கொத்தும் பறவை..!
மரம் கொத்தி (உட்பெக்கர் - woodpecker) பறவை மரத்தைக் கொத்தாமல் இருந்திருந்தால்? அதுக்கு வேறு ஏதாவது பெயர் வைத்திருப்போம். அது கிடக்கட்டும்... இப்போதைக்கு, அது ஏன் மரத்தைக் கொத்துகிறது, அதன் இயல்புகள் என்ன என்பது பற்றித் தெரிந்து கொள்ளலாம். மரப்பட்டைகளில் உள்ள குட்டிக் குட்டிப் பூச்சிகளை சாப்பிடுவதற்காகத்தான் அது மரத்தைக் கொத்துகிறது. அதற்கு ஏற்றாற்போல் அதன் அலகு உறுதியானதாக அமைந்திருக்கிறது. மரத்தைக் குடைந்து பொந்து ஏற்படுத்தி அதில் இந்த பறவைகள் வசிக்கின்றன. விதை, பூச்சி, பழங்களை உணவாக எடுத்துக்கொள்கின்றன. பூச்சியை பிடிப்பதற்கு ஏற்றாற் போல் நாக்கு நீளும் தன்மை கொண்டது. பசையுள்ளது. மரங்கொத்திகள், மரப் பொந்துகளில் முட்டையிடுகின்றன. சுமார் இரண்டு வாரங்கள் அடை காத்தலுக்குப் பிறகு குஞ்சுகள் வெளிவருகின்றன. குஞ்சுகளைப் பாதுகாக்க தாய் அல்லது தந்தைப் பறவை மரத்திலேயே காவல் இருக்கும். ஒரு பறவை மட்டுமே இரைத் தேடிச் செல்லும். சுமார் 25 முதல் 30 நாட்களில் குஞ்சுகள் இறக்கை முளைத்துப் பறக்கும்.ஒரு சிற்பியின் சிரத்தையோடு மரத்தை செதுக்கும் மரங்கொத்திப் பறவையின் வாழ்க்கை ஆச்சர்யங்கள் நிறைந்தது இல்லையா!20 முறை ஒரு விநாடிக்கு கொத்தும்.180 வகைகள் உலகம் முழுக்க இருக்கின்றன.