உள்ளூர் செய்திகள்

வெங்கியை கேளுங்க!

மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிபாம்புக்குக் காதுகள் இல்லை என்றால் மகுடிக்கு எப்படி ஆடுகிறது? நாக்கை அடிக்கடி நீட்டுவதும் ஏன்?செ. சுபாஷிணி, 6ஆம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சுல்தான்பேட்டை, திருப்பூர்.மகுடியை ஆட்டியபடியே அதனை ஊதிச் சத்தம் எழுப்பும்போது, பாம்பு படமெடுத்து ஆடுகிறது. இசையில் மயங்கி நமது கைகளும் கால்களும் தானாகத் தாளம் போடுவது போல், பாம்பும் இசையில் மயங்கியே ஆடுகிறது என கருதிவிடுகிறோம். பாம்பின் கண்ணை நன்றாகத் துணியால் மூடிவிட்டு மகுடியை ஊதினால் பாம்பு படமெடுத்து ஆடாது. அதேபோல இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு அசைக்காமல் மகுடியை ஊதினால் பாம்பு ஆடாது. ஆனால், மகுடியை ஊதிச் சத்தம் எழுப்பாமல் வெறும் பாவனை மட்டும் செய்தாலே பாம்பு ஆடும். மகுடிக்குப் பதில் ஏதாவது கம்பைச் சுழற்றினாலும் பாம்பு தலையை விரித்து ஆடும். அதாவது கேட்கும் திறன் மூலமாக இசையைக் கேட்டு பாம்பு ஆடுவது இல்லை, காட்சிப் புலன் வழி தாளத்தோடு ஆடும் பொருளைக் கண்டே பாம்பு தலையை ஆட்டுகிறது. அது நமக்கு ஆடுவது போலக் காட்சியளிக்கிறது. அடிக்கடி நாக்கை நீட்டுவது அதன் இயல்பு. அவ்வாறு செய்வதால், அதன் முகத்தின் அருகே உள்ள பொருட்களை உணர்ந்து கொள்ள முடிகிறது.சிக்கிமுக்கிக் கல் என்பது என்ன? அதில் என்ன இருக்கிறது? அதைப் போன்ற கற்கள் இப்போது இல்லையா?ஜி.கலா, 6ஆம் வகுப்பு, எஸ்.ஆர்.வி.பள்ளி, சமயபுரம்.'சிக்கிமுக்கிக் கல்' எனப்பட்ட ஒருவகைக் கற்களைக் கொண்டு, தீப்பொறி உண்டாக்கித் தீ மூட்டுவது அந்தக் காலத்தில் வழக்கமாக இருந்துள்ளது. சிக்கிமுக்கிக் கல் அல்லது தீக்கல் (Flint) என்பது, ஒரு வகைப் படிகப் பாறை! இந்தக் கடினமான படிகம் சிலிக்காவினால் ஆனது. இதை ஒன்றுடன் ஒன்று வேகமாக உரசும்போது, உராய்வினால் ஏற்படும் வெப்பத்தால் தீப்பொறி உருவாகும். சில வகைப் படிகக் கற்கள், சில உலோகத்துடன் அடிபடும்போதும் தீப்பொறிகளை உருவாக்கும். இப்போதும் இந்தக் கற்கள் பல இடங்களில் இருக்கின்றன. நெருப்புப் பெட்டியை வைத்து தீ உருவாக்குவதைவிட, இந்தக் கல்லை வைத்து தீ மூட்டுவதற்கு சாதுரியம் வேண்டும். எனவே, தற்காலத்தில் இதன் பயன்பாடு குறைந்து விட்டது.இன்னும் நூறு ஆண்டுக்குப் பிறகு பூமி எப்படி இருக்கும்?கே.ரம்யா, 8ஆம் வகுப்பு, வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, சென்னை.சூழலியல் குறித்த அறிவு மேன்மேலும் முன்னோக்கிச் செல்வது போல, உயிரியல் குறித்தும், உயிரி வேதியியல் குறித்த அறிவும் நுட்பமாக வளர்ந்து வருகிறது. ஒளிச்சேர்க்கை என்பது ஒரு வகை வேதிவினையே. ஆனால், ஒளிச்சேர்க்கை வேதிவினை சூழல் மாசை ஏற்படுத்துவது இல்லை. மற்ற உயிரிகளுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை. இன்றுள்ள வேதிவினைகளை ஒதுக்கி, உயிரி வேதியியல் முறையில் தொழிற்சாலைகள் அமைந்தால், சூழல் பாதிப்பு இருக்காது. முதலாவதாக, வளர்ந்து வரும் அறிவை வைத்துச் சூழல் மாசு இல்லாமல் மனித இனம் பொருள் உற்பத்தியில் ஈடுபடும் என நான் கருதுகிறேன். இரண்டாவதாக, இன்றுள்ள மனிதர்களைப்போல பல மடங்கு மனிதர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் முதலியவை அளிக்க முடியும். பஞ்சம், பட்டினி, வறுமை நீங்கிய சமுதாயம் மலரும். சுமார் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிரிக்காவில் காங்கோ பகுதியில் தோன்றிய மூத்த குடிகளின் வழித்தோன்றல்களே நாம் அனைவரும். உலகில் உள்ள மனிதர்கள் எல்லோரும் ஒரு தாய் மக்களே. ஆயினும், இன்று பல்வேறு பிரிவினை பேசி ஒருவருக்கு ஒருவர் பகைமை பாராட்டி வருகிறோம். இந்த அவலநிலை மாறி, அனைவரும் ஒன்றாக இணையும் நிலை வரும்.இரவில் தூங்காமல் படித்தால் ஞாபகசக்தி பாதிக்குமா?ஆர். ஏழுமலை, 8ஆம் வகுப்பு, நகராட்சி நடுநிலைப் பள்ளி, மதுராந்தகம்.சிலருக்கு இரவில் படிப்பது ஏதுவாக இருக்கும்; சிலருக்கு அதிகாலையில் விழித்துப் படிப்பது நன்றாகப் புரியும். உடல், மனநிலையைப் பொறுத்து, எப்போது படிக்க வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால், எந்தச் சூழலில் படித்தாலும் போதுமான தூக்கம் வேண்டும். தூக்கம் இல்லாமல் இருப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, கைப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற செயல்களுடன் பாடம் படிப்பது, மனச்சோர்வை ஏற்படுத்தி, மறதிக்கு வழிவகுக்கும். தூங்காமல் இருப்பதால், இரத்தத்தில் இருக்கும் இரசாயன அளவு கூடி ஞாபகசக்தி குறையும். உடலையும் மனத்தையும் ஒருசேரப் பாதிக்கும் ஆற்றல் தூக்கமின்மைக்கு உண்டு. எனவே, எப்போது படிக்கிறோம், எந்த நேரத்தில் தூங்கி, எப்போது விழிக்கிறோம் என்பதல்ல பிரச்னை. தினமும் குறிப்பிட்ட நேரம் தூங்கி ஓய்வு எடுத்த பிறகு படிப்பதே ஞாபகசக்திக்கு உகந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !