உள்ளூர் செய்திகள்

மழை தோய் மாடத்து முகில்

தமிழ் மக்கள் ஐவகை நிலங்களில் வசித்தார்கள் என்பது தெரியும். அவர்கள் எத்தகைய வீடுகளில் வசித்தார்கள்? குறிஞ்சி நில மக்கள் சிறிய கொம்புகளை நட்டுத் தினையரி தாளால் வேய்ந்த குடில்களில் வாழ்ந்தனர். குறிஞ்சி நிலத்தின் ஊர் 'சிறுகுடி' எனப்பட்டது (குறிஞ்சிப் பாட்டு: 153 -54)முல்லை நில மக்களும் குடிசைகளில்தான் வசித்தார்கள். புல், வைக்கோல், நெல்லந்தாள், கரும்புத் தோகை, வரகுக்கற்றை போன்றவற்றால் குடிசைகள் வேயப்பட்டிருந்தன. குடிசையை பழந்தமிழில் 'குரம்பை' என்று அழைத்தனர். முல்லை நில மக்களின் குடிசை வீடுகளில் முற்றம் இருந்தது. விவசாயக் கருவிகள் வைக்க இடம் ஒதுக்கி இருந்தனர். குடிசைகள் சிறு வாயில்களைக் கொண்டிருந்தன. ஆநிரைகளைப் பாதுகாக்கும் கொட்டில்கள் இருந்தன. வெள்ளாடும் செம்மறியாடும் வரகுக் கற்றையால் ஆன வேலியினுள் அடைக்கப்பட்டிருந்தன (பெரும்பாணாற்றுப்படை 147- - 180). மக்கள் படுத்துறங்க வரகுக் கற்றையால் வேய்ந்த படுக்கையைப் பயன்படுத்தினர். படுக்கை விரிப்பாக, கிடாயின் தோலும் விரிக்கப்பட்டிருந்தன.குடிசை, சிறிய நுழைவாயிலைக் கொண்டிருந்தது. முல்லை நில வேளாண் மக்கள் வரகு அதிகமாகப் பயிரிட்டமையால், வரகுத்தட்டையை அதிகமாகப் பயன்படுத்தினார்.(பதிற்றுப் பத்து 30: 22 - 23)நெய்தல் நில மக்கள், கடலையடுத்த மணல் பகுதியில் குடில்கள் அமைத்து வாழ்ந்தனர். இவர்கள் குடிசைகளும் புல்லால், குறுகலான நுழைவாயில்களைக் கொண்டு கட்டப்பட்டிருந்தன. இக்குடிசைகள் கூட்டமாக இருந்தன. மருத நில மக்கள் வசித்த இடங்கள் பேரூர், மூதூர் என அழைக்கப்பட்டன. இவர்கள் வைக்கோலால் வேயப்பட்ட குடிசைகளில் வாழ்ந்தனர். ஏழைகள் சிற்றூர்களில் சிறுவீடுகளில் வசித்தனர். பந்தல்களிலே பசுங்கன்றுகள் கட்டப்பட்டிருந்தன. வீடுகள் பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்டன.'செழுங்கன்று யாத்த சிறுதாட்பந்தர்ப்பைஞ்வேறு மெழுகிய படிவநன்னகர்' (பெரு- 297, 298)என குறிப்பிடுகிறது பெரும்பாணாற்றுப்படை.மன்னரும் செல்வரும் மாளிகைகளில் வாழ்ந்தனர். நகரத்தில் மாளிகையும் மாடங்களும் உயர்ந்தோங்கி காட்சியளித்தன. இத்தகைய மாடங்களின் சிறப்பை, 'மழை தோயும் மாடம்', 'முகில் தோய் மாடம்' என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. தெருக்கள் ஆறு போலவும், இருமருங்கும் உள்ள மாடங்கள் ஆற்றின் கரை போலவும் இருந்ததாக மலைபடுகடாம் பாடல் குறிப்பிடுகிறது. பெரிய வீடுகளில் அரண்மனையைப் போலவே சாளரங்கள் (ஜன்னல்) பொருத்தியிருந்தனர். அவை மானின் கண்களைப் போலத் தோற்றமளித்தன. நிலா முற்றங்கள் காற்று, வெளிச்சம் வரத்தக்கதாக இருந்தன. வீடுகள் சுட்ட செங்கற்களால் (இட்டிகை) கட்டப்பட்டிருந்தன என்பதை,'சுடுமண் ஓங்கிய நெடுநகர் வரைப்பின்' என பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகிறது. மாடங்கள் மட்டுமன்றி, மண்டபங்களையும் பலவிதமான அழகிய வேலைப்பாட்டுடன் அமைந்திருந்தனர் என சிலப்பதிகாரம் கூறுகிறது.- ஸ்ரீதேவி மோகன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !