உள்ளூர் செய்திகள்

சிகரம் தொடும் சிந்து!

ரியோ ஒலிம்பிக் 2016, பேட்மிண்டன் பரபரப்பான இறுதிப்போட்டி. உலகின் முன்னிலை ஆட்டக்காரர் கரோலினா உடன் முதல் செட் ஆட்டத்தில் 21:19 எடுத்து நம்பிக்கை அளித்தார். இரண்டாவது செட்டில், யாரும் எதிர்பாராத விதமாக 12:21 என்று தோல்வியைத் தழுவினார். அடுத்ததாக நடைபெற இருக்கும் மூன்றாவது செட் ஆட்டம்தான் வெற்றியை நிர்ணயிக்கும். தொடக்கத்தில் சற்றுப் பின்தங்கினாலும், போராடி 10:10 என்ற அளவில் சமநிலை பெற்றார். நீண்ட நேர ஆட்டத்தின் இறுதியில் 15:21 என்று தோற்று, தங்கம் இழந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். அறிமுகமான முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே பேட்மிண்டனில் முதல் முறையாக வெள்ளிப்பதக்கம்; வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையையும் படைத்தார் 21 வயதான பி.வி.சிந்து.ஒலிம்பிக்கில் ஏற்பட்ட தோல்விக்குப் பதிலடி கொடுப்பது போல, ஏப்ரல் 2, 2017ல் கரோலினா மரினை மீண்டும் களத்தில் சந்தித்தார். அதற்கான வாய்ப்பை இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதிப் போட்டி சிந்துவுக்கு அமைத்துக் கொடுத்தது. மரினை எதிர்த்து சிந்து ஆக்ரோஷமாக விளையாடினார். 21:19, 21:16 என்ற நேர் செட் கணக்குகளில் மரினை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம், ரியோ ஒலிம்பிக் தோல்விக்கு மரினை வீழ்த்தி பதிலடி கொடுத்தார் சிந்து!சிந்துவின் பெற்றோர் இருவரும் கைப்பந்து விளையாட்டு வீரர்கள்;தந்தை அர்ஜுனா விருது வென்றவர். சிந்துவின் சாதனைகளுக்குப் பின்னால் இருப்பவர் பயிற்சியாளர் கோபிசந்த். இவரது அகாடமியில்தான் சிந்து பயிற்சி பெற்று வருகிறார். 2015ம் ஆண்டு சிந்துவுக்கு ஏற்பட்ட காயத்தின் காரணமாக தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. கோபிசந்த் இதற்கு வேறு வழியில் தீர்வு கண்டார். சிந்துவை சக்கர நாற்காலியில் அமர்த்தி, பாட்மிண்டன் விளையாட அழைத்து வந்தார். கோபிசந்த் பந்தை அடிக்க, மறுபுறம் நாற்காலியில் அமர்ந்தபடியே சிந்து திருப்பி அனுப்புவார். இத்தகைய கடின பயிற்சிகள்தான், சிந்துவின் வெற்றிக்கு இன்றும் உறுதுணையாக இருக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !