பாறையாகப் படுத்திருக்கும் யானை
யானை கால்களை மடித்து உட்கார்ந்து இருப்பதைப் போன்ற கம்பீரமான தோற்றத்துடன் இருக்கும் பாறை அமைப்புதான் 'யானை மலை'. இது இயற்கையின் அருட்கொடையாக விளங்குகிறது. யானை மலை மதுரை அருகே ஒத்தக்கடையில் இருக்கிறது. நகரில் இருந்து பார்த்தால் ஒரு யானை படுத்திருக்கும் தோற்றம் தெரியும். யானை மலையைச் சுற்றியுள்ள சமதளப் பகுதிகள் வேளாண்மை செழித்த பகுதிகளாக உள்ளன. யானை மலை லட்சக்கணக்கான மக்களின் வழிபடும் இடமாகவும் திகழ்கிறது. புராண நூல்கள் பலவற்றில் யானை மலை பற்றிய கதைகள் இடம்பெற்றுள்ளன. யானை மலையைச் சுற்றியுள்ள ஒத்தக்கடை, நரசிங்கம், மலைச்சாமிபுரம், அரும்பனூர், கொடிக்குளம், உலகனேரி, உத்தங்குடி, புதுத்தாமரைப்பட்டி, திருமோகூர், ராஜகம்பீரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்களின் வாழ்வியலோடு யானை மலையும் கலந்துள்ளது. பல கிராமங்களில் மலைச்சாமி வழிபாடும், யானை அடையாளங்களும் மக்களுக்கும், மலைக்குமான உறவை வெளிப்படுத்துகிறது.யானை மலையின் உச்சியில் உள்ள குகைத் தளத்தில், சமணர் படுகைகள் அமைந்துள்ளன. அங்கு கி.பி. முதலாம் நூற்றாண்டில் பதியப்பட்டு தமிழ் பிராமி எழுத்துகள் தளங்களில் காட்சியளிக்கின்றன. இங்குள்ள குகைகளில் குளுமையான சூழல் நிலவுகிறது. மலையில் உள்ள லாடன் கோயில் ரம்மியமாகக் காட்சியளிக்கும்.கோவில் அருகில் உள்ள சுனை நீர் மலையேறுபவர்களின் தாகம் தீர்க்கும். யானை மலையைச் சுற்றி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இயற்கை நடை செல்வது உண்டு. மலையைச் சுற்றி தாமரைக் குளங்கள், சுனைகள், பழத்தோட்டங்கள், தேன் ராட்டைகள் என, இயற்கையின் அடையாளமாகத் திகழ்கிறது யானை மலை. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களின் கண்காணிப்பு மேடை, மலை உச்சியில் காணப்படுகிறது. திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் செல்வோருக்கு வரலாற்றுப் பதிவுகளுடன் கூடிய இயற்கைக் காட்சிகள் யானை மலை அடிவாரத்தில் விருந்து படைக்கும். 4 ஆயிரம் மீட்டர் நீளத்தில் ஆயிரத்து 200 மீட்டர் அகலத்தில் 400 மீட்டர் உயரத்தில் இருக்கிற இம்மலையை 'உலகின் மிகப்பெரிய கல்' என்கின்றனர். நரசிங்கமங்கலம் என்ற பெயரும் இந்த மலைக்கு உண்டு.- ஜெ. பிரபாகர்