உள்ளூர் செய்திகள்

மைதானம்: டிக்கெட் வாங்காத சிறுவன் சிலை வைத்த ஸ்டேடியம்

இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் நான். என்னுடைய தொடக்கக் காலத்தில் பெரிய மைதானங்களில் பயிற்சியெடுக்க, போதிய வசதி இல்லை. என் வீட்டருகே பெரிய மைதானமும் இல்லை. ஆனால், எனக்கு கிரிக்கெட் மீது தீராத ஆர்வம் இருந்தது. எனது திறமையை வளர்த்துக்கொள்ள, ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்தேன்.எனது வீட்டிற்கு அருகில் இருந்த, ஒரு சுவரில் பந்தை தூக்கி வீசுவேன். அது சுவரில் மோதி திரும்பி வரும்போது, ஓடிச்சென்று பிடிப்பேன். பல மணிநேரம், ஒவ்வொரு நாளும் இதையே செய்தேன். சுவரில் அடித்த பந்து, வெவ்வெறு திசைகளில் செல்லும். அதை ஓடிச்சென்று பிடிப்பதற்கு என்னைத் தயார்படுத்திக்கொண்டேன். இது பந்தின் திசையைக் கணிக்க எனக்குப் பெரிதும் உதவியது. உறங்கும் போது கூட கிரிக்கெட் மட்டையை பக்கத்தில் வைத்துக்கொண்டே உறங்கினேன். என்னுடைய கிரிக்கெட் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட பெற்றோரும், அண்ணன் அஜித்தும் பெரிதும் ஊக்கம் தந்தனர்.ஒரு முறை எனது அண்ணனும், அவரின் நண்பர்கள் 24 பேரும் சேர்ந்து, வான்கடே மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியைக் காணச் சென்றார்கள். அவர்கள் அனைவருமே முப்பது நாற்பது வயதுடையவர்கள். பத்து வயதான என்னையும் அவர்கள் அழைத்துச்சென்றார்கள். எனக்கு டிக்கெட் வாங்கவில்லை. இருபத்து நான்கு பேரும், சிறுவனான என்னை, டிக்கெட் பரிசோதிப்பவர் கண்களில் படாதவாறு, மறைத்துக்கொண்டு, மைதானத்துக்குள் அழைத்துச் சென்றார்கள். பின்னர் அதே ஸ்டேடியத்தில், நான் பந்து எடுத்துப்போடும் சிறுவனாகவும் இருந்தேன். என் பதினாறு வயதில் 1989 இல், பாகிஸ்தானுக்கு எதிராக, நான் விளையாட ஆரம்பித்தேன். பிறகு ஒவ்வொரு நாளும், கிரிக்கெட் என்னைப் புகழ் ஏணியில் கொண்டு போய் நிறுத்தியது. உலக அளவில் ஒரு நாள், டெஸ்ட் போட்டிகளில் 100 சதங்களை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையையும் நான் பெற்றேன். எந்த ஸ்டேடியத்திற்குள் டிக்கெட் வாங்காமல் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டேனோ, அதே அரங்கத்தில் 2023 நவம்பர் முதல் தேதி, என்னுடைய உருவச் சிலையை நான் திறந்து வைத்தேன். பிளேயிங் இட் மை வே (Playing It My Way) என்ற புத்தகத்தை எழுதிய, நான் யார்?விடை: சச்சின் டெண்டுல்கர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !