ரீலா? ரியலா?
* அன்றாட வாழ்வில் உடலுக்குத் தேவைப்படும் கலோரி அளவில் கொழுப்புச்சத்தின் பங்கு 25 சதவீதம்.உண்மை. உடலுக்குத் தேவைப்படும் சக்தியில், 25 - -30 சதவீத கலோரிகள், கொழுப்புச்சத்திலிருந்து கிடைக்க வேண்டும். அதில் 10 சதவீதம் மட்டுமே நிறைவுற்ற கொழுப்புச்சத்தாக (Saturated fat) இருந்தால் போதுமானது. பால், நெய், தேங்காய் எண்ணெய், இறைச்சி ஆகியவற்றில் நிறைவுற்ற கொழுப்புச்சத்து உள்ளது. ஆலிவ் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் நிறைவுறா கொழுப்புச்சத்து உள்ளது. கொழுப்புச் சத்து குறைபாட்டால் தோல் நோய்கள், முடி கொட்டுதல், வைட்டமின் குறைபாடு, நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடு ஏற்படும்.* பூஞ்சைகளைத் தாக்கும் வைரஸ்களுக்கு 'பாக்டீரியோஃபேஜ்' என்று பெயர்.தவறு. பாக்டீரியங்களைத் தாக்கும் வைரஸ்களுக்குத்தான் பாக்டீரியோஃபேஜ் என்று பெயர், பூஞ்சைகளைத் தாக்கும் வைரஸ்களை மைக்கோவைரஸ் (Mycovirus) அல்லது மைக்கோஃபேஜ் (Mycophage) என்று அழைப்பர். ஹெமி வைரஸ் (Hemivirus), மைக்கோரியோவைரஸ் (Mycoreovirus) ஆகியவை மைக்கோவைரஸ்களுக்கு உதாரணமாகும். மைக்கோவைரஸ்களைப் பற்றிப் படிக்கும் பிரிவின் பெயர், 'மைக்கோவைராலஜி' ஆகும். இது வைராலஜியின் ஓர் உட்பிரிவாகும். இத்துறை இவற்றின் வகைப்பாடு,தோற்றம், பரிணாமம், மைக்கோவைரஸின் பரவல், இயக்கம் ஆகியவற்றை விரிவாக விவரிக்கிறது.