உள்ளூர் செய்திகள்

தலைப்புகள் என்ன சொல்கின்றன?

'நேற்றைக்கு ஒரு நல்ல கதை படித்தேன். அருமையாக இருந்தது' என்கிறான் உங்கள் பள்ளித்தோழன்.இதைக்கேட்டதும், உங்களுக்கும் அந்தக் கதையைப் படிக்கவேண்டும் என்று ஆவல் ஏற்படுகிறது, 'எந்தக் கதை? என்ன தலைப்பு?' என்று கேட்கிறீர்கள். உங்கள் நண்பன் அந்தக் கதையின் தலைப்பைச் சொல்கிறான்.'அட, அந்தக் கதையா? நானும் படித்துவிட்டேன். விறுவிறுப்பான திருப்பங்கள், பிரமாதமான வசனங்கள்' என்று நீங்களும் பாராட்டுகிறீர்கள்.சில நிமிடங்களுக்குமுன் உங்கள் நண்பன் அந்தக் கதையைப் புகழ்ந்தபோது, உங்களுக்கு அதைப்பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. இப்போதோ, நீங்களும் அதைப் புகழ்கிறீர்கள். இரண்டுக்கும் நடுவே நடந்தது ஒரே ஒரு விஷயம்தான்: அந்தக் கதையின் தலைப்பு உங்களுக்குத் தெரிந்துவிட்டது. உடனே கதையைத் தெரிந்துகொண்டுவிட்டீர்கள். அதைப்பற்றிப் பேசத் தொடங்கிவிட்டீர்கள்.எந்தவொரு படைப்புக்கும் தலைப்பு என்பது ஓர் அடையாளமாக அமைகிறது. உங்களுக்கென்று ஒரு பெயர் உள்ளதல்லவா, அதைப்போல.ஆனால், உலகில் ஒரே பெயரில் பலர் இருப்பார்களே.உண்மைதான். ஒரே பெயரில் பல கதைகள், கவிதைகள் எழுதப்படுவதும் உண்டு. ஆனால், பெரும்பாலான படைப்புகளுக்குத் தனித்துவமான பெயர்கள் இருக்கும். அவற்றைக் கேட்டவுடன் அந்தப் படைப்பு எது என்று புரிந்துவிடும்.இதனால், ஒவ்வொரு படைப்பாளியும் தன்னுடைய படைப்புகளுக்குச் சிறந்த பெயர்களைச் சிந்தித்துச் சூட்டுகிறார். அபூர்வமாகச் சில நேரங்களில் மட்டுமே பெயரில்லாத படைப்புகள் (பெரும்பாலும் கவிதைகள்) எழுதப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, சங்க இலக்கியப் படைப்புகள் பலவற்றுக்குப் பெயர் கிடையாது. அதனால் அவற்றின் சுவை குறைந்துவிட்டதா என்ன?அதேசமயம், நல்ல படைப்புக்கு ஒரு நல்ல பெயரும் சூட்டப்பட்டிருந்தால் அதன் சுவை இன்னும் கூடும். எடுத்துக்காட்டாக, 'நெடுநல்வாடை' (நீண்ட, நல்ல வாடைக்காற்று) என்ற சங்க இலக்கியப் படைப்பின் பெயரே தனி அழகு.பல நேரங்களில், தலைப்பு என்பது அந்தப் படைப்பின் தன்மையைச் சுருக்கமாகச் சொல்வதாக அமைந்துவிடுகிறது. எடுத்துக்காட்டாக, 'தமிழின் பெருமை' என்று ஒரு கட்டுரைக்குத் தலைப்பு வைக்கப்பட்டிருந்தால், அந்தக் கட்டுரையில் என்ன எதிர்பார்க்கலாம் என்று நாம் புரிந்துகொள்கிறோம்; ஆவலுடன் உள்ளே செல்கிறோம்.அதேசமயம், தலைப்பில் எல்லாவற்றையும் சொல்லிவிடக்கூடாது. அப்போது யாருக்கும் படைப்பை வாசிக்கவேண்டும் என்கிற ஆவலே இருக்காது. ஒரு சிறு அறிமுகத்தைக் கொடுத்து வாசகர்களைக் கவர்ந்திழுப்பதே தலைப்பின் நோக்கம்.எது முதலில் வரவேண்டும்: படைப்பா? அல்லது தலைப்பா?இந்தக் கேள்விக்கு வெவ்வேறு படைப்பாளிகள் வெவ்வேறுவிதமாகப் பதில் சொல்கிறார்கள். நன்கு சிந்தித்து ஓர் அருமையான தலைப்பை வைத்துவிட்டுப் படைப்பைத் தொடங்குகிறவர்கள் உண்டு. படைப்பை எழுதியபின் என்ன தலைப்பு வைக்கலாம் என்று சிந்திக்கிறவர்களும் உண்டு. சில நேரங்களில், படைப்பாளி வைக்கிற பெயரைப் பத்திரிகை ஆசிரியரோ பதிப்பாளரோ மாற்றுவதும் உண்டு.உங்கள் பாடப்புத்தகம் அல்லது ஒரு வார இதழை எடுத்துக்கொள்ளுங்கள். அதிலிருக்கும் படைப்புகளையும், அவற்றின் தலைப்புகளையும் கவனியுங்கள். எந்தெந்தத் தலைப்புகள் பொருத்தமாக இருக்கின்றன, உங்களைக் கவர்கின்றன என்று சிந்தியுங்கள். சில படைப்புகளுக்கு நீங்களே வேறு பெயர்களைச் சூட்டிப்பாருங்கள். இது ஒரு சுவையான விளையாட்டு.படைப்புகளுக்குப் பொருத்தமான, நெஞ்சில் நிற்கும் பெயர்களைச் சூட்டுவதும் ஒரு கலைதான்!- என். சொக்கன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !