தேதி சொல்லும் சேதி
ஆகஸ்ட் 26, 1883 - திரு.வி.க. பிறந்த நாள்திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார். கவிஞர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் என, பல துறைகளிலும் ஈடுபட்ட தமிழறிஞர். இவரது தமிழ்நடையின் காரணமாக 'தமிழ்த் தென்றல்' என்று அழைக்கப்பட்டார்.ஆகஸ்ட் 26, 1910 - அன்னை தெரசா பிறந்த நாள்கருணையின் உருவமாக, சேவையின் உறைவிடமாக இன்றும் புகழப்படுகிறார். கோல்கட்டாவில், 'பிறர் அன்பின் பணியாளர் சபை'யை நிறுவி, ஏழைகள், நோய்வாய்ப்பட்டோர், ஆதரவற்றோருக்குத் தொண்டாற்றினார். 1979இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.ஆகஸ்ட் 29, 2009 - சர்வதேச அணு ஆயுதச் சோதனை எதிர்ப்பு நாள் 1945ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப்போரின் கடைசியில், ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. அதன் பிறகு பல அணு ஆயுத சோதனைகள் உலகம் முழுக்க நடத்தப்பட்டுள்ளன. இதன் விளைவுகள் பற்றியும், பரவலைத் தடுக்கவும் ஐ.நா. சார்பில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.ஆகஸ்ட் 29, 1905 - தயான் சந்த் பிறந்த நாள்இந்திய ஹாக்கி விளையாட்டு வீரர். இராணுவ அணி சார்பில் ஹாக்கி விளையாடி, இந்திய அணியின் கேப்டன் ஆக உயர்ந்தார். 1928, 1932, 1936ஆம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்ல உதவினார். இவரது பிறந்த நாள் இந்திய தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 30, 1981 - சர்வதேச காணாமல் போனோர் நாள்உலகின் பல நாடுகளிலும் காவல்துறை அல்லது பாதுகாப்புப் படையால் கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. இரகசியமான கைதுகளுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள், செஞ்சிலுவைச் சங்கங்கள் போராடி வருகின்றன.ஆகஸ்ட் 30, 1871 - எர்னெஸ்ட் ரூதர்ஃபோர்டு பிறந்த நாள்நியூசிலாந்து இயற்பியலாளர். விஞ்ஞானி ஜே.ஜே.தாம்சனின் மாணவர். அணுக்களைப் பிளக்க முடியும் என்று இவர் நிரூபித்த உண்மை அணுகுண்டு தயாரிக்க அடிப்படையாக அமைந்தது. 1908ஆம் ஆண்டு, வேதியியலில் நோபல் பரிசு பெற்றார்.