நிகண்டுகள் எதற்காக?
சங்க இலக்கியங்கள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா போன்ற பாடல்களால் ஆனது. பாடல்களில் உள்ள பழந்தமிழ்ச் சொற்களுக்கு பொருள் கண்டறிவது கடினமாக இருந்தது. இக்குறையை நீக்கச் சான்றோர்கள் சொற்களுக்குப் பொருள் அமைத்தனர். அவ்வாறு பொருள் கூறிய தொகுப்பு நூலை நிகண்டு என்னும் பெயரில் அழைத்தனர். இதன் வளர்ச்சி நிலையாக இன்று அகராதிகளும், கலைக்களஞ்சியங்களும் தோன்றியுள்ளன. நிகண்டுகள் நூற்பா (பாடல்) வடிவில் அமைந்திருந்தன. மாணவர் பாடல்களை நினைவில் வைத்துக்கொண்டு, சொற்களுக்குப் பொருள் தெரிந்து கொண்டனர். சேந்தன் என்னும் குறுநில மன்னனின் துணையோடு திவாகரர் என்னும் சமணப்புலவரால் ஆக்கப்பட்டது 'சேந்தன் திவாகரம்' என்னும் நிகண்டு. இதனை ஆதி நிகண்டு அல்லது முதல் நிகண்டு என குறிப்பிடுவர். இரண்டாவது நிகண்டு பிங்கலந்தையாரால் ஆக்கப்பட்ட பிங்கல நிகண்டு. இது பிங்கலந்தை என்றும் அழைக்கப்படுகிறது. மூன்றாவது நிகண்டு, மண்டல புருடரால் ஆக்கப்பட்ட சூடாமணி நிகண்டு. இம்மூன்று நிகண்டுகளும், நிகண்டுகள் வரலாற்றில் முக்கியத்துவம் பெறுவன. பின்னர் பல நிகண்டுகள் தோன்றி அகராதிகளாக, கலைக்களஞ்சியங்களாக வளர்ச்சி பெற்றுள்ளன. நிகண்டை நாள்தோறும் கற்றால், இலக்கியங்களில் உள்ள கடினமான சொற்களை எளிதில் அறியலாம். முதல் நிகண்டு: சேந்தன் திவாகரம் காலம்: 9ஆம் நூற்றாண்டு இரண்டாவது: பிங்கலந்தை நிகண்டு காலம்: 10ஆம் நூற்றாண்டுமூன்றாவது: சூடாமணி நிகண்டுகாலம்: 16ஆம் நூற்றாண்டு - ம.ஏ. கிருஷ்ணகுமார்