபுரத்தில் வெளிப்பட்டன. மாமல்லபுரத்தைப் பற்றிப் பல்வேறு இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. ஒட்டக்கூத்தர் பாடிய இரண்டாம் 'ராசராசன் உலாவில்' மல்லாபுரம் என்று மாமல்லபுரம் குறிக்கப்பட்டுள்ளது. நெய்தலும் குறிஞ்சியும் கலந்த ஊர் என்று, சேக்கிழார் 'பெரிய புராணத்தில்' கூறியுள்ளார். இங்கு குன்றுகளும் பாறைகளும் நிறைந்துள்ளன என்று அவர் கூறுகிறார்.சமஸ்கிருத அறிஞர் தண்டி, தம் நூலான 'அவந்தி சுந்தரி கதாசாரம்' என்ற நூலில், இந்த ஊரை, மகாமல்லபுரம் என்று எழுதியுள்ளார். எட்டாம் நூற்றாண்டு நந்திவர்ம பல்லவன் காலத்தில், மல்லபுர நகரம் என்று அழைக்கப்பட்டது. திருமங்கையாழ்வார் கடல் மல்லை என்று அழைத்தார். ராஜராஜ சோழன் கல்வெட்டு கடற்கரை கோயில் உள்ள இடத்தில் உள்ளது. அது மாமல்லபுரமான நகரம் என்று குறிப்பிடுகிறது.கல்வெட்டில் ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து ஆமுர் கோட்டத்தில் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ராஜேந்திரன் காலத்தில் ஜனநாதபுரம் என்று அழைக்கப்பட்டது. விஜய நகர மன்னர்கள் காலத்தில் மாவலிபுரம் ஆனது. 'மல்லையும் கச்சியும் பாடீரே' என்று கலிங்கத்துப் பரணி குறிப்பிடுகிறது. ஆழ்வார்களில் பூதத்தாழ்வார் பிறந்த இடம் மாமல்லை. காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள் தங்களை 'மல்லையர்கோன்' என்று மாமல்லபுரத்தை அடிப்படையாகக்கொண்டு அழைத்துக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !