வலிமிகுதல் - பகுதி 2: பூங்கோதையின் இலக்கணம்
தமிழில் ஒரே எழுத்து ஒரு சொல்லாகவும் வரும். சான்றாக, 'பூ' என்ற சொல் ஒரே எழுத்தால் ஆனது. கை, நா, தை, பை, தீ போன்ற சொற்களைப் பாருங்கள். அவை யாவும் ஓரெழுத்துச் சொற்களே. இலக்கணத்தில் மொழி என்பது சொல்லைக் குறிக்கும். அதனால் அச்சொற்களை 'ஓரெழுத்து ஒருமொழி' என்பார்கள். ஓர் எழுத்தே ஒரு மொழியாக (சொல்லாக) வழங்கப்படுவதால் அப்பெயர்.ஓரெழுத்து ஒருமொழியை அடுத்து வரும் சொல் எவ்வகைச் சொல்லாயினும், அதற்குக் க,ச,த,ப வரிசையில் முதலெழுத்து தொடங்குமெனில் அங்கே வலி மிகும்.உதாரணமாக, பூப்பறித்தாள் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம்.பூ என்பது ஓரெழுத்து ஒருமொழி. “பறித்தாள்' என்பதில், முதலெழுத்து வல்லினம். ஓரெழுத்து ஒருமொழியைத் தொடர்ந்து க,ச,த,ப வந்ததால், வலிமிகும் அல்லவா?ஆகவே,பூ+பறித்தாள்= பூப்பறித்தாள்.அதுபோலவே,பூ+செண்டு = பூச்செண்டுபூ என்ற ஓரெழுத்து ஒருமொழிக்கு எல்லா இடங்களிலும் வல்லின மெய் தோன்றுவதில்லை; மெல்லினமும் வரும். (பூப்பெயர் முன் இனமென்மையும் வரும் என்பது, இதற்கான விதி).பூ + கோதை என்று வந்தால், பூக்கோதை என்பதை விடவும் பூங்கோதை என்பதுதானே இனிமையாக இருக்கிறது. அதனால் 'க்' என்ற வல்லின மெய்க்கு மாற்றாக 'ங்' என்னும் மெல்லின மெய் தோன்றியிருக்கிறது. அதாவது, அதே வல்லினத்துக்கு இனமான மெல்லினம்.இன எழுத்துகளை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இல்லாவிடில் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.'க்' என்ற வல்லினத்திற்கு'ங்' என்பது இனமெல்லினம்.அதனால்தான்பூங்காற்று, பூங்கொடி என்று எழுதுகிறோம்.'ச்' -'ஞ்' இரண்டும் இன எழுத்துகள். உதாரணம்: பூஞ்சோலை 'த்' 'ந்' இரண்டும் இனவெழுத்துகள் உதாரணம்: பூந்தென்றல் 'ப்' -இன் இனமெல்லினம் 'ம்'. உதாரணம்: பூம்பாதை- மகுடேசுவரன்