உலகின் மிகவும் பழமையான ஓவியம்
எழுத்தறிவு இல்லாத மனிதன் வாழ்ந்த காலத்தை, வரலாற்றுக்கு முந்தைய காலம் (Pre-Historic Period) என்பர். இக்காலத்தில் மனிதன் காடுகளில் உலவி, உணவிற்காக மிருகங்களை வேட்டையாடினான். இரவு நேரங்களில் இயற்கையாக அமைந்த குகைகளில் வாழத் தொடங்கினான்.அவ்வாறு தங்கி இருந்த பொழுதுதான், தான் கண்ட காட்சிகள், வேட்டையாடிய மிருகங்களின் உருவங்களை குகைகளின் சுவர்களில் ஓவியமாகத் தீட்டினான்.வண்ணக் கற்களால் ஆன பொடிகள், செடி கொடிகளில் இருந்து பெறப்பட்ட சாயங்கள், மிருகக் கொழுப்பு ஆகியவற்றைக் கொண்டு பாறைகளில் ஓவியங்கள் வரைந்தான். இத்தகைய வரலாற்றுக்கு முந்தைய ஓவியங்கள் தமிழ்நாட்டில் நீலகிரி, தருமபுரி, விழுப்புரம், மதுரை போன்ற மாவட்டங்களில் உள்ள மலைக்குகைகளில் காணப்படுகின்றன. பொதுவாக, இந்த வகை ஓவியங்கள் செங்காவி நிறத்திலும், வெண்மை நிறத்திலும் தீட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் காணப்படும் இந்த ஓவியங்கள் வரலாற்றுக்கு (எழுத்து கண்டுபிடிப்பதற்கு முன்) முந்தைய காலத்தின் ஒரு பிரிவான, புதிய கற்காலத்தைச் சேர்ந்தவை (கி.மு.பத்தாயிரம் முதல் நாலாயிரத்து ஐநூறு வரை). 2019இல் இந்தோனேஷியாவில் சுலவேசி (Sulawesi) என்னும் ஊரில், ஒரு குகை ஓவியம் கண்டறியப்பட்டது. மிருகங்களை மனிதர்கள் வேட்டையாடுவதுபோல் இந்த ஓவியம் உள்ளது. இதன் காலம் 43,900 ஆண்டுகள். இதுவே உலகின் பழமையான ஓவியமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இதற்கு முன் ஐரோப்பிய நாடுகளில் கிடைத்த பாறை ஓவியங்கள்தான் பழமையானவை என்று நம்பப்பட்டு வந்தது. அந்தக் கருத்தை இந்தோனேஷிய ஓவியம் மாற்றியுள்ளது. சுலவேசி சித்திரம்போல், மேலும் 242 சித்திரங்கள் அந்நாட்டுக் குகைகளில் கண்டறியப்பட்டுள்ளன. நாற்பத்தி நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மனிதர்கள் கதை சொல்லும் திறமை படைத்தவர்களாகவும் மத நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர் என்பதை, அந்த நாட்டு ஓவியங்கள் நிரூபிப்பதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்தியாவின் பீம்பேட்கா குகை ஓவியங்கள் 30,000 ஆண்டுகள் பழமையானவை என்பது குறிப்பிடத்தக்கது.- கி.ஸ்ரீதரன்