வெங்கியை கேளுங்க!
மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி1. மனித உடலில் துளையிட்டு இரத்தத்தை உறிஞ்சும் அளவுக்கு கொசு வலிமையானதா?வெ.நந்தகுமார், 11ஆம் வகுப்பு, சி.கே. பள்ளி, கடலூர்.தோலில் துளையிட்டு இரத்தத்தை உறிஞ்ச சிறப்பான அமைப்பு கொசுவிடம் உள்ளது. கொசுவின் வாய்ப் பகுதியில் உறிஞ்சு குழல் (Straw) போன்ற நீண்ட அமைப்பு ஆறு நுண்ணிய குழல்களுடன் உள்ளது. ஆறில் இரண்டு குழல்கள் ரம்பம் போன்ற பல் அமைப்புடன் இருக்கும். அந்த ஜோடிக் குழல்களை மேலும் கீழும் இழுத்துத் தோலில் துளையிடுகிறது. மற்ற இரண்டு குழல்கள் தோலை விரித்து இழுத்து பிடித்துக்கொள்ளவும் ஐந்தாவது குழல் துளையின் உள்ளே சென்று இரத்த நாளத்தை அடைந்து உறிஞ்சவும் செய்கிறது. இதன் முனையில் இரத்தத்தை உணரும் உணர்வி செல்கள் உள்ளன. எனவே, தோலுக்கு அடியில் எங்கே இரத்தக் குழாய்கள் உள்ளன என அறிந்து அங்கே துளைத்துச் செல்லும்.ஹைபோபேரிங்ஸ் (Hypopharynx) எனப்படும் ஆறாவது குழலே நமக்கு ஆபத்தானது. இதன் வழியே இரத்தத்தில் தனது எச்சிலைக் கொசு செலுத்துகிறது. எச்சிலில் உள்ள ஒரு வேதிப்பொருள் இரத்தம் உறையாமல் நீர்த்துப் போகச் செய்து, எளிதில் உறிஞ்ச வழி செய்கிறது. இந்த எச்சில் வழியேதான் நோய் ஏற்படுத்தும் கிருமிகளும் உடலில் நுழைகின்றன.கொசுவின் வியக்கத்தக்க உடலமைப்பை மாதிரியாக வைத்து, அறுவை சிகிச்சைகளுக்குப் பயன்படும் நுண் ஊசிகளைத் தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஊசியில் உள்ள நுண்குழாய் மூலம் மரத்துப் போகச் செய்யும் திரவம் சிறிதளவு கசியும். மற்றொரு நுண்குழாய் மூலம் மருந்தை உள்ளே செலுத்தலாம் அல்லது இரத்தத்தை ஆய்வுக்கு எடுக்கலாம். எனவே, இந்தப் புதுவித ஊசியைக் குத்தும்போது வலி தெரியாது.2. குவான்டம் இயந்திரவியல் என்றால் என்ன? கண்டுபிடிப்பில் அதன் பயன்களும் பங்களிப்புகளும் என்ன?ஏ.ஆர். அருணேஸ்வரன், 9ஆம் வகுப்பு, எஸ்.எஸ்.வி.சாலா மெட்ரிக். பள்ளி, மேலூர்.ஏரியில் செல்லும் படகைக் கற்பனை செய்யுங்கள். பயணம் செய்யும் படகு, அந்த ஏரியில் ஒவ்வொரு கணமும் எங்கு உள்ளது என சரியாகக் கூறமுடியும். இது துகள் தன்மையின் குணம். அதே ஏரியில் பரவும் அலை எங்கே உள்ளது? படகு போல் அல்லாமல் ஏரி முழுவதும் அலை பரவுவதால், குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பாக எங்கே இருக்கிறது என கூற முடியாது. இது அலையின் குணம். இரண்டு கோலிக் குண்டுகள் மோதினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் எலக்ட்ரான்கள் ஒளித்துகள், போட்டானுடன் வினைபுரியும்போதும் இருக்கும். அதாவது எலக்ட்ரான் ஒரு கோலிக்குண்டு போல துகள் தன்மையை வெளிப்படுத்துகிறது. அதேசமயம் அணுக்கருவைச் சுற்றிவரும் எலக்ட்ரான் ஒவ்வொரு