வெங்கியை கேளுங்க!
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி1. இந்தப் பிரபஞ்சத்துக்கு முடிவு எல்லை இருக்கிறதா? அதை எப்படிப் புரிந்துகொள்வது?யுதிஷ், இன்ஃபேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி, இராமநாதபுரம்.எண் வரிசையை எடுத்துக்கொள்ளுங்கள். நேர், எதிர் எண்களின் வரிசையைப் பார்த்தால், இரண்டு பக்கமும் முடிவில்லாத முடிவிலி தொடர். அதேபோல அந்த வரிசைக்கு எல்லையும் இல்லை. நவீன கணிதவியலின் கட்டமைப்பியல் (Topology - டோபாலாஜி) வரம்புக்கு உட்பட்டு இருந்தால் ஆரம்பம் அல்லது முடிவு இருக்க வேண்டும் என்றில்லை. அதேபோல ஆரம்பம், முடிவு இருந்தால் எல்லையுடையதாக இருக்கவேண்டும் என கருதுவதும் சரி அல்ல.பள்ளி நோட்டுப் புத்தகத்தின் காகிதம் எல்லையுடையது. அதன் பரப்பளவும் குறிப்பிட்ட அளவுதான் இருக்கும். ஆனால், பூமியின் மேற்பரப்பு பந்தின் மேற்பரப்பை ஒத்து இருப்பதால் விளிம்பு என்று எதுவும் இல்லை. அதாவது எல்லை இல்லை. அதன் மேற்பரப்பின் அளவு சுமார் 500 மில்லியன் ச.கி.மீ.அதாவது இந்தப் பரப்புக்கு எல்லை இல்லை; பூமியின் மேற்பரப்பில் நடந்து செல்லும்போது விளிம்புக்கு வந்துவிட்டோம் என்ற நிலையே ஏற்படாது.ஒன்று மற்றும் இரண்டு ஆகிய இரண்டு எண்களுக்கு இடையே உள்ள மெய்யெண்கள் எண்ணிக்கை முடிவிலி. ஆனால், அந்த முடிவிலி முழுவதற்கும் ஆரம்பம் மற்றும் முடிவு இருக்கிறது. அந்த முடிவிலி எண்ணிக்கையிலான எண்கள் ஒன்றில் தொடங்குகிறது, இரண்டில் முடிவடைகிறது. இப்படிப் பல வடிவவியல் அமைப்பில் பிரபஞ்சம் இருக்கலாம். இதைத் தவிர வினோத வடிவங்கள் சாத்தியம். சாப்பிடும் ஓட்டை வடையைக் கூட எடுத்துக்கொள்ளுங்கள். அதன் மேற்பரப்பு வடிவில் கூட பிரபஞ்ச வடிவியல் இருக்கலாம். எந்த வடிவில் பிரபஞ்சம் இருக்கிறது என்று திடமான முடிவுக்கு வரும் அளவுக்கு நம்மிடம் போதிய தரவுகள் இல்லை.2. பூமியில் உள்ள கண்டங்கள் எல்லாம் தங்களது இடங்களை நகர்த்தியுள்ளன என்று கூறப்படுவது உண்மையா?எஸ். சாலமன் விக்டர், 12ஆம் வகுப்பு, எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் பள்ளி, மதுரை.ஆம்! இப்போதும் நகர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதனாலேயே ஆண்டுதோறும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் சிறிது சிறிதாக உயர்ந்துகொண்டே வருகிறது. இன்றைக்கு உலக உருண்டையில் ஆப்பிரிக்கா அருகில், நிலநடுக்கோட்டுக்குத் தெற்கே 'மடகாஸ்கர்' எனும் தீவு உள்ள இடத்தில்தான் சுமார் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய தீபகற்பம் இருந்தது. மெல்ல மெல்ல வடக்கு நோக்கி நகர்ந்து சுமார் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியக் கண்டத்துடன் மோதியதன் விளைவே 