உள்ளூர் செய்திகள்

வலி மிகுதல் - 31: பண்புத்தொகையில் வலி மிகுமா?

இரண்டு சொற்கள் சேர்ந்து வருகையில், இரண்டாம் சொல்லின் பண்பினை விளக்குமாறு முதற்சொல் இருக்கும். 'சிறுபொருள்' என்ற சொல்லில் அதன் அளவை விளக்க, 'சிறு' என்ற சொல் அதன் முன்னே ஒட்டியிருக்கிறது. நிறம், வடிவம், சுவை, குணம், எண்ணிக்கை போன்றவற்றை விளக்கும் வண்ணம் முதற்சொல் அமைந்திருக்கும். முதற்சொல்லானது 'மை' விகுதியோடு விரியும். சிறுபொருள் என்பது சிறுமை + பொருள் என்பதன் பண்புத்தொகை வடிவம். சிறுமை 'ஆகிய' பொருள் என்று பண்புத்தொகையை விரித்துப் பொருள் கொள்ளலாம்.மை விகுதி கெட்டுச் சேர்கின்ற சொற்களில் பெரும்பாலும் வலி மிகுவதில்லை. சிறுகாடு, சிறுபுதர். ஒரு, இரு ஆகிய சொற்களின் சேர்க்கையில் அமைவனவற்றையும் பண்புத்தொகையாக விரிக்கலாம். அதற்கும் வலி மிகாது.ஒருமை + கரடி = ஒரு கரடி இருமை + கோடுகள் = இரு கோடுகள்.வேறு சில சொற்சேர்க்கைகளில் வல்லொற்றுக்கு மாற்றாக இன மெல்லொற்று தோன்றும்.க் = ங். ச் = ஞ், த் = ந். ப் = ம் ஆகியன ஒன்றுக்கொன்று இனமான ஒற்றுகள்.அருமை + சொல் என்று சேருமிடத்தில், மை விகுதி கெட்டு 'அரு + சொல்' என்று நிற்கும். சொ என்பது சகர எழுத்தில் தொடங்குவதில் அதற்குரிய இனமெய் ஞ் என்னும் எழுத்து, இடையில் தோன்றும். அருஞ்சொல் என்று ஆகும். கருமை + குயில் = கருங்குயில் (இரண்டாம் சொல் கு என்று தொடங்குவதால் ங் வந்தது)வெறுமை + சோறு = வெறுஞ்சோறு (இரண்டாம் சொல் சோ என்று தொடங்குவதால் ஞ் வந்தது)பழமை + தமிழ் = பழந்தமிழ் (இரண்டாம் சொல் த என்று தொடங்குவதால் ந் வந்தது)குறுமை + பாக்கள் = குறும்பாக்கள் (இரண்டாம் சொல் பா என்று தொடங்குவதால் ம் வந்தது)பண்புத்தொகைக்கு என்று தனியே புணர்ச்சி இலக்கணம் இருக்கிறது. மேற்சொன்னவை அவற்றின் சில நிலைமைகளே ஆகும்.- மகுடேசுவரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !