திரவத் தங்கம்!
இன்று உலகின் முக்கிய எரிபொருள் பெட்ரோலியம். கிரேக்க மொழியில் 'பெட்ரா' என்றால் பாறை, 'ஓலியம்' என்றால் எண்ணெய். பாறைப் பகுதிகளில், இந்த எண்ணெய் கிடைத்ததால் 'பாறை எண்ணெய்' என்று பொருள்படும் 'பெட்ரோலியம்' என்ற பெயர் இதற்கு வந்தது. சரி! பெட்ரோலியம் எப்படி உருவாகிறது என்று பார்ப்போம். கடலில் வாழும் உயிரினங்கள் மடிந்த பிறகு, தரைத்தளத்தில் கரிம அடுக்காகப் படியும். காலப்போக்கில் அதன்மேல் வண்டல் மண்ணும் களிமண்ணும் படிந்து படிவப் பாறை அடுக்குகள் உருவாகும். புவி ஓட்டிற்குக் கீழே உருவாகும் வெப்பத்தாலும், மேலே இருக்கும் பாறை அடுக்குகளின் அதிகமான எடை காரணமாகவும், கரிம அடுக்கில் இருக்கும் நீர் வெளியேறும். எஞ்சி இருப்பவை வழவழப்பான பெட்ரோலிய எண்ணெயாக மாறும். இந்த மாற்றம் நடக்க பல லட்சம் ஆண்டுகள் ஆகும்.காலப்போக்கில் பெட்ரோலிய எண்ணெய், மேலே உள்ள பாறைகளில் இருக்கும் சிறு துவாரங்கள் வழியாகப் பக்கவாட்டுப் பகுதிகளில் கசியும். இப்படிக் கடலுக்கு அடியில் இருந்து, கடலை ஒட்டிய பகுதிகளுக்கும், அங்கிருந்து பிற பகுதிகளுக்கும் கசிந்து சென்று, எண்ணெய் வயல்களை உருவாக்கும். எண்ணெய் வயல்களின் பரப்பளவு ஒரு நகரத்தின் பரப்பளவுக்கு நிகராகக்கூட இருக்கும். இந்த எண்ணெயில் இயற்கை வாயு, பெட்ரோல், பென்சீன், நாப்தா, மண் எண்ணெய், டீசல், தார் முதலான பல உட்பொருட்கள் கலந்து இருக்கின்றன. இந்தக் கலப்பட எண்ணெய்க்குக் 'கச்சா எண்ணெய்' என்று பெயர். சுத்திகரிப்பு நிலையத்தில் கச்சா எண்ணெய் காய்ச்சப்படும். பல உட்பொருட்கள் அதில் அடங்கி இருக்கும். வெவ்வேறு கொதிநிலைகளில் ஆவியாகும். பெட்ரோல், மண் எண்ணெய் முதலான உட்பொருட்களின் ஆவி, அதனதன் அடர்த்திக்குத் தக்கவாறு தனித்தனி உறிஞ்சு கூண்டில் போய்ச் சேரும். பிறகு அவை குளிர்ந்து தனித்தனிக் கலன்களில் திரவமாகும். அடுத்து, பெட்ரோலியம் இல்லாத உலகத்தைக் கற்பனை செய்து பார்ப்போம். கார்கள், பேருந்துகள், விமானங்கள் ஓடா. தொழிற்சாலைகள் இயங்கா. பெரும்பாலான பொருட்களின் உற்பத்தி நின்றுவிடும். 'சரி! இப்போதைக்கு பெட்ரோல்தான் தாராளமாகக் கிடைக்கிறதே! பிறகு ஏன் நாம் கவலைப்பட வேண்டும்?' என்று நினைத்தால் அது தவறு! இதுவரை பெட்ரோலிய வளத்தில் முக்கால்வாசியை நாம் காலி செய்துவிட்டோம். தற்போது நாம் பயன்படுத்தும் அளவை வைத்துக் கணக்கிட்டால் 2050க்குள் மொத்த இருப்பும் தீர்ந்துவிடும் என்கிறார்கள். சரி தீர்ந்தால் என்ன? புதிதாய் உருவாகிவிடாதா? என்று நினைக்கலாம். புதிதாக உருவாகும். ஆனால் அதற்கு நாம் குறைந்தது 20 லட்சம் ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். பெட்ரோலிய வளங்கள் இல்லாத நிலையில் மனிதர்கள் எப்படி இயங்குவார்கள் என்பதுதான் தற்போதைய முக்கியமான கேள்வி. சூரிய ஒளி, காற்று, நீர் போன்ற ஆற்றல் வளங்களில் கவனம் செலுத்த வேண்டும். அவ்வளவுதான்!