நான் படிக்கும் செய்தி இதுதான்!
அச்சில் எழுத்தை வாசிக்கும் எவரையும் அது, மனத்துக்குள் காட்சிகளாக விரிந்து, கற்பனாசக்தியை ஊற்றெடுக்க வைக்கும். காட்சி ஊடகங்கள் வந்துவிட்டாலும், நாளிதழ்களில் ஒரு செய்தியைப் படிக்கும் அனுபவம் கிடைக்காது. ஒரு நாளிதழில் நீங்கள் முதலில் படிக்கும் பகுதி என்ன? ஏன்? என்று கேட்டிருந்தோம். சென்னை, மடிப்பாக்கம், சாய்ராம் சி.பி.எஸ்.இ. வித்யாலயா மாணவர்களை நேரில் சந்தித்தோம். அவர்களில் கருத்துகள் இதோ:செ. ஆருத்ரா: (9ஆம் வகுப்பு)நான் முதலில் வணிகப் பக்கம் படிப்பேன். எரிபொருள் விலை உயர்வு, தங்கம் விலை பற்றி எல்லாம் அறிந்துகொள்ள முடியும். தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, சரிவு பற்றி எல்லாம், இப்பக்கத்தைப் படிப்பதினால் அப்டேட்டாக இருக்கமுடிகிறது. நாட்டின் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பவை இவைதானே?மு. அக் ஷயா: (11ஆம் வகுப்பு)உயர்கல்வி, வேலைவாய்ப்பு பற்றித்தான் முதலில் படிப்பேன். நுழைவுத்தேர்வுகள் பற்றியும் படிப்பேன். நாளிதழ்களில் படிப்புக்கு தொடர்புடைய வலைப்பக்க முகவரி கொடுப்பாங்க. அதை எல்லாம் குறித்துக்கொண்டு, அப்புறம் அத்தளங்களை போய்ப் பார்ப்பேன். சி. பிரகல்பாஸ்ரீ: (8ஆம் வகுப்பு)நினைத்த நேரத்தில் நிதானமாக படிக்க நாளிதழ்கள் தான் உதவுகின்றன. நம் வேலைகளை முடித்துவிட்டு, பரபரப்பில்லாமல் படிக்கலாம். நான் தேசியச் செய்திகளை முதலில் படிப்பேன். இதன் மூலம் தமிழ்நாடு மட்டுமல்லாது அண்டை மாநிலங்களின் நிலையையும் அறிந்துகொள்ள முடிகிறது. விலைவாசி உயர்வு, மக்களின் போராட்டம், இவைபற்றி பிரதமரின் அறிக்கை என எல்லாவற்றையும் கூர்ந்து படித்து வருகிறேன். நம் நாடு பற்றி தெளிவான சித்திரம் கிடைக்கிறது. தா. சுனித்: (11ஆம் வகுப்பு)தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் செய்திகளைத் தேடிப் படிப்பேன். இன்னிக்கு நம்ம நாட்டில் அரசியலிலும், பொருளாதாரத்திலும் குழப்பமான நிலையே நிலவுகிறது. இச்சமயத்தில் துன்பப்படும் ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் தொண்டு நிறுவனக்கள், அமைப்புகள் பற்றிய செய்திகளே எனக்குத் தூண்டுகோலாக இருக்கிறது. இறைவனைக் காண, சகமனிதனுக்கு உதவினால் போதும்னு சுவாமி விவேகானந்தர் சொல்லி இருக்கார். பெரிய ஆளாகி நானும் இதுபோல பலருக்கும் நிச்சயம் உதவுவதற்காக இப்போதே அச்செய்திகளை படிக்கிறேன்.மு.பெ. சச்சின்: (9ஆம் வகுப்பு)நான் பொது அறிவும் துணுக்குச்செய்திகளும் தான் முதலில் படிப்பேன். ஐ.ஏ.எஸ். மாதிரி போட்டித்தேர்வுகளுக்கு இவையெல்லாம் பயன்படும். அதனால் விடாமல் படிக்கிறேன்.பா. சுனில்குமார்: (11ஆம் வகுப்பு)நான் முதலில் தொழில்நுட்பப் பகுதியை விரும்பிப் படிப்பேன். புதிய கண்டுபிடிப்புகள் பற்றி தெரிந்துகொள்ள முடிகிறது. பல்லுக்குள் வைத்துக்கொள்ளக்கூடிய மைக் எல்லாம் வந்துடுச்சுன்னு படிச்சுத்தான் தெரிஞ்சுகிட்டேன். புதுமொபைல் வரும்போது அதில் உள்ள வசதிகள் பற்றி நாளிதழ்களில்தான் விரிவாக எழுதுவாங்க.