'இமயமலை.' அதேபோல உலகில் உள்ள கண்டங்கள் எல்லாம் பல்வேறு திசையில் நகர்ந்தன, நகர்கின்றன, எதிர்காலத்திலும் நகரும். ஆனால், நகரும் வேகம் வெகு குறைவு என்பதால், நம்மால் எளிதில் உணர முடிவதில்லை. அவ்வாறு நகரும் கண்டங்கள் மோதிக்கொள்வதும் ஒன்றையொன்று உரசிக்கொள்வதன் காரணமாகவே எரிமலைகள், பூகம்பங்கள் ஏற்படுகின்றன.3. தொலைக்காட்சியின் திரைகள் கருமையாகவும் திரையரங்குகளின் திரை வெண்மையாகவும் இருக்கக் காரணம் என்ன?மா.சுஜிதா, 9ஆம் வகுப்பு, சின்மயா வித்யாலயா, இராஜபாளையம்.தொலைக்காட்சிப் பெட்டியில் எப்படி பிம்பம் உருவாகிறது, திரையில் எப்படி சினிமாக் காட்சி விழுகிறது என்பதில் உள்ள வித்தியாசம்தான் இந்த இரண்டுக்கும் இடையே உள்ள காரணம். எளிமையாகப் புரிந்துகொள்ள கருப்பு, வெள்ளை காட்சி எப்படி ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வோம். பெட்டி வடிவில் இருக்கும் தொலைக்காட்சியில் திரையின் மீது ஒளிரும் வண்ணப்பூச்சு இருக்கும். குழல் மின் விளக்கிலும் இது இருக்கும். அதன் மீது எதிர் மின்னேற்ற துகள், எலெக்ட்ரான் கதிர்கள் விழும்போது ஒளிப்புள்ளி ஏற்படும். ஒளிப்புள்ளிகளின் அடர்த்திதான் பிம்பமாகத் தென்படுகிறது. ஒளிப்புள்ளி இல்லாத பகுதி கருமையாக அமைகிறது. மெலிந்து இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியிலும் கணினி திரை போன்றவற்றிலும் இதுபோன்ற நிகழ்வுதான் ஏற்படுகிறது. இவற்றின் தொழில்நுட்பம் வேறு அவ்வளவே. அதாவது கணினி திரை, தொலைக்காட்சிப் பெட்டி முதலியவற்றில் ஒளிப்புள்ளிகள் சேர்ந்து காட்சிப் பிம்பத்தை ஏற்படுத்துகின்றன. எனவே திரை ஒளியற்ற நிலையில் கருமையாகவே இருக்கும்.சினிமா அரங்கில் சினிமா ஃபிலிம் மீது ஒளியைப் பாய்ச்சுகிறோம். அந்த ஒளி ஃபிலிம் உள்ளே புகுந்து செல்லும்போது ஃபிலிமின் கருமைப் பகுதியில் ஒளி தடைபடும். கருமை இல்லாத பகுதியில் ஒளி புகுந்து சென்று திரையில் விழும். அதாவது திரையில் விழுவது ஃபிலிமின் நிழல். வெண் திரையில்தான் நிழல் தெளிவாகத் தென்படும். எனவேதான் சினிமாத் திரை வெண்மையாக இருக்கிறது. 4. உடலில் உள்ளங்கை, உள்ளங்கால் மட்டும் வெளுப்பாக இருப்பது ஏன்?ச.ஜீவிகா, 5ஆம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சுல்தான்பேட்டை, திருப்பூர்.தோலில் உள்ள மெலனோசைட் எனும் நிறமி செல்கள் ஏற்படுத்தும் நிறமி காரணமாகவே தோல் கறுமை அடைகிறது. தோலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் புற ஊதாக்கதிர்களை உறிஞ்சிப் பாதுகாப்பதே இந்த மெலனின் எனும் நிறமி வேதிப் பொருளின் பணி. உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் மெலனோசைட் செறிவு ஐந்தில் ஒன்றாகவே உள்ளது. எனவே ஒப்பீட்டளவில் வெளுப்பாக இருக்கிறது.