காலாவதியான மருந்துகளை என்ன செய்வது?
உலகம் முழுவதும் காலாவதியான மருந்துகளை அப்புறப்படுத்துவதில் மக்களிடையே ஓர் அலட்சியப் போக்கு காணப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், காலாவதியான மருந்துகளை குப்பைகளுடன் சேர்க்காமல், கவனமாக வெளியேற்றுவார்கள். இதுபோன்ற மருந்துகள் நிலத்தில் சேகரமானால், அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.காலாவதியான ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் குப்பைகளாகச் சேகரமானால், இவை 'சூப்பர்பக்ஸ்' (Superbugs) எனப்படும் பாக்டீரியாவின் வளர்ச்சியை அதிகரிக்கும். பாக்டீரியா போன்ற நுண்ணுயிர் தொற்றுகளால் பாதிப்பு ஏற்பட்டால், அதற்காக நாம் ஆன்ட்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்துவோம் அல்லவா? சூப்பர்பக்ஸ் பாக்டீரியாவால் உடல் பாதிக்கப்பட்டால், அதன் பிறகு நாம் ஆன்ட்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்தினாலும், அவை வேலை செய்யாது.இப்படி நோய்க்கிருமிகளைத் தடுக்கும் திறன் இல்லாமல் போவதால், உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் ஏழு லட்சம் மக்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இறப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.இந்தியாவில் பயன்படுத்தாத மருந்துகளைக் குப்பையில் போடுவதால் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே உணர்ந்தது கேரள மாநிலம்தான். இம்மாநில அரசு, இதற்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் சில நடவடிக்கைகளைச் செயற்படுத்தியது. அதன்படி, கேரளத்தின் மருந்துக் கட்டுப்பாட்டுப் பிரிவும் (Kerala's State Drug Control Department) அனைந்திந்திய கேரள மருந்து அமைப்பும் (All Kerala Chemists and Druggists Association) ஒருங்கிணைந்து பணியாற்றின.இதற்கான செயற்திட்டத்தை வகுத்து, புரோகிராம் ஆன் ரிமூவல் ஆஃப் அன்யூஸ்டு டிரக்ஸ் (Program on Removal of Unused Drugs - PROUD), என்கிற பெயரில் ஒரு விழிப்புணர்வுத் திட்டத்தைத் தொடங்கின. இதன்படி, திருவனந்தபுரத்தில் உள்ள குறிப்பிட்ட மருந்துக் கடைகள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் அங்காடிகளில் காலாவதியான மருந்துகளைப் போடுவதற்கென்றே பெட்டி போன்ற மூடிய அமைப்புகள் (KIosks) வைக்கப்பட்டன. பின்னர், இதில் சேகரமான பழைய மருந்துகள் மங்களூருவில் இருக்கும் பயோமெடிக்கல் கழிவுகளைக் கையாளும் மையம் ஒன்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. கடந்த அக்டோபர் மாதம் வரை சுமார் ஐந்து டன் பழைய மருந்துகள் இவ்விதம் சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. இதுபோன்ற அமைப்புகள் இந்தியா முழுவதும் செயற்பட்டால், சூப்பர்பக்ஸ் நோய்த்தொற்றில் இருந்து எளிதில் தப்பலாம். அதேபோல் மக்களும் மருந்துக் குப்பைகளைத் தனியாக ஒரு பையில் போட்டு வைத்து வெளியேற்றும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.