உள்ளூர் செய்திகள்

வெங்கியை கேளுங்க!

மாணவர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி1. ஆறு, குளம், ஏரியில் நீர் குறைந்து வற்றுகிறது. அதுபோல் கடல் வற்றுமா?கு.லோகேஸ், 5ஆம் வகுப்பு, இந்து ஆரம்பப் பள்ளி, பாப்பையநாயக்கர்பட்டி.புழுக்கமான சமயத்தில் ஆவியாகும் வேகம் குறையும். உலர்ந்த காற்று வீசும்போது, ஆவியாதல் விரைவாக ஏற்படும். ஒரு தட்டில் நீரை வைத்தால் அது வேகமாக ஆவியாகிவிடுகிறது. அந்தத் தட்டுக்கு வேறு எங்கிருந்தும் நீர் வருவதில்லை. எனவே, தட்டு வறண்டு போகிறது. அதேபோல ஆறு, குளம், ஏரி முதலியவற்றுக்கு மழைக்காலங்களில் மட்டுமே நீர் வரத்து உள்ளது. கங்கை போன்ற நதிகளுக்கு ஆண்டு முழுவதும் இமாலயப் பனிப்பாறைகள் உருகி நீர் வருவதால், அவை வறண்டு போவதில்லை.எல்லா நதிகளும் கடலில்தான் கலக்கின்றன. மேலும், ஆறு, ஏரி போன்ற நீர்ப்பகுதிகளில் இருந்து ஆவியாகும் நீர், விண்ணுக்குச் சென்று மீண்டும் குளிர்ந்து மழையாகப் பொழிகிறது. உலகில் எங்காவது கடலில் மழை பொழிந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே, எப்போதும் கடலுக்கு நீர் வரத்து இருந்துகொண்டே இருக்கும். எனவே, கடல் வற்றுவது இல்லை. எனினும் கோடைக்காலத்தில் நீர் விரிந்து உயரம் கூடியும், குளிர்காலத்தில் நீர் பருமன் சுருங்கி கடல் மட்டம் குறைந்தும் காணப்படும். உடனடியாகக் கடல் வற்றாது. ஆனால், பூமியில் கூடிக்கொண்டே போகும் அதிவெப்பத்தினாலும் தொடர்ந்து மழை பொழியாமல் போனாலும் சில கோடி ஆண்டுகளில் வற்ற வாய்ப்பிருக்கிறது. 2. புளூட்டோ கோள் எவ்வாறு அழிந்தது? அதுபோல் மற்ற கோள்களும் அழிய வாய்ப்பிருக்கிறதா?ஜெ.கமலீஸ்வரன், 4ஆம் வகுப்பு, ஜவஹர் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி, பு.முட்லூர், கடலூர்.மெர்க்குரி, வீனஸ், பூமி, செவ்வாய், ஜுபிடர், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்கள் கண்டறியப்பட்டு இருந்தன. 1930இல் கிளைட் டாம்பாக் (Clyde Tombaugh) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட புளூட்டோ, கோள்களின் வரிசையில் 9வது கோளாக அடையாளப்படுத்தப்பட்டது. நீங்கள் கேட்பதுபோல் புளூட்டோ அழியவில்லை. எப்போதும் போல சூரியனைச் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது. வௌவால் பறக்கும் என்றாலும், அதைப் பறவை என்று கூறாமல் பாலூட்டி விலங்கு என்றே கூறுகிறோம். அதுபோலவே, புளூட்டோ பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப்பிறகு, அதனை முழுமையான ஒரு கோளாக வரையறை செய்யமுடியாது என, 2006இல் சர்வதேச வானியல் கழகம் அறிவித்தது. ஆகையால், கோள் என்ற பதவி மட்டும் போனதே தவிர, புளூட்டோ அழியவில்லை. அதுபோல், மற்ற எட்டு கோள்களுக்கும் அதன் பதவிக்கும் எந்த ஆபத்தும் இல்லை.3. தென்னை, பனை மரங்களுக்கு ஏன் கிளைகள் இருப்பதில்லை? ப.விஜய், 5ஆம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சுல்தான்பேட்டை, திருப்பூர்.மரம் எனும் வகைப் பிரித்தல் வெறும் வழக்கம் சார்ந்த ஒன்று. எனவேதான் தாவரவியல்படி, குறுஞ்செடி வகை சார்ந்த வாழையை மரம் என கூறுகிறோம். எனவே, கிளை இருந்தால்தான் மரம் என்று வகைப்படுத்த ஏதும் இல்லை. தாவர வகைப்பாட்டியல் என்பது, இப்பூமியில் உள்ள தாவரங்களை உருவாக்கப்பட்ட முறைமை. இதில், அறிவியல் முறைப்படி பெயரிடுவது தாவரப் பெயரிடல் முறைமை (Botanical Nomenclature) எனப்படும். அப்பெயரிடல் முறை, பன்னாட்டு தாவரவியல் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படும், வகைப்பாட்டு முறைமையாகத் திகழ்ந்து இருக்க வேண்டும்.தாவரங்களைப் பகுக்கும் இரு பெரும் பிரிவுகள் 1. பூக்கும் தாவரம்* ஒருவித்திலை* இருவித்திலை2. பூக்காத தாவரம் * விதைமூடாத தாவரம்* பாசி* பெரணி4. ஏ.சி.யில் இருந்து தண்ணீர் கிடைக்கும் எனில், அதே தொழில்நுட்பத்தை வைத்து நிறைய தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யலாமே?வி.தர்ஷனா, 10ஆம் வகுப்பு, கியானி வித்யா மந்திர், கோவை.ஏசியில் உள்ள கம்ப்ரசர் கருவி, குறிப்பிட்ட ஒரு வாயுவை ஆவியாக்கி, சுருள் குழாய் மூலம் வெளியேற்றும். சுருள் குழாய் வழியே பாய்ந்து செல்லும்போது, அந்த வாயு விரிவடைகிறது. இதனால், அதன் வெப்ப நிலை குறைந்து குளிர்ந்து விடும். குளிர்ந்த அந்தச் சுருள் குழாய் காற்றில் உள்ள நீராவி பட்டு நீர்த்திவலைகளாக மாறும்.எனவே, காற்றில் ஈரப்பதம் கூடுதலாக இருந்தால், வெளியேறும் நீரின் அளவு கூடுதலாக இருக்கும். ஈரப்பதம் குறைந்து உலர்ந்த காற்றாக இருந்தால், சில சொட்டு நீர்தான் வெளிவரும். ஒரு மதிப்பீட்டின்படி பெரிய ஏ.சி. சுமார் 15 முதல் 75 லிட்டர் நீரை ஒரு நாளைக்கு ஆவி சுருங்கல் வினையின் வழி திரவ நீராக மாற்றும்.ஒரு நாள் முழுவதும் ஏ.சி. இயங்க பெருமளவு மின்சாரம் தேவை. எனவே, இந்தத் தொழில்நுட்பத்தை வைத்து நிறைய தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்வது உகந்ததாக இருக்காது. ஆனாலும், பெரிய கம்பெனி, மால் போன்ற இடங்களில் இவ்வாறு உருவாகும் நீரைச் சேகரித்து பல்வேறு செயற்பாடுகளுக்கு உபயோகப்படுத்த முடியும். பல மேலைநாடுகளில் செடிகளுக்கு நீர் பாய்ச்சுதல், கழிவறை நீர் போன்ற பயனுக்கு இவ்வாறு சேகரிக்கப்படும் நீரைப் பயன்படுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !