தமிழே அமுதே - கண்வளர்வாய் என்பது என்ன?
உள்ளதை உள்ளவாறே சொல்வது ஒரு வகை. உள்ளதை அதன் கெடுதல் மறைத்துக் கூறுவது இன்னொரு வகை. கொடுமை, கடுமை, தகாமை (ஒவ்வாமை) முதலானவற்றை மட்டுப்படுத்தி, வேறு சொற்களில் சொல்வது.ஒருவர் இறந்துவிட்டார் எனில், அதைச் சொல்வதற்குப் பல சொற்கள் இருக்கின்றன. செத்தார், இறந்தார், மாண்டார் என்று சொல்லலாம். ஆனால், அப்படிச் சொல்வதில்லை. அத்தகைய சொற்கள் ஒருவரை வருத்தக்கூடும். அதனால் அதனை வேறு முறையில் சொல்கிறோம். காலமானார், இயற்கை எய்தினார், இறைவன் திருவடி அடைந்தார் என்று சொல்வது வழக்கம். கேட்போர் நெஞ்சம் பதறாதபடி ஒன்றைச் சொல்வது, அந்த மொழியில் மேவி நிற்கும் உயர்பண்பு நிலையையே குறிக்கும்.மைக்கறுப்பு நிறத்தில் ஓர் ஆடு (இனம்) இருக்கிறது. அதைக் கறுப்பாடு என்று யாரும் சொல்வதில்லை. அதை 'வெள்ளாடு' என்றுதான் அழைக்கிறோம். குழந்தை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? ஒரு குழந்தையை எப்போதும் உயர்த்தியும் புகழ்ந்தும் கொஞ்சியும்தானே பேசத் தோன்றும்? குழந்தை தொட்டிலில் உறங்குகிறது. 'குழந்தையே தூங்குவாய், உறங்குவாய்!' என்று தாலாட்டுப் பாடுவது குறையாகத் தெரிகிறது. அதைக் 'கண்வளர்வாய்' என்கிறோம். பெரியவராக இருந்தால் 'கண்ணயர்ந்தார்' என்கிறோம்.உண்ணும் உணவு சோறு. அது தன் பதத்தில் இருந்து மாறிவிடுகிறது. 'சோறு கெட்டுப்போய்விட்டது' என்று உணவைத் தாழ்த்திச் சொல்லமுடியுமா?. சொல்ல மனம்வருவதில்லை. அதனால் 'சோறு குழைந்துவிட்டது' என்கிறோம்.உள்ளவரிடமிருந்து இல்லாதவர் பெற்றுக் கொள்வதுதானே கடன்? கடன் என்று சொல்வது பெரிய சொல்லாகத் தெரிகிறது. கடன் என்பது, இருப்பவர் கையிலிருந்து இல்லாதவர் கைக்கு மாற்றுவது. அதனால் 'கைம்மாற்று' என்கிறோம். “கைம்மாத்தாகப் பத்தாயிரம் வாங்கினேன்” என்று ஊர்ப்புறத்தில் சொல்வார்கள்.இலக்கியத்தில்கூட இவ்வாறு சொல்வது வழக்கம். ஒருவர் வறுமையுற்றார் என்று சொல்வது கொடுமைதான். இலக்கியத்தில் அதை, 'நல்கூர்ந்தார்' என்று சொல்வார்கள். 'நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வுபடும்' என்கிறார் வள்ளுவர். வறுமையை 'நல்குரவு' என்று அழைத்தனர். திருக்குறளில் அத்தலைப்பிலேயே ஓர் அதிகாரம் உண்டு.தமிழில் ஒன்றைச் சொல்வதற்கு எத்தனை வழிகளை வகுத்துள்ளனர், பாருங்கள்!- மகுடேசுவரன்