வெங்கியை கேளுங்க!
1. கணிதம், அறிவியலில் X,Y வருகிறது. செல்களில் உள்ள குரோமோசோம்களையும் X,Y எனக் குறிக்கிறார்ளே. இது ஏன்?ரா.ஷிவாணி, 6ஆம் வகுப்பு, பி.ஜி.எஸ். பப்ளிக் பள்ளி, பெங்களூரு.மிக அற்புதமான கேள்வி! 1890இல் ஹெர்மன் ஹென்கிங் (Hermann Henking) என்பவர், குன்றல் பிரிவு (Meiosis) வினையில் எல்லா குரோமோசோம்களும் பங்கேற்க, பங்கேற்காத ஒரே ஒரு குரோமோசோம் தொகுதியைக் கண்டறிந்தார். இந்த மரபணுவின் கூறு குரோமோசோம்தானா என்கிற சந்தேகம் எழுந்து அவருக்கு வியப்பை ஏற்படுத்தியது. எனவே, என்னவென்று தெளிவாகத் தெரியாத அந்தக் கூறுகளுக்கு, கணிதத்திலும் அறிவியலிலும் பயன்படுத்தப்படுவது போல் X என்று பெயர் வைத்தார். பின்பு, 1905இல் அமெரிக்க ஆய்வாளர் நெட்டி ஸ்டீவன்ஸ் (Nettie Stevens), மற்ற எல்லா குரோமோசோம்களும் ஜோடி ஜோடியாக அமைவதாகவும் Xக்கு மட்டும் ஜோடியாக சற்று உருவில் வேறுபட்ட ஒரு குரோமோசோம் இருப்பதாகவும் கண்டறிந்தார். Xக்கு அடுத்த எழுத்து Y என்பதால், அதையே பெயராக வைத்தார். அதுவரை X குரோமோசோம் ஆண், பெண் பால் வேறுபாட்டை ஏற்படுத்துகிறது எனக் கருதியிருந்தனர். அதை மாற்றி, XX என்றால் பெண் எனவும், XY என்றால் ஆண் எனவும் ஸ்டீவன்ஸ் நிறுவினார். பெண் கருமுட்டையில் எப்போதும் ஒரே ஒரு X மட்டுமே இருக்கும், ஆண் விந்துவில் X அல்லது Y இருக்கும். எனவே, பிறக்க இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனத் தீர்மானிப்பது ஆணின் விந்துதான். நுண்ணோக்கியில் பார்க்கும்போது பாலின குரோமோசோம்கள் X,Y போன்ற வடிவில் தென்படுவதால், இந்தப் பெயர் வந்தது என வலைத்தளங்கள் தவறாகக் கூறுவதைக் கருத்தில் கொள்ளக்கூடாது.2. வானிலை திடீர் திடீரென மாறுவது ஏன்?உ.ஆ.நேஹா, 6ஆம் வகுப்பு, சீயோன் மேல்நிலைப் பள்ளி, சென்னை.ஒரே வகை அரிசியைக் கொண்டு வீட்டில் தினமும் சமையல் செய்கிறார்கள். அப்போது, நீரின் அளவு மாறுபட்டால், சாதம் குழைந்து ஈரப்பதமாகவோ அல்லது உதிரியாகவோ இருக்கும். அந்த மாற்றத்தைத் தவிர வேறெந்த மாற்றமும் அந்த வகை அரிசியால் ஏற்படாது. ஆனால், சாம்பாரில் ஒரு நாள் கத்திரிக்காயும், இன்னொரு நாள் முருங்கைக்காயும் சேர்த்தால் சுவை மாறுபடும். அடிப்படைப் பொருட்களின் கலவை குறைவு எனில், வேறுபாடும் குறைவாகவே இருக்கும். அடிப்படைப் பொருட்களின் எண்ணிக்கை கூடக்கூட, அது ஏற்படுத்தும் விளைவிலும் வேறுபாடு அதிகமாகும். அதுபோல, வானிலை என்பதும் பல்மாறி (Multi variable) சமன்பாடு கொண்டது. எனவே, ஒவ்வொரு மாறியும் சற்று வேறுபாடு அடையும்போது கூட்டு விளைவு, பெருமளவு வேறுபாட்டுடன் வெவ்வேறாக அமையும். எனவேதான், ஒவ்வொரு நேரத்திலும் திடீர் திடீரென வானிலை மாறுகிறது.ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட காலத்தில் வளிமண்டலம் எப்படிப்பட்ட நிலையில் உள்ளதோ அதுவே 'தட்பவெப்பநிலை'. காற்று, வெப்பநிலை, ஈரப்பதம், வளிமண்டல அழுத்தம், மேகங்கள் மூலம் இது அளவிடப்படுகிறது.3. சமையல் எண்ணெய்கள் இயற்கைப் பொருட்களில் இருந்தே தயாராகின்றன. பின்பு அவை ஏன் உடலுக்குக் கேடு விளைவிக்கின்றன?ஜே.மாதவன், 10ஆம் வகுப்பு, சாந்தோம் மேல்நிலைப் பள்ளி, சென்னை.எல்லா விதமான இயற்கைப் பொருட்களும் மனிதர்களுக்கு நன்மை தருவது அல்ல. அதேபோல் எல்லா விதமான செயற்கைப் பொருட்களும் கெடுதியும் அல்ல. அதாவது, இயற்கை என்றாலே நன்மை தரும் என, எளிதாகக் கருதிவிடக் கூடாது. அம்மை நோய், போலியோ போன்ற நோய்களைத் தரும் கிருமி இயற்கையானதுதான். கண்ணொளி தந்து பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்யும் மூக்குக் கண்ணாடி செயற்கை. ஆக, இயற்கை அல்லது செயற்கை எதுவாக இருப்பினும், அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் தீமையே.சமையல் எண்ணெய்களில் நமது உடலியக்கச் செயற்பாட்டுக்குத் தேவையான கொழுப்பு இருக்கிறது. அவற்றை அளவுக்கு அதிகமாக உண்ணும்போது, உடல் பருத்து, இருதய நோய் உட்பட பல்வேறு குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. இதன் காரணமாகவே, இயற்கைப் பொருளாக இருந்தாலும், அவை உடலுக்குக் கேடு தரும் எனச் சொல்லப்படுகிறது.4. தாகம் எடுப்பது எதனால்? உடலில் சொட்டுத் தண்ணீர்கூட இல்லாத நிலை ஏற்படுமா?ஜே.பி.மிர்துள் வியாஸ், ஸ்ரீ ஜெய் ராஜ் வித்யா மந்திர் பள்ளி, வடமதுரை.பல்வேறு சுழற்சிகளின் இயக்கமே உடலியக்கம். உடலில் இரத்தம் சுழன்றால்தான் நுரையீரல் உட்கொள்ளும் ஆக்சிஜனை எல்லா தசைகளுக்கும் எடுத்துச் செல்ல முடியும். அதேபோல், உணவுக்குழாய் மூலம், குடல் போன்ற உறுப்புகளுக்குச் சென்று உணவு செரிமானம் ஆகி, வீணான பொருட்கள் சிறுநீராகவும் மலமாகவும் வெளியேற வேண்டும். அதாவது, பொருட்கள் ஓரிடத்தில் இருந்து மற்ற இடத்துக்குச் செல்ல வேண்டும். உடலியக்கத்தில் பெரும்பாலான பொருட்களின் இடமாற்றம் நிகழ, இரத்தம் போன்ற பல்வேறு நீர்மங்களின் உதவி தேவை. எனவே, உடலில் ஒரு சொட்டு நீர்கூட இல்லை என்றால், நீரிழப்பு நோய்க்கு உள்ளாகி, வாடி வதங்கி மடிந்துவிடுவோம். நீரின் அளவு உடலில் குறையும்போது, அதை ஈடு செய்யவே தாகம் எடுக்கிறது.