உள்ளூர் செய்திகள்

பெர்முடா முக்கோணத்தில் மர்மம் ஒன்றுமில்லை

வடக்கு அமெரிக்காவுக்கு கிழக்கே, பனாமா கால்வாய்க்கு அருகில் அமைந்துள்ளது பெர்முடா தீவு. அதை ஒட்டி இருக்கும் மர்மமான பிரதேசத்துக்கு வைக்கப்பட்ட பெயர்தான் பெர்முடா முக்கோணம். இதை, 'சாத்தானின் முக்கோணம்' என்றும் மக்கள் அழைக்கிறார்கள். அதற்குக் காரணம், அந்தக் கடல் பகுதியில் செல்லும் விமானங்கள், கப்பல்கள் எல்லாம் மாயமாக மறைந்து போவதுதான். பெர்முடா முக்கோணத்தின் அருகே செல்லும்போது, திசைகாட்டிகள் செயலிழக்கின்றன என்று முதன்முறையாகக் கண்டறிந்து கூறியவர் கொலம்பஸ். ஆயினும், இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் என்னவென்று உறுதியாகக் கண்டுபிடிக்க முடியவில்லை.இந்நிலையில், பெர்முடாவில் நிகழும் மர்மங்களுக்கு, எந்த அமானுஷ்ய சக்தியும் காரணமில்லை என்று, ஆஸ்திரேலியா நாட்டின் விஞ்ஞானி கார்ல் குரூசல்நிக்கி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'பெர்முடா, புளோரிடா, போர்ட்டோ ரிக்கோ பகுதிகளுக்கு இடையே, ஏராளமான விமானங்களும், கப்பல்களும் காணாமல் போயுள்ளன. இதற்கு, மூழ்கிப்போன அட்லான்டிஸ் நகரின் மாய ஈர்ப்பு சக்தியே காரணம் என்று மக்கள் கூறுகிறார்கள். ஆனால், இது தவறு. ஆய்வு செய்தால், மோசமான வானிலையும், மனிதத் தவறுகளும்தான் அந்த விபத்துகளுக்குக் காரணம் என்பதை உணர முடியும். இந்தப் பகுதி, உலகின் மிகவும் பணக்கார நாடான அமெரிக்காவுக்கு அருகே உள்ளது. அதனால், இங்கே பறக்கும் விமானங்களின் எண்ணிக்கை மிக அதிகம்.மேலும், மிகப்பெரும் கடற்பகுதி என்பதால், இங்கே காணாமல் போன விமானங்களின் பாகங்களோ, சிதைவுகளோ கிடைப்பதில்லை. கடலின் ஆழமும் அகலமும் அதிகம் என்பதால், விமானங்களின் சிதைந்த பாகங்கள் கிடைக்காமல் போவதில் ஆச்சரியமில்லை.உலகில் அதிகமாக போக்குவரத்து உள்ள பகுதியில் எந்த அளவுக்கு விபத்துகள் நிகழுமோ, அதே அளவுக்குத்தான் 7,00,000 சதுர கிலோ மீட்டர் உள்ள பெர்முடா முக்கோணப் பகுதியிலும் நிகழ்ந்துள்ளன. இதில், அதிக வித்தியாசம் இல்லை' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !