உப்பின் நிறம் கருப்பு!
'உங்க உப்பில் நிறம் இருக்கா?' என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? உப்பின் நிறம் வெள்ளைதான். ஆனால், கருப்பு உப்பும் இருக்கிறது. இது, பாறையிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. வெள்ளை உப்பில் இருப்பதைப் போல கருப்பு உப்பிலும் சோடியம் குளோரைடுதான் (Sodium Chloride) இருக்கிறது. கடல் உப்பைவிட இதில் சோடியம் குறைவு. வட இந்தியர்கள் கருப்பு நிற உப்பை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். இளம் சிவப்பு நிறத்திலும் கருப்பு உப்பு இருக்கிறது. கருப்பு உப்பில் சோடியத்தின் அளவு குறைவாக இருப்பதால் செரிமானம், ரத்த அழுத்தத்தை சீராக வைத்தல் போன்றவற்றுக்காக இதைப் பயன்படுத்துகின்றனர். வெள்ளையோ, கருப்போ எந்த உப்பு என்றாலும் அளவோடு பயன்படுத்துவதே நல்லது.