நீர் வனம்!
மலைகளில் ஓங்கி உயர்ந்து நிற்கும் மரங்கள் எப்போதுமே அழகு. அடர்ந்து கிளைபரப்பி ஆயிரம் ரகசியங்களை தம்முள் வைத்திருக்கும். அதே காடு நீருக்குள் நிற்கும் பொழுது கூடுதல் அழகையும், கவனத்தையும் பெறும். அப்படி அழகு பெற்ற காடுதான் பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு. * பிச்சாவரம் காடு கடலூர் மாவட்டம் 'கிள்ளை' என்னும் ஊரில் அமைந்திருக்கிறது.* சிதம்பரம் நகரில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள பிச்சாவரத்துக்கு, பேருந்தில் செல்ல கட்டணம் பத்து ரூபாய்.* சென்னை, புதுவை, கடலூர் மார்க்கமாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் சிதம்பரத்துக்கு வராமல் பி.முட்லூர் அருகே பிரியும் புறவழிச்சாலை வழியாக பிச்சாவரத்துக்கு செல்லலாம்.* அங்கு செல்வதற்கு முன் அந்த இடத்தின் சிறப்பைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் இருக்கும் நிலம் சதுப்பு நிலம்.* பிச்சாவரம் காடு கடலை ஒட்டி அமைந்திருக்கிறது. * இந்தக் காட்டில் சுரபுன்னை மரங்கள் அடர்ந்திருக்கின்றன. இம்மரத்தின் காய்கள் முருங்கைக்காய் மாதிரி நீண்டிருக்கும்.* இந்தக் காய்கள் சேற்றில் விழுந்து செடியாகி, சில ஆண்டுகளில் மரமாக வளர்ந்து விடும். * பழுத்த இலைகள் நீரில் விழுந்து அழுகி, உணவாகக் கிடைப்பதால், இங்கு மீன், இறால்கள் அதிக அளவில் கிடைக்கின்றன.* உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பறவைகள் இங்கு வலசை வருகின்றன. * பிச்சாவரம் வனப்பகுதியைச் சுற்றிப் பார்க்க, அரசு சார்பில் படகு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.* மோட்டார் படகில் ஆறு நபர்களுக்கு 2,800 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வனப்பகுதிக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ள கால்வாய் வழியாக, இந்தப் படகு45 நிமிடங்களில் வனத்தைச் சுற்றி வரும்.* துடுப்பு படகில் பயணிக்க நபர் ஒருவருக்கு 75 ரூபாய் கட்டணம். இதில் பயணிக்க ஒரு மணி நேரம் ஆகும். ஒரு படகில் ஐந்து பேர் பயணிக்கலாம்.* காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை படகு சவாரிக்கு அனுமதி உண்டு.* காட்டின் ஒட்டுமொத்த அழகையும் ரசிக்க, கரையில் கண்காணிப்பு கோபுரம், நவீன மைக்ரோஸ்கோப் வைக்கப்பட்டுள்ளன.* உணவகம், பயணிகள் காத்திருப்பு அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், விளையாட்டு பூங்கா என, பல்வேறு வசதிகளும் சுற்றுலாத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.