தமிழே அமுதே - கன்னடத்தில் தமிழ்ச்சொற்கள்
தென்னிந்தியாவில் பேசப்படும் பெருமொழிகளில் ஒன்று கன்னடம். தமிழிலிருந்து கிளைத்த மொழிகளிலேயே கன்னடம்தான் மிகுந்த பழைமையானது. பழங்கன்னடத்திற்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு மிகவும் நெருக்கமானது.ஒரு மொழியானது, பெருநிலப்பரப்பில் பரவி வாழும்போது காலப்போக்கில் வேறுபடுகிறது. அதுதான் புதுமொழி தோன்றுவதற்கான தோற்றுவாய். அவ்வாறு புதுமொழி ஆன பிறகு, அம்மொழியில் எண்ணற்ற சொற்கள், பழைமை மாறாமல் இருக்கும். அவற்றில் சிறிது திரிபுபட்டிருக்கும். திரிபுகள் ஒரே வழியில் இருக்கும். அதைக் கொண்டு கன்னடத்திலுள்ள தமிழ்ச் சொற்களை இனங்காண முடியும்.தமிழிலுள்ள சொற்கள் கன்னடத்தில் சிறிதே ஒலிப்பில் மாறுபட்டு வழங்கப்படும். தமிழில் 'ப' எழுத்தில் தொடங்கும் சொற்கள், கன்னடத்தில் 'அ' அல்லது 'ஹ' என்ற ஒலியாக மாறிவிடும்.தமிழில் பத்து என்பது, கன்னடத்தில் 'அத்து அல்லது ஹத்து'.தமிழில் பால் என்பது, கன்னடத்தில் 'ஆலு' அல்லது 'ஹாலு'.தமிழில் புலி என்பது, கன்னடத்தில் 'ஹுலி'.தமிழில் பல்லி என்பது, கன்னடத்தில் 'ஹல்லி'.தமிழில் பூ என்பது, கன்னடத்தில் ஹூவு. இவ்வாறு மாற்றம்பெறும் சொற்கள் ஒருவகை என்றால், பிற சொற்கள் இன்னொரு வகை. தமிழில் 'வ' கரத்தில் தொடங்கும் சொற்கள் கன்னடத்தில் 'ப' கரத்தில் தொடங்கும்.வாழை என்பது கன்னடத்தில் பாழைவாயில் என்பது கன்னடத்தில் பாயிலுவால் என்பது கன்னடத்தில் வாலஇவைதவிர, பற்பல தமிழ்ச்சொற்கள் தமிழில் உள்ளவாறே கன்னடத்திலும் வழங்கப்படுகின்றன. மண் என்ற சொல் கன்னடத்திலும் மண் தான். மரம் என்றால் அங்கும் மரம்தான். தாய் என்றால் அங்கும் தாய்தான். காற்று என்ற சொல்லின் தமிழ் வேர் கால் என்பது. கால்+து = காற்று என்று ஆகிறது. அதனால் காற்றுக்குரிய கடவுளரின் ஊருக்கு திருக்காலத்தி (காளஸ்தி) என்று பெயர். அந்தச் சொல் கன்னடத்தில் காலி தான். நாம் இங்கே மயிர் என்று சொல்லும் சொல்லைக்கூட கன்னடத்தில் இலக்கியச் செழுமையோடு 'கூ(ந்)தலு' என்கிறார்கள். மல்லிகை, முல்லை, ஆறு போன்ற சொற்கள் கன்னடத்தில் மாற்றமே இல்லாமல் வழங்கப்படுகின்றன.தமிழுக்கும் கன்னடத்திற்குமுள்ள நெருங்கிய தொடர்பு வியக்கச் செய்யும்.- மகுடேசுவரன்