புதிய மனிதன்
உலகில் மனிதன் தோன்றியது ஆப்பிரிக்காவில்தான் என்பது ஆய்வாளர்களின் தீர்மானமான கருத்து. ஆதி மனிதன் அங்கிருந்து வெவ்வேறு காரணங்களால் பல கண்டங்கள் பெயர்ந்து, பரிணாம வளர்ச்சி பெற்று, கிளை பிரிந்து, இன்றைய உருவிற்கு வந்தான் என்பதும் அறிவியலின் தீர்மானம்.இவ்வாறு பிரிந்த கிளைகளில் சில நியண்டர்தால் (Neanderthal), டெனிஸொவன் (Denisovan), ஹோமோ ஸேபியன்ஸ் (Homo sapiens) ஹோமோ ப்ளோரெஸியென்ஸிஸ் (Homo floresiensis). இந்தாண்டு, பிலிப்பைன்ஸ் நாட்டின் கால்லாவோ (Callao) குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட சில கை, கால் எலும்புகள், பற்களை ஆய்வுசெய்ததில், அவை இரு பெரியவர்கள், ஒரு குழந்தையினுடையது என்பது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அவை இதுவரை அடையாளம் காணப்படாத ஒரு மனித இனத்தைச் சேர்ந்தவை என்றும் ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. 67,000 ஆண்டுகள் பழமையான இந்த எலும்புகளைக் கொண்ட மனிதர்களுக்கு, ஆராய்ச்சியாளர்கள் ஹோமோ லூஸோனென்ஸிஸ் (Homo luzonensis) என்று பெயரிட்டிருக்கிறார்கள். லூஸோன் (Luzon) என்னும் தீவில் கண்டுபிடிக்கப்பட்டதால், இந்தப் பெயர். பிலிப்பைன்ஸ் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பழமையான எலும்புகள் இவை என்பதும் கூடுதல் தகவல்.மனிதனின் பரிணாம வளர்ச்சியைப்பற்றி நாம் அறிந்தது, கைமண் அளவுதான். அறிய வேண்டியது உலக அளவு என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா என்ன? - பவித்ரா ஸ்ரீனிவாசன்