உள்ளூர் செய்திகள்

சஹாரா: பாலை அல்ல சோலை!

பருவநிலை மாற்றங்கள் குறித்து நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். உலகம் தோன்றிய நாளிலிருந்து வெப்பமும் குளிர்ச்சியும் மாறி மாறி பூமியைப் பண்படுத்தி, தட்பவெட்பத்தை நிலைப்படுத்தின. மனிதன் தோன்றிய பிறகும் இந்த மாற்றங்கள் உலக அளவில் நிகழ்ந்த வண்ணமே இருந்தன. ஆறுகள் தடம் மாறின, மலைகள் பெயர்ந்தன. குளங்கள் வற்றின. கடல்கள் பின்வாங்கின, அல்லது உள் நகர்ந்தன. பரந்த சமவெளிகளும் இதற்கு விதிவிலக்கல்ல; தண்ணீர் வற்றி, செடிகொடிகள் காய்ந்து, மனிதர்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.அப்படி ஓர் இடம்தான் ஆப்பிரிக்காவின் வடமேற்குக் கடற்கரையை ஒட்டிய சஹாரா பாலைவனம். இந்தப் பாலைவனத்தை ஒட்டி உள்ளது, டிபாரிட்டி (Tifariti) என்னும் ஊர். இதன் வடக்கே, 400க்கும் மேற்பட்ட கல் சின்னங்கள் இவ்வாண்டு கிடைத்தன. இவை, 10,000 ஆண்டுகள் பழமையானவை என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். அது சரி, மனித நடமாட்டமே இல்லாத பாலைவனப் பிரதேசத்தில் இத்தனை சின்னங்கள் கிடைக்கக் காரணம், ஒரு காலத்தில், சஹாரா பாலைவனமாக இல்லை என்பதுதான்!ஆம்; பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், தண்ணீர் வளம் நிறைந்த பகுதியாகத்தான் இருந்தது இந்த வறண்ட பிரதேசம். பருவநிலை மாற்றத்தால் கொஞ்சம் கொஞ்சமாக நீர்வளம் குறையத் தொடங்கியது. இதன் காரணமாக, அருகே இருந்த மொராக்கோ, லிபியா, அல்ஜீரியா ஆகிய நாடுகளிலிருந்து இங்குவந்து குடியேறிய மக்கள், வேறு வழியின்றி வெளியேறி இருக்கவேண்டும். அவ்வாறு பெயர்ந்த மக்கள் விட்டுச் சென்ற சின்னங்கள்தான் இவை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். - குறிஞ்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !