தடவி படி! தடவி அடி!
ஒவ்வொரு புத்தாண்டு வரும்போதும் நாங்கள் எல்லோரும் மூன்று கொண்டாட்டங்கள் நடத்துவோம். புத்தாண்டு அன்று ஒரு கொண்டாட்டம். அதற்கு முன் முந்தைய ஆண்டின் கடைசி இரவு நிறையப் பேர் கூடி உட்கார்ந்து ஒவ்வொருத்தரும் அவர்கள் படித்த ஒரு நல்ல புத்தகத்தைப் பற்றிப் பேசுவோம். பிறகு புத்தாண்டு முதல் வாரத்தில் வரும் ஞாநி மாமாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வோம். அன்றைக்கு அவருடைய நாடகக் குழுவினர் வீட்டுத் தோட்டத்திலேயே குட்டி நாடகம் போடுவார்கள். பாடுவார்கள். ஆடுவார்கள். கடைசியில் கேக் வெட்டும்போது கிரீமை எடுத்து மாமா முகத்தில் பூசுவார்கள். மாமா ஆண்டு முழுக்க எல்லா நண்பர்களின் பிறந்த நாட்களையும் கொண்டாடுவார். அவருக்கு அதுதான் பண்டிகை.ஒரு தடவை மாமாவிடம் கேட்டேன். “எங்களை மாதிரி சின்னப் பசங்களுக்கு எல்லோரும் பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். வயசானவர்கள் பிறந்தநாள் கொண்டாடுவது இல்லையே. நீங்கள் மட்டும் கொண்டாடுகிறீர்களே?”“வயசாக ஆக, நாம் உயிர் வாழ்வதை விட பெரிய சந்தோஷம் என்ன இருக்கிறது? உயிரோடு இருந்து வாழ்க்கையை அனுபவிப்பதற்கு அடிப்படைக் காரணமே நாம் பிறந்ததுதானே? அதைக் கொண்டாடவேண்டாமா?” என்றார் மாமா. “நீ ஒரு சாதனையாளராக இருந்தால் நீ இறந்தபின்னர் கூட உன் பிறந்தநாளை உலகம் கொண்டாடும்.” என்றான் பாலு. “நான் பிறந்த அதே நாளில் வேறு ஆண்டில் பிறந்தவர் லூயி பிரெயில். இன்றும் உலகம் முழுவதும் பார்வையற்றவர்கள் அவர் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்கள். பிரெயிலின் கண்டுபிடிப்பு இல்லாவிட்டால் அவர்களில் பெரும்பாலோர் கல்வி இல்லாமல் வறுமையில் துயரப்பட்டிருப்பார்கள்.” என்றார் மாமா.“நான் பிரெயில் என்பது பார்வையற்றவர்கள் வாசிக்கும் முறை என்று நினைத்திருந்தேன். அதைக் கண்டுபிடித்தவர் பெயரையே அதற்கு வைத்திருப்பது எனக்குத் தெரியாது.” என்றேன். மாமா பிரெய்லைப் பற்றி விரிவாகச் சொன்னார். பிரெஞ்சு சிறுவனான பிரெய்லுக்கு ஐந்து வயதுவரை கண் தெரியும். ஒரு கண்ணில் அடிபட்டு சீழ் பிடித்து இன்னொரு கண்ணுக்கும் பரவி இரு கண்களும் அவருக்கு குருடாகிவிட்டன. பார்வையற்றோருக்கான பள்ளியில் அவரைச் சேர்த்தார்கள். அங்கே ராணுவ அதிகாரி சார்லஸ் பார்பியர் என்பவர் வந்தார். அவர் நெப்போலியனின் ராணுவத்தில் இருந்தபோது இரவு நேரங்களில் வீரர்கள் சத்தம் எழுப்பாமல் பேசாமல் தகவல் பரிமாற ஒரு வழியைக் கண்டுபிடித்திருந்தார். ஒரு அட்டையில் பொறித்த எழுத்துகளை தடவிப் பார்த்து படிப்பது அந்த வழி. அந்த முறை பார்வையற்றவர்களுக்கு பயன்படுமா என்று இங்கே சோதித்தார்.அப்போது 15 வயது சிறுவனாக இருந்த பிரெயில் அந்தத் 'தடவு எழுத்து முறை'யில் இருந்த கோளாறுகளை நீக்கி இன்னொரு முறையை உருவாக்கினார். அதைத்தான் இப்போது 'பிரெயில் எழுத்து' என்று குறிப்பிடுகிறோம். பிரெயில் முறையில் இரு வரிசைகளில் ஆறு புள்ளிகள். எந்தப் புள்ளிகள் குமிழாகப் பொறிக்கப்பட்டு தடவினால் தட்டுப்படுகிறதோ அது ஒரு எழுத்துக்கான குறியீடு. இப்படி பிரெஞ்சு அகரவரிசைக்குத் தடவு எழுத்துகளை உருவாக்கினார் பிரெயில். அப்புறம் ஆங்கிலத்துக்கு உருவாக்கப்பட்டது. “தமிழ் உட்பட பல இந்திய மொழிகளுக்கு பிரெயில் குறியீடுகளை 1950லேயே உருவாக்கிவிட்டோம்” என்றார் மாமா. உலகம் முழுவதும் பிரெயில் முறை பரவியதால் பார்வையற்றவர்களுக்குக் கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. பிரெயில் படித்தவர்களில் 90 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைத்தது. படிக்காதவர்களுக்குக் கல்வியும் கிட்டவில்லை. வறுமையும் போகவில்லை. “பிரெயில் ஒரு இசைக் கலைஞரும் கூட. அதனால் சரிகமபதநி மாதிரி மேலை இசையில் இருக்கும் ஸ்வரக் கோர்வைகளையும் பிரெயில் முறையில் எழுதக் குறியீடுகளை உருவாக்கியிருக்கிறார்.” என்றார் மாமா. “பார்வையற்றவர்களுக்குத் தடவிப் பார்த்து படிக்க பிரெயில் இருப்பது போல, பார்வை உள்ளவர்களுக்கு தடவிப் பார்த்து எழுத்துகளை அடிக்க ஒரு மெஷின் இருந்தது தெரியுமா?” என்றார் மாமா. என்ன அது என்றேன். “டைப் ரைட்டர். சுமார் 200 ஆண்டுகள் உலகத்தையே ஆதிக்கம் செலுத்திய மெஷின் அது.” என்றார் மாமா. அவரிடம் இருந்த பழைய அண்டர்வுட் மெஷினைக் காட்டினார். மேலே உருளை மாதிரி இருக்கிறது அதன் வழியே பேப்பரை நுழைத்துச் செருக வேண்டும். முன்னால் இருக்கும்கீ போர்டில் ஒரு எழுத்தை அடித்தால், அந்த எழுத்துக்கு உரிய கம்பி போய் பேப்பர் மீது அந்த எழுத்தை ஒரு ரிப்பன் வழியாக பதிக்கிறது. “இது நம்ம கம்ப்யூட்டர் மாதிரிதானே. இதே கீபோர்ட்தான் இப்போது கம்ப்யூட்டரிலும் இருக்கிறது.” என்றான் பாலு. “டைப்ரைட்டரின் அடுத்த பரிமாணம்தான் வேர்ட் பிராசசர். அப்புறம் கம்ப்யூட்டர். ஆனால் கீபோர்ட் அதே க்வெர்ட்டி (Qwerty) கீபோர்ட்தான்.” என்றார் மாமா. “ஏன் கீபோர்டில் ஏ, பி,சி,டி, ஈ என்று வரிசையில் எழுத்துகள் இல்லாமல் இப்படி க்யூ, டபிள்யூ, ஈ, ஆர், டி,ஒய் என்று இருக்கிறது?” என்று கேட்டேன்.“எந்த எழுத்துகளை அதிகம் பயன்படுத்துகிறோம் என்ற ஆராய்ச்சியின் அடிப்படையில் கீபோர்ட் உருவாக்கப்பட்டது. 1575லிருந்து இத்தாலியில் பலர் டைப் ரைட்டர் மெஷின்களை விதவிதமாக உருவாக்கினார்கள். கடைசியில் 1867இல் பத்திரிகை ஆசிரியர் கிறிஸ்டோஃபர் ஷோல்ஸ் தான் இப்போதும் இருக்கும் டைப்ரைட்டரையும் க்வெர்ட்டி கீபோர்டையும் உருவாக்கினார். சுண்டு விரல் முதல் ஆள் காட்டி விரல் வரை ஒவ்வொரு விரலுக்கும் இன்ன எழுத்து என்ற முறையில் அடிக்க வேண்டும். சும்மா கீபோர்டைப் பார்த்துக் கொண்டு இரு ஆள்காட்டி விரல்களால் அடிக்கக் கூடாது. அப்போது ஸ்பீட் வராது. டைப்பிங் கற்றுத்தருவதற்கு ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு ஏரியாவிலும் ஒரு பயிற்சி நிலையம் முன்பு உண்டு. இப்போதும் ஒரு சில இருக்கின்றன. போய் கற்றுக் கொண்டால், கம்ப்யூட்டரிலும் ஸ்பீட் கிடைக்கும்.” என்றார் மாமா. பேனா எடுத்து கையால் எழுதினால் ஒரு நிமிடத்தில் இருபது சொற்கள் வரை எழுதலாம். ஒரு திறமையான டைப்பிஸ்ட் நிமிடத்துக்கு 50 சொற்கள் அடிப்பார். உலக சாதனை நிமிடத்துக்கு 215 சொற்கள் என்றது வாலு. “அரசியல்வாதி, அமைச்சராக ஆன ஒரு டைப்பிஸ்ட் தமிழ்நாட்டில் உண்டு” என்றார் மாமா. தி.மு.க. பொருளாளர், அமைச்சராக எல்லாம் இருந்த ஆற்காடு வீராசாமி மின்சார வாரியத்தில் டைப்பிஸ்டாக வேலை பார்த்தவர். ஆங்கில டைப்பிங், தமிழ் டைப்பின் இரண்டிலும் தமிழ்நாட்டில் ஸ்பீடில் முதல் இடத்தை வென்றவர் என்றார் மாமா.“இன்றைக்கு பார்வையற்றவர்களுக்கு பிரெயில் உபயோகம் குறைந்து வருகிறது. கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் டெக்ஸ்ட் வந்தால் அதை அப்படியே ஆடியோவாக மாற்றி ஹெட்போனில் ஒலிக்கும் தொழில்நுட்பம் வந்துவிட்டது. சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இதற்கு தனிப்பிரிவே இருக்கிறது. டைப்ரைட்டர் அரசு அலுவலகங்களில் கூட இப்போது இல்லை. கம்ப்யூட்டர்தான்.” என்றது வாலு. “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்பது நன்னூல்.” என்றார் மாமா. “எல்லா புதுசுலயும் கொஞ்சம் பழையதும் இருக்கும். எல்லா பழையதும் ஒரு காலத்துல புதுசுதான்.” என்றான் பாலு. “பாலு 2017இல் நீ சொன்னதுலயே அர்த்தமுள்ளது இதுதான்.” என்றேன்.வாலுபீடியா 1: கீபோர்டில் முதல் எழுத்து வரிசையான க்வெர்ட்டி வரிசையில் இருக்கும் எழுத்துகளை மட்டுமே பயன்படுத்தி அடிக்கக்கூடிய நீளமான ஆங்கிலச் சொற்கள் -'typewriter', 'proprietor', 'perpetuity', 'repertoire'.வாலுபீடியா 2: பிரெயில் பிறந்த நாள் - ஜனவரி 4, 1809.உலக டைப்பிங் தினம் - ஜனவரி 8