கணமும் எங்கே உள்ளது எனவும் கூற முடியாது. அலையானது அதன் சுற்றுப்பாதை முழுவதும் நிலைகொண்டுள்ளது என்றே கூறமுடியும். ஏதோ ஒன்றின் மடங்காக மட்டுமே அமையக் கூடியவற்றை தொடர்ச்சியற்ற தனியன்கள் (Discrete) என்றும், இடையறாத அளவில் அமையக் கூடியவற்றை தொடரிகள் (Continuous) எனவும் கூறுவார்கள். ஏணிப்படியில் 10ஆம் படியில் நிற்கலாம், 5ஆம் படியில் நிற்கலாம். ஆனால் 7.5ஆம் படியில் உள்ளேன் என கூற முடியாது அல்லவா? அதே சமயம், நூலின் நீளம் 7.5 செ.மீ., 7.54 செ.மீ., அல்லது 7.543 செ.மீ. என அமைய முடியும். அதாவது ஏணிப்படி தனியன்கள்; நூலின் நீளம் தொடரி. ஆற்றலின் அளவு தொடரி அல்ல; குறிப்பிட்ட அளவின் மடங்கு என, மாக்ஸ் பிளாங்க் (Max Planck) கண்டறிந்தார். இந்த அளவையே குவான்டம் என கூறினார். அலை, துகள் குணங்களை ஒருங்கே கொண்டுள்ள அணுவைவிட நுண்ணிய துகள்கள் குறித்த இயற்பியல்தான் குவான்டம் இயந்திரவியல். எல்.இ.டி. பல்புகள் உட்பட பல்வேறு மின்னணுக் கருவிகள் இதன் அடிப்படையில் செயற்படும் நவீன தொழில்நுட்பங்கள். 3. எறும்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாகச் செல்லக் காரணம் என்ன? கா.ஹரிகுமரன், 5ஆம் வகுப்பு, முஸ்தபா மெட்ரிக். பள்ளி, பூதகேணி, சிதம்பரம்.உணவை இனங்கண்டு அதில் ஒரு பகுதியைப் புற்றுக்குச் சுமந்து வரும்போது, உணவின் இருப்பிடத்தைக் குறிக்கும்படி ஒருவகை பெரமோன் (pheromone) வேதிப் பொருளை வழியெங்கும் பரப்பி வரும். இன்னொரு எறும்பு அந்த பெரமோன் வாசனையை வைத்து உணவை அடையும். உணவை எடுத்துப் புற்றுக்குத் திரும்பும்போது, அந்த எறும்பும் அதே பாதை மீது பெரமோன் உமிழ்ந்து மேலும் உறுதி செய்யும். இவ்வாறு அடுத்தடுத்த எறும்புகள் பெரமோன் வழித்தடத்தை ஏற்படுத்த எளிதில் மற்ற எறும்புகள் அதன் வழியாக உணவைச் சென்றடையும். இந்தச் செயற்பாடுதான், நமது பார்வைக்கு எறும்புகள் வரிசை வரிசையாகச் செல்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.4. சனிக் கோளைச் சுற்றி ஒரு வட்டம் எவ்வாறு உருவானது? அதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா?டி.முஹம்மது அசாருதீன், கடலூர்.சிறிய தொலைநோக்கியில் தென்படும் அளவுக்கு, சனிக் கோளைச் சுற்றி பிரமாண்டமான வளையம் இருக்கிறது என்றாலும், ஜுபிடர் எனப்படும் வியாழன், யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்களுக்கும் வளையம் உண்டு. இந்த வளையங்கள் சிறு கற்கள், மணல் மற்றும் பனிக்கட்டி முதலியவற்றால் ஆனது. இந்தக் கோள்கள் அளவில் பெரியதாக இருப்பதால், கூடுதல் ஈர்ப்பு விசை கொண்டவை. எனவே, இதன் அருகில் வரும் வால்மீன், விண்பாறைகள் போன்றவற்றை ஈர்த்தே இந்த வளையங்கள் உருவாகின என கருதுகிறார்கள்.